நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | முதல் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அணு | 7th Science : Term 1 Unit 3 : Matter Around Us
அணு
பென்சிலில் பயன்படுத்தப்படும் கிராபைட் தண்டு கார்பன் எனப்படும் தனிமத்தினால் ஆனது. இந்த கிராபைட்டை நாம் மேலும் மேலும் சிறிய துகள்களாக உடைக்க முடியும். மிகக்கூர்மையான கத்தியினை நாம் கொண்டிருந்தால் அதனை மேலும் மிக நுண்ணிய துகள்களாக உடைக்க முடியும். இவ்வாறு கிராபைட்டை உடைத்துக்கொண்டே சென்றால், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கிராபைட்டின் மிகச்சிறிய பகுதிப் பொருளாகிய கார்பன் அணுவை நாம் பெற முடியும்.
ஒரு கார்பன் அணுவைப் பிளக்கும்போது, கார்பனின் பண்புகள் வெளிப்படுகின்றன. ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அத்தனிமத்தின் மிக நுண்ணிய துகளே அணு என அழைக்கப்படுகிறது. அனைத்துப் பருப்பொருள்களும் அணு என அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்களால் ஆனவை. நீர், அரிசி உட்பட நம்மைச் சுற்றிக் காணப்படும் அனைத்துப் பருப்பொருள்களும் அணுக்களால் ஆனவை. அணு என்பது பருப்பொருளின் அடிப்படை அலகு ஆகும்.
மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டும் நம்மால் அணுக்களைக் காண இயலாது.
இருந்தபோதிலும் ஒருசில நவீன கருவிகள் ஒரு பருப்பொருளின் மேற்பரப்பில் அணுக்கள் எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் என நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகின்றன. உதாரணமாக, கீழே காட்டப்பட்டுள்ள படம் சிலிக்கான் அணுவின் மேற்பரப்பைக் காண்பிக்கிறது.
அண்டத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் அணு ஹைட்ரஜன் அணுவாகும். பேரண்டத்தில் காணப்படும் அணுக்களுள் ஏறக்குறைய 74% ஹைட்ரஜன் அணுக்களாகும். எனினும், பூமியின்மீது காணப்படும் மூன்று முக்கிய அணுக்கள் இரும்பு, ஆக்சிஜன் மற்றும் சிலிக்கான் ஆகும்.