அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அளவிடுதலில் துல்லியத்தன்மை | 8th Science : Chapter 1 : Measurement
அளவிடுதலில் துல்லியத்தன்மை
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து
ஆய்வுகளுக்கும் அளவீடுகள் அடிப்படையாக அமைகின்றன என்பதை நாம் பார்த்தோம்.
ஒவ்வொரு அளவீடும் சில நிலையற்றதன்மையைக் கொண்டுள்ளது. இந்த நிலையற்ற
தன்மையே 'பிழை' எனப்படுகிறது. சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்பிற்கும், உண்மையான மதிப்பிற்கும்
இடையே உள்ள வேறுபாடு 'பிழை' என வரையறுக்கப்படுகிறது.
அளவீடுகளை மேற்கொள்ளும்போது பிழைகள் குறைவாக இருக்கவேண்டும்.
மேலும், அளவிடப்படும் அளவு துல்லியமாகவும் நுட்பமாகவும் இருக்கவேண்டும். துல்லியம்
மற்றும் நுட்பம் ஆகிய இரண்டும் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், அவை இரண்டும் ஒன்றல்ல.
மூன்று நபர்களால் எய்யப்பட்ட அம்புகளை படத்தில் பார்க்கவும்.
முதல் படத்தில் மூன்று அம்புகளும் மையத்தை நோக்கி எய்யப்பட்டுள்ளன. இரண்டாவது படத்தில்
மூன்று அம்புகளும் ஒரே இடத்தில் எய்யப்பட்டுள்ளன. ஆனால், அவை மையத்தில் இல்லை. இப்படத்தின்
மூலம் முதலாவது நபர் துல்லியமாகவும், நுட்பமாகவும் இருப்பதைக் காணமுடியும். இரண்டாவது
நபர் நுட்பமாக இருக்கிறார்; ஆனால், துல்லியமாக இல்லை. ஆனால், மூன்றாவது நபர் துல்லியமாகவும்
இல்லை; நுட்பமாகவும் இல்லை
துல்லியத் தன்மை என்பது, கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான
மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. நுட்பம் என்பது,
மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக
அமைந்துள்ளன என்பதைக் குறிக்கிறது. அளவீடுகளை மேற்கொள்ளும்போது துல்லியத்தன்மையே விரும்பப்படுகிறது.
அளவிடப்பட்ட மதிப்பானது உண்மை மதிப்பிற்கு நெருக்கமாக இருக்க வேண்டும்.