Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும்

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு - ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும் | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars

   Posted On :  27.07.2022 08:39 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும்

(அ) பிரெஞ்சு இந்தோ - சீனா

ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும்


(அ) பிரெஞ்சு இந்தோ - சீனா

காலனிய எதிர்ப்புணர்வின் எழுச்சி

1887இல் பிரான்சால் கைப்பற்றப்பட்டதிலிருந்து இந்தோ-சீனா (இன்றைய கம்போடியா, லாவோஸ், வியட்நாம்) தனது எதிர்ப்பைக்காட்டி வந்தது. இந்தோ-சீனர்கள் பிரெஞ்சு மொழியும் பண்பாடும் தங்கள் மீது திணிக்கப்படுவதை எதிர்த்தபோதும் புரட்சி பற்றிய சிந்தனைகளை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர். முதல் உலகப்போரின் போது ஒரு லட்சம் இந்தோ - சீனர்கள் பிரான்சில் போரிட்டனர். போரின்போது பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு போரிட்டனர், எவ்வாறு துன்புற்றனர் என்பது குறித்த நேரடி அனுபவ அறிவோடு திரும்பினர். மேலும் சீனத் தலைநிலப்பகுதியிலிருந்து பரவிய கம்யூனிசச் சிந்தனைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியதிலிருந்து இந்தோ-சீனாவின் கணிசமான செல்வம் காலனியாதிக்க சக்திக்கே பயன்படுவதை பலர் உணர்ந்தனர்.

காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் காலனிகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்.

வியட் மின் கட்சியின் உதயம்

இந்தோ - சீனாவில் இருந்த அரசியல் கட்சிகளில் வியட்நாம் தேசியக் கட்சியே முக்கியமானது. 1927இல் உருவாக்கப்பட்ட இக்கட்சி மக்கள் தொகையில் பணக்காரர்களையும் நடுத்தரப்பிரிவு மக்களையும் கொண்டிருந்தது 1929இல் வியட்நாம் வீரர்கள் இராணுவப்புரட்சி செய்தனர். பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது. இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை பயங்கரவாதம் (White Terror)’ என்பது அரங்கேறியது. புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.


ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார். தனது 21 ஆவது வயதில் அவர் ஐரோப்பா சென்றார். லண்டன் உணவுவிடுதியொன்றில் சமையல்கலைஞராய்ப் பணியாற்றியபின் அவர் பாரிஸ் சென்றார். பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக "விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது. 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

வெள்ளை பயங்கரவாதத்திற்குப் பின்னர் ஹோ சி மின் மாஸ்கோ சென்றார். 1930களை மாஸ்கோவிலும் சீனாவிலும் கழித்தார். இரண்டாவது உலகப்போரின் தொடக்கத்தில் பிரான்ஸ் ஜெர்மனியால் 1940இல் தோற்கடிக்கப்பட்டது. ஹோ சி மின்னும் அவருடைய தோழர்களும் இச்சூழலைப் பயன்படுத்தி வியட்நாமின் விடுதலையை முன்னெடுத்தனர். 1941 ஜனவரி திங்கள் எல்லையைக் கடந்து வியட்நாம் வந்த அவர்கள் வியட்நாம் விடுதலை சங்கம் அல்லது வியட்மின் எனும் அமைப்பை நிறுவினர். இது தனித்தன்மை வாய்ந்த வியட்நாமிய தேசியத்திற்குப் புதிய அழுத்தத்தைக் கொடுத்தது.


(ஆ) இந்தியாவில் காலனியாதிக்க நீக்கம்

மாகாணங்களில் இரட்டையாட்சி

இந்தியாவில் காலனிய நீக்கச்செயல்பாடானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1905இல் சுதேசி இயக்கத்தோடுத் துவங்கியது. முதல் உலகப்போரானது விரைவான அரசியல் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. 1919இல் இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது. அச்சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபைகளுக்கும் மாற்று அதிகாரங்களின் பட்டியலின் கீழ்வரும் சிலதுறைகளை இந்திய அமைச்சர்களே நிர்வகிக்கவும் வழிவகை செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்க முடிவு செய்தது.

இந்தியாவைத் தொழில்மயமாக்குவதில் நடவடிக்கைக் குறைபாடுகள்

சர்க்கரை, சிமெண்ட், சில வேதியியல் பொருள்களுக்கு எதிர்மறையான பாகுபாட்டு மனப்பான்மையோடு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தவிர காலனியப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றமேதுமில்லை. ஆனால் உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வியும் வழங்குதல் புதிய துறைகள் தொடர்பாக முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது. ஆனால் ஆங்கிலேய நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.

பொருளாதாரப் பெருமந்தத்தின் போது இந்தியா

1929ஆம் ஆண்டுப் பொருளாதாரப் பெருமந்தம் ஆங்கிலேயே வணிகவர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்து பெருமந்தத்தின் தீயவிளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது. இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.

வரவுசெலவுக் கணக்குகளைச் சமன்படுத்தும் கொள்கையைப் பின்பற்ற இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டது. பெருமந்த காலத்தில் அந்நியநாட்டுச் செலாவணிகளை பெறும் பொருட்டு ஆங்கிலேய-இந்திய அரசு சுங்கவரிகளை அதிகரித்தது. நெருக்கடியான நேரங்களில் இங்கிலாந்திற்குத் தேவைப்பட்ட தங்கம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியானது. இந்தியக் காகிதப் பணத்தின் மதிப்பைக் கூட்டியதன் மூலம் ஆங்கிலேயர்கள் இறக்குமதியை மலிவாக்கினர். இந்திய அரசு பின்பற்றிய அந்நியச் செலாவணி மாற்றுக்கொள்கை காலனி அரசுக்கும் மக்களுக்குமிடையே பதற்றமான நிலையை ஏற்படுத்தியதோடு ஆங்கில அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.

இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்தியத் தாக்கம்

பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது. எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை பாதியாகக் குறைந்தது. ஆனால் விவசாயி, நிலத்திற்குக் கொடுக்க வேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை. விவசாய விளைபொருள்களின் விலையைப் பொறுத்தமட்டிலும் அரசுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பணம் இரண்டு மடங்காகிற்று. விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத் தூண்டியது. 1930களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு போராடும் குணம் மிக்க மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சி பெற்றது.

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

ஆங்கிலேயர்களுக்கு இந்திய தேசியவாதிகளைச் சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடே 1935 இந்திய அரசுச் சட்டம். இச்சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது. இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவைகளை கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டது.


Tags : World between Two World Wars | History இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு.
10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars : Anti-Colonial Movements and Decolonisation Processes in Asia World between Two World Wars | History in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் : ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்