சிறப்பியல்புகள், புற அமைப்பு சார் பண்புகள், உள்ளமைப்பு சார் பண்புகள் - ஆஞ்சியோஸ்பெர்ம்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
மூடுவிதைத் தாவரங்கள்
முந்தைய பாடத்தில் விதையுடைய தாவரங்களாகிய ஜிம்னோஸ்பெர்ம்களின்
பண்புகளைப் பற்றி விவாதித்தோம். விதையுடைய தாவரங்களில் சூல்களைச் சூழ்ந்து பாதுகாப்பான
சூலகம் கொண்ட தாவரங்களாகிய ஆஞ்சியோஸ்பெர்ம்களும் அடங்கும். புவியிலுள்ள தாவரத் தொகுப்பில்
பெரும்பாலானவையாகவும், நிலத்தில் வாழத்தகுந்த தகவமைப்புகளைப் பெற்றவைகளாகவும் இத்தாவரக்
குழுமம் உள்ளது. இத்தாவரத் தொகுப்பானது ஆரம்பக் காலக் கிரிட்டேஷியஸ் காலத்தில் தோன்றி
(140 மில்லியன் ஆண்டுகளுக்கு உலகளவில் பெரும்பான்மையான தாவரக்கூட்டமாக காணப்படுன்றன.
வித்தகத்தாவரங்கள் ஓங்கு தன்மையுடனும், கேமீட்டகத்தாவரங்கள் மிகவும் ஒடுங்கிய நிலையிலும்
உள்ளன.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சிறப்பியல்புகள்
• வாஸ்குலத்திசு (சைலம் மற்றும் ஃபுளோயம்) நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
• கூம்புகளுக்குப்
பதிலாக மலர்கள் தோற்றுவிக்கின்றன.
• சூல் சூலகத்தினால்
சூழப்பட்டுள்ளது.
• மகரந்தச் சேர்க்கைக்கு மகரந்த குழல் உதவி செய்கிறது.
ஆகையால் கருவுறுதலுக்கு நீர் அவசியமில்லை.
• இரட்டைக் கருவுறுதல் காணப்படுகிறது. கருவூண் திசு
மும்மடியத்தில் உள்ளது.
• ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலைத் தாவரங்கள் எனும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இருவிதையிலை, ஒருவிதையிலை தாவரங்களின் சிறப்பு பண்புகள்
இருவிதையிலை தாவரங்கள்
புற அமைப்பு சார்
பண்புகள்
இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைப்பு உள்ளது. விதையில்
இரண்டு விதையிலைகள் உள்ளன. முதன்மை வேரான முளைவேர் நிலைத்துக் காணப்பட்டு ஆணி வேராகிறது.
மலர்கள் நான்கங்க அல்லது ஐந்தங்க வகையைச் சார்ந்தது. முக்குழியுடைய மகரந்தத்துக்கள்
காணப்படுகிறது.
உள்ளமைப்பு சார்
பண்புகள்
• வாஸ்குலக் கற்றைகள் தண்டில் வளையம் போன்று அமைந்துள்ளது.
• வாஸ்குலக் கற்றைகள்
திறந்த வகையைச் சார்ந்தது. (கேம்பியம் உள்ளது).
• இரண்டாம் நிலை
வளர்ச்சி காணப்படுகிறது.
ஒருவிதையிலைத்
தாவரங்கள்
புற அமைப்பு சார்ந்த
பண்புகள்
இலைகளில் இணைப்போக்கு நரம்பமைப்பு உள்ளது. விதைகளில்
ஒருவிதையிலை உள்ளது. முளைவேர் நிலைத்துக் காணப்படுவதில்லை. சல்லி வேர் தொகுப்பு உள்ளது.
மூவங்க மலர்கள் உள்ளது. ஒற்றைக்குழியுடைய மகரந்தத்துகள் காணப்படுகிறது.
உள்ளமைப்பு சார்ந்த
பண்புகள்
• தண்டில் வாஸ்குலக்
கற்றைகள் சிதறிக் காணப்படுகிறது.
• மூடிய வாஸ்குலக்
கற்றைகள் (கேம்பியம் காணப்படுவதில்லை ).
• இரண்டாம் நிலை
வளர்ச்சி காணப்படுவதில்லை.
அண்மைக்காலத்தில் முன்மொழியப்பட்ட மூடுவிதை தாவர இன
வகைப்பாட்டியியலில், (Angiosperm Phylogeny
Group (APG) Classification) இருவிதையிலை தாவரங்களை ஒற்றைப் பரிணாமக்குழுமத் தொகுப்பாகக்
கருதவில்லை. ஆரம்பக்காலத்தில் இருவிதையிலையில் வகைப்படுத்தப்பட்ட தாவரங்கள் ஆரம்பகால
மேக்னோலிட்கள் (Early Magnolids), உண்மை
இருவிதையிலை (Eudicots) தாவரங்கள் எனும்
பல்வேறு கிளைகளில் சிதறிக்காணப்படுகிறது.