இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - திருத்தச்சட்டங்களுக்கான நடைமுறைகள் , வழிமுறைகள் மற்றும் வகைகள் | 12th Political Science : Chapter 2 : Legislature
திருத்தச்சட்டங்களுக்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள்
இந்திய அரசமைப்பு, மாறும் காலச்சூழல் மற்றும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் இருக்கும்படியும், அதேசமயம் அடிப்படை கட்டமைப்பு மாறாவண்ணம் இருக்குமாறும் ஒரு தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது. உறுப்பு 368, அரசமைப்புச் திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடுகிறது. அந்த திருத்தச்சட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. அரசமைப்பு திருத்தச்சட்டத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் பின் வருமாறு:
1. அரசமைப்பிலுள்ள சில விதிகளில் திருத்தங்களை செய்ய, சிலவற்றை சேர்க்க, மாற்றியமைக்க அல்லது நீக்க, நாடாளுமன்றம் இந்த பிரிவில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி செயல்படலாம்.
2. அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒரு முன்வரைவாக சமர்ப்பிக்கப்பட்டு, தனித்தனியாக ஒவ்வொரு அவையிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவும், வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத பெரும்பான்மை ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்பட்டால், அது பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
3. அந்த முன்வரைவு ஒவ்வொரு அவையிலும் ஒரு சிறப்பு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும். மற்றும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். ஒவ்வொரு அவையும் தனித்தனியாக அந்த முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றுமென்றால் ஈரவைகளையும் இணைந்து நடத்துவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. ஒருவேளை முன்வரைவில் அரசமைப்பின் கூட்டாட்சி வகைமுறைகள் குறித்து ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில், பாதி மாநிலங்களின் தனிப்பெரும்பான்மை ஏற்படுத்தி அதாவது அத்தகைய சட்டமன்றங்களில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை.
4. நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் முறையாக நிறைவேற்றப்பட்டு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களால் உறுதிசெய்யப்பட்ட பிறகு அந்த முன்வரைவு ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அல்லது மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்புவது போன்றவற்றை குடியரசுத்தலைவரால் செய்ய இயலாது. குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அது சட்டமாகிறது. (அதாவது ஒரு அரசமைப்பு திருத்தச்சட்டம்) அரசமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் அந்த சட்டம் திருத்தமடைகிறது.
அரசமைப்பு திருத்தச் சட்டங்களை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்:
1. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை
2. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை, மற்றும்
3. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் சரிபாதி மாநிலச் சட்டமன்றங்களால் ஏற்புறுதி செய்யப்படுவது.
உறுப்பு 368-இன்படி அரசமைப்பின் பெரும் எண்ணிக்கையிலான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தின் ஈரவைகளில் தனிப்பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்படலாம். விதிமுறைகள், பின்வருவனவற்றில் உள்ளடக்கம் :
❖ புதிய மாநிலங்களை அனுமதிப்பது மற்றும் உருவாக்குவது. மேலும் தற்போது இருக்கும் மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது, அவற்றின் பெயர்களில் மாற்றங்கள் செய்வது.
❖ மாநிலங்களில் மேலவையை உருவாக்குவது அல்லது நீக்குவது.
❖ குடியரசுத்தலைவர், மாநில ஆளுநர், சபாநாயகர், நீதிபதிகள் போன்றோருக்கு அரசமைப்பு இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகளை நிர்ணயிப்பது.
❖ நாடாளுமன்றத்தில் அமர்விற்கு குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கையை முடிவு செய்வது.
❖ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் நிர்ணயிப்பது.
❖ நாடாளுமன்ற நடைமுறை விதிகளை உருவாக்குதல்.
❖ நாடாளுமன்றம், நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோரின் சிறப்பு உரிமைகள்.
❖ நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி பயன்பாடு.
❖ உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்தல்.
❖ உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் அதிக அதிகாரம் வழங்குதல்.
❖ அலுவல் ஆட்சி மொழியை பயன்படுத்துதல்.
❖ குடியுரிமை அளித்தல் மற்றும் ரத்து செய்தல் .
❖ நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள்.
❖ தொகுதிகளின் எல்லைகளை வரையறுத்தல்.
❖ ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி.
❖ ஐந்தாம் அட்டவணை-பட்டியலின மற்றும் பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல்.
❖ ஆறாம் அட்டவணை-பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல்.
அரசமைப்பின் பெரும்பாலான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை (அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக) மற்றும் ஒவ்வொரு அவையிலும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சமாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை. அவையின் மொத்த உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவது அவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையாகும்.
முன்வரைவின் மூன்றாவது வாசிப்பின் போது இந்த சிறப்பு பெரும்பான்மை தேவைப்படும்.
(i) அடிப்படை உரிமைகள்
(ii) அரசுக்கொள்கைகளை வழி நடத்தும் நெறிமுறைகள் மற்றும்
(iii) முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் குறிப்பிடப்படாத மற்ற விதிமுறைகள். இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது மேற்கண்ட வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.
குடியுரிமையின் கூட்டாட்சி அமைப்புடன் தொடர்புடைய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலச் சட்டமன்றங்களின் தனிப்பெரும்பான்மை ஒப்புதலுடன் திருத்தியமைக்கப்படலாம். மாநிலங்கள் முன்வரைவுக்கு தனது ஒப்புதலை அளிக்க எந்த விதமான கால வரையறையும் கிடையாது. இந்த வகையில் கீழ்கண்ட விதிமுறைகள் திருத்தி அமைக்கப்படலாம்.
❖ குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அதன் முறைகள்.
❖ மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம்.
❖ உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்கள்.
❖ மத்திய மற்றும் மாநிலங்களிக்கிடையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்.
❖ ஏழாவது அட்டவணையில் அடங்கியுள்ள எந்த ஒரு பட்டியலும்.
❖ நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.
❖ அரசமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளை திருத்தியமைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரம். (உறுப்பு -368)