இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - மாநிலச் சட்டமன்றத்தின் குழுக்கள் மற்றும் அதிகாரிகளும் | 12th Political Science : Chapter 2 : Legislature
மாநிலச் சட்டமன்றத்தின் குழுக்கள் மற்றும் அதிகாரிகளும்
சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சட்டமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகிறார். சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காகவும், கண்ணியத்தை கடைபிடித்து நடக்கவும் மற்றும் அதன் நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களை கேள்வி கேட்கவும் அனுமதிக்கிறார். முக்கியமான விஷயங்களில் மற்றும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு சமயங்களில் பேச அனுமதிப்பது போன்ற கடமைகளையும் அதிகாரங்களையும் பெற்றவராவார். அரசியல் சாசனத்திலுள்ள விதிகள், சட்டமன்ற நடைமுறை விதிகள், பேரவைக்குள் சட்டமன்ற நடவடிக்கைகளின் முன்மாதிரிகள் ஆகியவற்றின் பொருள் விளக்குவது சபாநாயகர்தான். சட்டமன்ற நடவடிக்கைகளின் போது விதிகள் நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மீறப்படுமேயானால் சட்டமன்றச் கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும், தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் மற்றும் மீண்டும் தொடரச் செய்யவும் மற்றும் கூட்டுத்தொடரில் பங்குபெறாமல் உறுப்பினர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. சட்டமன்றம் நடைபெறும்பொழுது சபாநாயகர் பொதுவாக நடுநிலை மற்றும் பாரபட்சமின்மையை மேற்கொள்ளுவார். ஒரு முன்வரைவு, மற்றும் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க முடியாமல் வாக்கு சமநிலையிலிருந்தால் சபாநாயகரின் வாக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. உறுப்பினர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதில் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து அல்லது சட்டமன்றத்தில் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவற்றில் சபாநாயகரின் முடிவே இறுதியானது. அம்மாதிரி விஷயங்களில் சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் குறுக்கிடமுடியாது. அனைத்து குழுக்களின் தலைவர்களையும் சபாநாயகர்தான் நியமிக்கிறார் மற்றும் அவர்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களில் ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுப்பார்கள். சபாநாயகர் அவையில் இல்லாத பொழுது, துணை சபாநாயகர், சபாநாயகரின் கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்படுத்துவார், அவைக்குத் தலைமை தாங்குவார். துணை சபாநாயகருக்கு, சபாநாயகருக்கு சமமான அதிகாரங்கள் அவைக்குள் உண்டு. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் அவையில் இல்லாத பொழுது, அவையில் உள்ள மூத்த உறுப்பினர் யார் வேண்டுமானாலும் அவைக்குத் தலைமை தாங்கலாம்.
நாடாளுமன்றக் குழுக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நிலைக் குழுக்கள் மற்றும் தற்காலிகக் குழுக்கள். நிலைக் குழுக்கள், நிரந்தரமானவையாகும், தொடர்ந்து பணியில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும். ஆனால் தற்காலிக குழுக்கள் நிரந்தரமானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பணிக்காக உருவாக்கப்படும். அப்பணி நிறைவடைந்தவுடன் அவை கலைக்கப்படும்.
நிலைக் குழுக்கள் தன்மைக்கேற்ப ஆறு பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வகைகளாக
1. நிதிக் குழுக்கள்
அ) பொதுக் கணக்குக் குழு
ஆ) மதிப்பீட்டுக் குழு
இ) பொதுத்துறை நிறுவனக் குழு
2. துறைசார் நிலைக் குழுக்கள்
3. விசாரணைக் குழுக்கள்
அ) மனுக்கள் குழு
ஆ) சிறப்புரிமைக் குழு
இ) நன்னெறிக் குழு
4. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள்
அ) அரசாங்க உத்திரவாதங்களுக்கான குழு
ஆ) துணைச் சட்டங்களுக்கான குழு
இ) அட்டவணையில் எழுத்தப்பட்ட ஆவணங்களின் குழு
ஈ) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான குழு
உ) பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான குழு
ஊ) ஆதாயம் தரும் பதவிகளுக்கான இணைக் குழு
5. அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்
அ) அலுவல் ஆலோசனைக் குழு
ஆ) தனிநபர் முன்வரைவு மற்றும் தீர்மானங்களுக்கான குழு
இ) விதிகள் குழு
ஈ) சட்டமன்றக் கூட்டத்தொடரில் வராத உறுப்பினர்கள் குழு
6. சேவை குழு (உறுப்பினர்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான குழு)
அ) பொது தேவைகள் குழு
ஆ) அவை குழுக்கள்
இ) நூலகக் குழு
ஈ) உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் மற்ற படிகளுக்கான இணைக் குழு
தற்காலிகக் குழுக்கள்
தற்காலிகக் குழுக்கள் இரண்டு வகைப்படும். அவை, விசாரணைக் குழு மற்றும் ஆலோசனைக் குழு.
மதிப்பீட்டுக் குழு: பரிசோதகருக்கும் மதிப்பீட்டாளருக்கும் அறிவுறுத்துவது மற்றும் பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள், மாற்றுக் கொள்கைகள், நிர்வாக சீர்திருத்தங்கள், மதிப்பீடு ஆய்விலுள்ள வெவ்வேறு திட்டத்திற்காக மாநிலத்திற்கு உள்ளும் வெளியிலும் பயணம் மேற்கொள்வது போன்ற விசயங்களில் பரிந்துரை அளிப்பது ஆகியவை இக் குழுவின் முக்கிய பொறுப்பகளாகும்
பொதுக் கணக்குக் குழு: மாநிலத்தின் ஒதுக்கீட்டுக் கணக்குகளையும் இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் (குடிசார்) அறிக்கையையும் ஆய்வு செய்வதே குழுவின் முக்கியப் பணி. மேலும் வருவாய் பற்றுச்சீட்டுகளும், பணப்பட்டுவாடாவும் எந்த சேவைக்காக அல்லது பயன்பாட்டிற்காக கணக்கு ஏற்படுத்தப்பட்டதோ அந்த கணக்கு தொடர்புடையதாக பற்றுரிமை உள்ளதா என்றும் சரிபார்ப்பதே இந்த குழுவின் வேலை.
பொதுத்துறை நிறுவனங்களின் குழு: தணிக்கை அறிக்கை கணக்குகளையும் பொதுத்துறை நிறுவனக் கணக்குகளையும் அவ்வப்போது ஆய்வு செய்வதற்காக இந்தக் குழு உள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் தன்னாட்சியையும் பயன்திறனையும் இந்தக் குழு ஆய்வு செய்கிறது. மேலும் நல்ல வியாபாரக் கொள்கைகளையும் மதிநுட்ப வணிக நடைமுறைகளையும் பின்பற்றி பொதுத்துறை நிறுவனங்களின் அலுவல்கள் நடைபெறுகிறதா என்று கருத்தில் கொள்கிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் அறிக்கைகளை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. மேலும் நிறுவனங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரித்து நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஆதாரத்தைப் பெற்று இந்தக் குழு அவைக்கு பரிந்துரைகளை அளிக்கிறது.