இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - நாடாளுமன்றம்: மக்களவை, மாநிலங்களவை அதிகாரங்கள் | 12th Political Science : Chapter 2 : Legislature
நாடாளுமன்றம்:மக்களவை,மாநிலங்களவை
மக்களவையின் அதிகாரங்கள்
1. மக்களவை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நிலையைப் பிரதிபலிக்கிறது. மிக உயரிய பொறுப்பை கொண்டுள்ள அமைப்பு மேலும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாகவும் நடைமுறையில் திகழ்கிறது.
2. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் மக்களின் பல்வேறு விருப்பங்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்கள். ஆகவே இது மக்களாட்சி அமைப்பின் மிக உயரிய இடத்தில் உள்ளது. இங்கிருந்துதான் நாட்டின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள் உருவாகின்றன
3. ஒன்றியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள விசயங்கள் குறித்த சட்டங்களை மக்களவை நிறைவேற்றுகிறது. மேலும் மக்களவை புதிய சட்டங்களை இயற்றவும் நடைமுறையிலுள்ள சட்டத்தை நீக்க அல்லது அதைத் திருத்தவும் முடியும். பணம் சார்ந்த முன்வரைவுகளின் மீது மக்களவைக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ளது.
4. மக்களவைவின் சிறப்பு அதிகாரம் என்னவென்றால், நிதிநிலை அறிக்கை அல்லது பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் அது நிறைவேற்றினால், அதை மாநிலங்களவை நிராகரிக்க முடியாது. ஆனால் மாநிலங்களவை அந்த சட்டத்தை 14 நாட்களுக்கு மட்டும் காலதாமதப்படுத்த முடியும். மேலும் அந்த சட்டத்தில் மாநிலங்களவை ஏதாவது மாற்றம் செய்வதற்கு ஆலோசனை கூறினால் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ மக்களவையிக்கு உரிமை உண்டு.
5. நாட்டின் பொருளாதாரம் மக்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அமையும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி அறிக்கையை தயார் செய்வதும் சமர்ப்பிப்பதும் மக்களவையின் சிறப்புரிமைகளில் ஒன்று ஆகும்.
6. கேள்விகள், மற்றும் துணைக்கேள்விகள் எழுப்புதல், முன்வரைவு நிறைவேற்றம், மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஆகியவற்றின் மூலம் ஆட்சித்துறையை மக்களவை கட்டுப்படுத்துகிறது.
7. அரசமைப்பை திருத்தி அமைக்கவும், அவசரகால நிலை பிரகடனத்தை வெளியிடவும் மக்களவை அதிகாரம் பெற்றுள்ளது.
8. இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் பணியில் மக்களவை முக்கிய பங்காற்றுகிறது.
9. மக்களவை, புதிய குழுக்கள் மற்றும் ஆணையங்களை அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. மேலும் அவற்றின் அறிக்கைகளை விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தின் முன் சமர்பிக்கவும், அவ்வறிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கவும் மக்களவைக்கு அதிகாரம் உண்டு .
10. மக்களவை பெரும்பான்மை ஆதரவை கொண்டிருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஒரு வேளை பிரதமர் மக்களவையின் நம்பிக்கையை இழந்தால், மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களை சந்திக்க வேண்டும்.
மக்களவையுடன் ஒப்பிடும்போது, அரசமைப்பின்படி மாநிலங்களவையின் அதிகாரத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. மக்களவையும் மாநிலங்களவையும் சம அளவில் அதிகாரம் உள்ள இடங்கள்
2. மாநிலங்களவையும் மக்களவையும் சமமற்ற அதிகாரம் கொண்டுள்ள இடங்கள்
3. மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரங்கள் இவை மக்களவையுடன் பகிர்ந்து கொள்ளப்படாதவை
மாநிலங்களவையும் மக்களவையும் சம நிலையில் உள்ள இடங்கள்
கீழ்க்கண்ட அடிப்படையில் மாநிலங்களவையின் அதிகாரமும், மக்களவையின் அதிகாரமும் சம அளவில் உள்ளன.
1. முன்வரைவுகள் மற்றும் திருத்தச்சட்டங்களை நிறைவேற்றுதல்.
2. இந்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து செய்யப்படும் செலவினங்கள் தொடர்பான முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.
3. குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுத்தல் மற்றும் பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்றல்.
4. துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவையே துவக்க முடியும். ஒரு சிறப்பு பெரும்பான்மையின் மூலம் துணைக் குடியரசுத்தலைவரை மாநிலங்களவை பதவி நீக்கம் செய்கிறது. அதை சாதாரண பெரும்பான்மை மூலம் மக்களவை ஏற்றுக்கொள்கிறது.
5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்தியாவின் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல்.
6. குடியரசுத்தலைவரின் அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல்.
7. குடியரசுத்தலைவரின் மூன்று விதமான அவசரநிலைப் பிரகடனங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.
