அரசியல் அறிவியல் - சட்டமன்றம் | 12th Political Science : Chapter 2 : Legislature
சட்டமன்றம்
கற்றலின் நோக்கங்கள்
* மக்களாட்சியின் முக்கிய அம்சங்களின் செயல்பாட்டை பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ளல்.
* மாணவர்கள், சமூகம் மற்றும் அரசியலில் நடக்கும் தினசரி நிகழ்வுகளில் சட்டமன்றத்தின் பங்கினை அறிந்துகொள்ளல்.
* அரசின் அரசியல் கட்டமைப்பு மற்றும் அரசமைப்பு நிறுவனங்களின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்ய மாணவர்கள் கற்றுக்கொள்ளல்.
* தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறைகளை கூர்ந்து கவனிக்க கற்றுக்கொள்ளல். அதன் மூலம் பொது நிறுவனங்களை பற்றிய அறிவை மேம்படுத்திக்கொள்ளல்.
* இளைஞர் நாடாளுமன்றத்தை தங்களுக்குள் நடத்துவதன் மூலம் மாணவர்கள், மத்திய மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை வேறுபடுத்தி அறியலாம்.
அறிமுகம்
சட்டமன்றமானது பிரதிநிதித்துவ மக்களாட்சியில் ஒரு மிக முக்கியமான நிறுவனமாகிறது. சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கமானது, அதன் பிரதிநிதிகளை பதிலளிக்க கடமைப்பட்டவர்களாகவும், நாட்டிலுள்ள மக்களின் நலன்களுக்கு பொறுப்புடையவர்களாகச் செய்வதே ஆகும். நாட்டின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அந்நாட்டின் சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த அமைப்பே, சட்டமன்றம் ஆகும். இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது. மாநிலங்களிலும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சட்டமன்றங்கள் சட்டமன்ற பேரவை என்று அழைக்கப்படுகின்றன.
நாடாளுமன்றம் ஈரவைகளை கொண்டுள்ளது. அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை. இது நாடாளுமன்றத்தின் ஈரவை முறை எனப்படும். இது பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதேபோல் சில மாநிலங்களில் சட்ட மேலவை மற்றும் சட்டசபை என ஈரவை முறையே உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்றமே உள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 28 மாநிலங்களுடனும், 9 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)