இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - இயற்கணிதம் | 7th Maths : Term 2 Unit 3 : Algebra
இயல் 3
இயற்கணிதம்
கற்றல் நோக்கங்கள்
• அடுக்குக் குறி வடிவில் எண்களை விவரித்தல்.
• அடுக்குக் குறி விதிகளைப் புரிந்துகொள்ளுதல்
• அடுக்கு வடிவ எண்ணின் ஒன்றாம் இலக்கத்தைக் கண்டுபிடித்தல்.
• இயற்கணிதக் கோவையின் படி குறித்து அறிதல்.
அறிமுகம்
ஒவ்வொரு மாணவனிடமும் அவனுக்குத் தெரிந்த மிகப்பெரிய எண்ணைக் கூறுமாறு ஆசிரியர் கூறினார். அவர்களும் 'ஆயிரம்', 'இலட்சம்', 'மில்லியன்', 'கோடி' என்று அவரவர்களுக்குத் தெரிந்த பெரிய எண்களைக் கூறினர்.
இறுதியாக, 'ஆயிரம் இலட்சம் கோடி' என்ற எண்ணுடன் குமரன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அனைவரும் கைதட்டினர்.
ஆசிரியரும் குமரனைப் பாராட்ட அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
ஆனால், அந்த மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை; ஏனெனில், அவனது பெரிய எண்ணைக் கரும்பலகையில் எழுதுமாறு ஆசிரியர் கூறினார். மிக முயற்சி செய்து, பூச்சியங்களைப் பலமுறை எண்ணிப் பார்த்து, 1000000000000000 என்று எழுதினான். இது சரிதானா?
இப்போது, அந்த எண்ணின் வலப்பக்கத்தில் மேலும் 5 பூச்சியங்களை எழுதி, யாரேனும் அதனை வாசிக்குமாறு சவால் விடுத்தார். நிச்சயமாக, வகுப்பறைக்குள் ஆழ்ந்த அமைதியே நிலவியது.
மிக மிகப் பெரிய எண்களைப் பயன்படுத்துவது அத்தனை சுலபமில்லை; இல்லையா? ஆனால், உண்மையில் பெரிய எண்களை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். பின்வரும் உதாரணங்களிலிருந்து, அன்றாட வாழ்வில் பெரிய எண்களின் பயன்பாட்டை அறியலாம்.
• பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு 149600000000 மீ.
• பூமியின் நிறை 5970000000000000000000000 கி.கி.
• ஒளியின் வேகம் 299792000 மீ/வினாடி.
• சூரியக்கோளத்தின் தோராய ஆரம் 695000 கி.மீ.
• நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு 384467000 மீ.
இந்த எண்களைப் பயன்படுத்த எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் புரிந்துகொள்ள, முதலில் அடுக்குகள் குறித்து அறிதல் வேண்டும்.