8. பிரதமர் உட்பட அமைச்சர்களை தேர்வு செய்தல். இந்திய அரசமைப்பின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரண்டு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அவர்கள் எந்த அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மக்களவைக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் ஆவர்.
9. நிதிக்குழு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் போன்ற அமைப்புகள் அளிக்கும் அறிக்கைகளை பரிசீலித்தல்.
10. உச்ச நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரம் வரம்பை அதிகப்படுத்துதல்.
1. நிதி முன்வரைவானது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும், மாநிலங்களவையில் அல்ல.
2. மாநிலங்களவை நிதி முன்வரைவில் திருத்தம் செய்யவோ அதை நிராகரிக்கவோ இயலாது. அம்முன்வரைவை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை தன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை ஏதுமின்றியோ மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
3. மாநிலங்களவையின் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எதுவாக இருப்பினும் முன்வரைவு ஈரவைகளிலும் நிறைவேறியதாகவே கருதப்படும்.
4. ஒரு நிதி முன்வரைவு சட்ட உறுப்பு 110-இல் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இல்லாதிருப்பினும் அது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஈரவைகளுக்குமே சமமான அதிகாரம் உள்ளது.
5. ஒரு முன்வரைவு, பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகருக்கே உள்ளது.
6. ஈரவைகளின் கூட்டு கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகரே தலைமை தாங்குகிறார்.
7. பொதுவாக, கூட்டுக் கூட்டங்களின் வாக்கெடுப்பில் மக்களவையின் நிலைப்பாடே வெற்றி பெறும். ஏனெனில் அது மாநிலங்களவையை விட அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஈரவைகளிலும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த எதிர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் சமயத்தில் மட்டுமே ஆளும் கட்சியின் தீர்மானம் வெற்றி பெறாது.
8. மாநிலங்களவை நிதிநிலை அறிக்கை திட்டத்தின் மீது விவாதம் நடத்தலாம். ஆனால் அதற்கான வாக்கெடுப்பில் பங்கு பெற முடியாது. இது மக்களவைக்கு மட்டுமே உள்ள சிறப்பு உரிமையாகும்.
9. அமலில் உள்ள தேசிய அவசர நிலையை நீக்கும் தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். 10. எந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அமைச்சர்கள் குழுவாகவும், தனிப்பட்ட முறையிலும் மக்களவைக்கே பொறுப்பானவர்கள். ஆனால் மாநிலங்களவை அரசின், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்க முடியும்.
கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களவை இரண்டு பிரத்யேகமான தனித்துவமான அதிகாரங்களை பெற்றுள்ளது.
1. உறுப்பு 249-இன்படி மாநிலங்களவை மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும்.
2. உறுப்பு 312-இன்படி மாநில மற்றும் மத்திய அரசுக்கு பொதுவான அனைத்து இந்தியத் தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க முடியும்.
மேற்கண்ட ஆய்வின் மூலம் இந்திய மேலவையானது (மாநிலங்களவை) ஆங்கிலேய நாடாளுமன்ற அமைப்பில் உள்ள மேலவை (பிரபுக்கள் சபை) போல அதிகாரமற்று இல்லாமலும், அமெரிக்க மேலவை (செனட்) போல் மிகுந்த அதிகார முடையதாகவும் இல்லாமல் இருப்பதாக புலனாகிறது. மாநிலங்களவையானது, நிதி விவகாரங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான கட்டுப்பாடு தவிர மற்ற எல்லா தளங்களிலும் கிட்டத்தட்ட மக்களவைக்கு நிகரான அதிகாரத்தையே பெற்றுள்ளது.
மக்களவையுடன் ஒப்பிடும்போது, மாநிலங்களவைக்கு குறைவான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும் கீழ்க்கண்ட விவகாரங்களில் இதன் பயன் அவசியமாகிறது.
1. அவசரமாகவும், குறைபாடுகளுடனும், கவனமின்றியும் மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை திருப்பி அனுப்பவும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநிலங்களவை செய்கிறது.
2. நேரடியாக தேர்தலைச் சந்திக்கமுடியாத புகழ்பெற்ற நிபுணர்கள், கலை, இலக்கிய வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த அவை பிரதிநிதித்துவம் அளிக்கிறது. மேலும், குடியரசுத்தலைவர் இது போன்ற 12 நபர்களை இந்த அவையின் உறுப்பினராக நியமிக்கிறார்.
3. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையான மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலனாக மத்திய அரசின் அதிகார தலையீடுகளைத் தடுக்கிறது.
உறுப்பு 120
நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என அரசமைப்பின் உறுப்பு 120 கூறுகிறது. இவ்வாறிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் எவரேனும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவராக இருப்பின், அவர் தனது தாய் மொழியில் உரையாற்ற அவைத்தலைவர் அனுமதிக்கலாம் என்றும் இவ்வுறுப்பு மேலும் கூறுகிறது.