இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - முதலமைச்சர் தலைமையில் அமைந்த அமைச்சரவைக் குழு | 12th Political Science : Chapter 2 : Legislature
முதலமைச்சர் தலைமையில் அமைந்த அமைச்சரவைக் குழு
அமைச்சர்கள் குழு மற்றும் அமைச்சரவையின் தலைவராக முதலமைச்சர் உள்ளார். நடைமுறையில், அவர் மாநிலத்தின் உண்மையான நிர்வாகத் தலைவராக இருக்கிறார். அவர் சட்டசபையின் தலைவராகவும் இருக்கிறார். இந்திய அரசமைப்பின் 164 (1) உறுப்பின் படி மாநிலத்தின் முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் உண்மையான நிர்வாகத் தலைவராக, முதலமைச்சர் பெருமளவில் அதிகாரங்களைப் பெறுகிறார் மற்றும் பல பொறுப்புகளை
நிறைவேற்றுகிறார். முதலமைச்சரின் பணிகள் பின்வருமாறு.
(i) அமைச்சர்கள் குழுவின் தலைவர் என்கிற முறையில், முதலமைச்சர். அதிக அதிகாரம் கொண்டவர். அமைச்சரவையின் பிற அமைச்சர்களை நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு பரிந்துரை வழங்குகிறார். மேலும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அவருக்கு உரிமை உள்ளது.
(ii) அமைச்சரவை கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குகிறார், மேலும் அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறார்
(iii) அவர் அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு இடையேயான ஒரே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறார். நிர்வாகம் மற்றும் சட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் ஆளுநரிடம் தெரிவிக்கிறார்.
(iv) சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டிய அனைத்து ஆவணங்கள், முன்வரைவுகள், தீர்மானங்கள் போன்றவற்றையும் அவர் பரிசீலனை செய்கிறார்.
(v) அனைத்து முக்கிய நியமனங்களையும் ஆளுநரே செய்வதாக எழுத்தில் இருந்தாலும், நடைமுறையிலும் அத்தகைய நியமனங்கள் அனைத்துமே முதலமைச்சரின் ஆலோசனையின்படியே செய்யப்படுகின்றன.
அறிமுகம்
ஆளுநருக்கு உதவியாக ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு நியமிக்கப்படுவதைப்பற்றி அரசமைப்பின் 163 (1)-வது உறுப்பு குறிப்பிடுகிறது. ஆனால் அரசமைப்பு விதிகளின்படி, நெருக்கடிச் சூழலில் ஆளுநர் நேரடியாக ஆட்சியை மேற்கொள்ள இயலும்.
மத்திய அமைச்சர்கள் குழுவை போன்றே மாநில அமைச்சரவைக் குழுவும் அமைக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவரோ அல்லது கூட்டணி கட்சிகளின் தலைவரோ முதலமைச்சராக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அமைச்சரவைக் குழுவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரின் அறிவுரையின்படி ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
செயல்பாடு
தமிழ்நாட்டில் இதுவரை முதலமைச்சர்களின் பட்டியலை தயாரிக்கவும்.
∙ அவர்கள் அறிமுகப்படுத்திய நலத்திட்டங்களைப் பற்றிக் கூறவும்.
∙ உங்களுக்கு பிடித்தமான முதலமைச்சரைப் பற்றி சில வரிகள் எழுதவும்.
∙ உங்கள் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பெண்களுக்கான பிரத்தியேக நலத்திட்டங்களைக் கூறவும்.
அரசமைப்பின்படி ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் தொடரலாம். ஆனால் நடைமுறையில் முதலமைச்சரின் விருப்பமுள்ளவரை அமைச்சர்கள் பதவியில் தொடர்வர். ஏனெனில் முதலமைச்சரின் பரிந்துரைப்படியே ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் செய்கிறார். எனவே அமைச்சர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் முதலமைச்சருக்குப் பொறுப்பானவர்கள் ஆவர்.