Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | மாநிலச் சட்டமன்றம்: கட்டமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்

இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - மாநிலச் சட்டமன்றம்: கட்டமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் | 12th Political Science : Chapter 2 : Legislature

   Posted On :  02.04.2022 01:31 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்

மாநிலச் சட்டமன்றம்: கட்டமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்

அரசமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பில் மாநிலங்கள் இரண்டாவது அடுக்கில் இருக்கிறது.

மாநிலச் சட்டமன்ற கட்டமைப்பு

அரசமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பில் மாநிலங்கள் இரண்டாவது அடுக்கில் இருக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு தனி அரசமைப்பு இருப்பதால் அவற்றைத் தவிர மற்ற மாநிலங்களை ஆட்சி செய்யும் விதிமுறைகள் அரசமைப்பு VI பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 152-லிருந்து 237 வரையிலான மாநிலச் சட்டமன்றங்கள் குறித்து முழுமையாக விளக்குகிறது. மாநிலச் சட்டமன்றத்தில் மக்கள் மன்றமாக சட்டசபை மட்டுமே அமையப்பெற்றிருந்தால் அது சட்டபேரவை என்று அழைக்கப்படும்.

பெரும்பாலான அதிகாரங்களும் மற்றும் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட ஒன்றியச் சட்டமன்ற அமைப்பைப் போன்றதே. சட்டமன்றம் மாநிலச் சட்டசபை மற்றும் சட்ட மேலவை இரண்டையும் கொண்டிருக்கும்.



ஆளுநர்

மாநில நிர்வாகத்தின் அரசமைப்புத் தலைவராக ஆளுநர் இருப்பார். மற்றும் மாநிலத்தின் செயல் அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். மாநிலத்தில் அனைத்து செயல்திட்ட நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயராலேயே நடைபெற வேண்டும். மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார். ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியிலமர்த்தப்படுவார். அல்லது குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார்; அல்லது வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும்வரை பதவியில் இருப்பார். ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதி அவர் அவள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இலாபம் ஈட்டும் பதவி எதுவும் வகிக்கக் கூடாது. மேலும் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆளுநர் ஒரு முறைக்கு மேல் பதவியிலமர்த்தப்படலாம். அவசர தேவைக்காக (உடனடி) அல்லது ஒரு மாற்று ஏற்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவியில் இருக்கலாம்.


ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும்

ஒரு மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரைப் போலவே ஆட்சித்துறை, சட்டமன்றம், நீதித்துறை மற்றும் அவசரகால அதிகாரங்களைக் கொண்டிருப்பார். ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தில் அமைச்சரவை நியமனம், மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம், மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ-இந்திய இனத்திலிருந்து உறுப்பினர்களை நியமிப்பது போன்றவைகளும் அடங்கும். இலக்கியம், அறிவியல், கலை கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றில் சிறப்பு அறிவு படைத்தவர்களை மேலவை உறுப்பினர்களாக காலியாக இருக்கும் இடங்களில் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்.

மேலும் ஆளுநர் மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/6 பங்கு உறுப்பினர்களை நியமிக்கமுடியும். ஆளுநர் "தன் விருப்புரிமைக்கு" ஏற்ப சிறப்பு அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவர். அவ்வப்போது குடியரசுத்தலைவர் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவரது சிறப்பு கடமைகளை அதிகார பூர்வமாக நிறைவேற்றலாம். சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஆளுநர் அமைச்சரவை ஆலோசனைகள் இன்றி செயல்படலாம். மேலும் ஆளுநர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுகிறார். மாநிலத்தின் நிகழ்வுகளை ஆளுநர் உடனுக்குடன் குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பார்.

ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாவார். ஆளுநரின் சட்ட அதிகாரம் சட்டமன்றத்தில் உரையாற்றுதல், மற்றும் செய்திகள் அனுப்புதல், சட்டமன்றத்தை கூட்டுதல், கூட்டத்தொடரை ஒத்திவைத்தல் மற்றும் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்தல் ஆகியவையாகும். எந்த ஒரு முன்வரைவும் சட்டமாக இயற்றப்படுவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. ஆளுநரின் மறுப்புரிமை அதிகாரங்கள் பின்வருமாறு: 

1. அவர் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கலாம் அப்போது அது சட்டமாவது தவிர்க்கப்படும்

2. முன்வரைவைத் தவிர்த்து எந்த ஒரு முன்வரைவையும் மறு பரிசீலனைக்காக மாநிலச் சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பலாம். இதில் அவர்/அவள் மறுப்புரிமை அதிகாரத்தை இரண்டாவது முறை பயன்படுத்த முடியாது. மாநிலச் சட்டமன்றம் திருத்தியோ அல்லது திருத்தாமலோமீண்டும் அந்த முன்வரைவை நிறைவேற்றி திரும்ப அனுப்பும் பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிப்பதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை .

3. ஆளுநர், தேவை என்று கருதினால் ஒரு முன்வரைவை குடியரசுத்தலைவரின் கருத்துக்காக நிறுத்திவைக்கலாம்

ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் என்பது, மாநிலத்தின் செயலதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும் எந்த ஒரு சட்டத்தின் தொடர்பாகவும் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன்னிப்பளிப்பது, தண்டனையை நிறுத்தி வைப்பது, தாமதப்படுத்துவது, தண்டனையைக்குறைப்பது போன்றவையாகும். இருப்பினும், ஆளுநருக்கு மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்தும் அதிகாரம் கிடையாது. ஆனால் இந்த விவகாரத்தில் குடியரசுத்தலைவர் அவரிடம் ஆலோசிக்க வேண்டிய உரிமையைக் கொண்டவர். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தும் அதிகாரம் இந்தியக் குடியரசுத்தலைவர் அதிகாரத்தின் கீழ் வருகிறது.

குடியரசுத்தலைவருக்கு இருப்பதைப் போன்ற அவசரகால அதிகாரங்கள் ஆளுநருக்கு கிடையாது. ஆனால் அரசியல் சாசன சீர்குலைவு அல்லது மாநிலத்தில் ஏதாவது நெருக்கடி நேரும்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்த ஆலோசனை வழங்கி ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்பலாம். அவ்வாறான சூழ்நிலைகளில் ஆளுநர் குடியரசுத்தலைவரின் முகவராக செயல்படுகிறார். அப்போது 356 - உறுப்பின்படி மாநில அரசுப் பணிகளை அவர் மேற்கொள்ள முடியும்.


Tags : India Legislature | Political Science இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 2 : Legislature : State Legislature: Structure, Powers and Functions India Legislature | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம் : மாநிலச் சட்டமன்றம்: கட்டமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் - இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்