நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | முதல் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வேதியியல் வாய்ப்பாடு | 7th Science : Term 1 Unit 3 : Matter Around Us
வேதியியல் வாய்ப்பாடு
நாம் நீரினை H2O என்று எழுதுகின்றோம். இதுவே நீர் மூலக்கூறின் வேதியியல் வாய்ப்பாடு ஆகும். இதன் பொருள் ஒரு நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் இணைந்து உள்ளன என்பதாகும். வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும். இது ஒரு மூலக்கூறில் உள்ள தனிமங்கள் மற்றும் ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை வழங்குகிறது. ஒரு நீர் மூலக்கூறில் H எனும் குறியீட்டின் அருகிலுள்ள சிறிய எண் கீழ்க்குறியீடு என அழைக்கப்படுகிறது. இது ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எனவே, நீர் மூலக்கூறில் 2 ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. O குறியீட்டின் அருகில் எந்த ஒரு எண்ணும் இல்லை . இது, ஆக்சிஜன் எனும் தனிமத்தின் ஒரே ஒரு அணு மட்டும் அதில் உள்ளதைக் குறிக்கிறது. எனவே, நீர் மூலக்கூறில் ஒரு ஆக்சிஜன் அணு மட்டுமே உள்ளது. சோடியம் குளோரைடில் உள்ள தனிமங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கையை உங்களால் யூகிக்க முடிகிறதா? சமையல் உப்பின் வேதிப்பெயர் என்ன ?
வேதியியல் வாய்ப்பாட்டிற்குச் சில உதாரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சோடியம் குளோரைடு (NaCl) : 1 சோடியம் அணு மற்றும் 1 குளோரின் அணு
அம்மோனியா (NH3) : 1 நைட்ரஜன் மற்றும் 3 ஹைட்ரஜன் அணுக்கள்
குளுக்கோஸ் (C6H12O6) : 6 கார்பன் அணுக்கள், 12 ஹைட்ரஜன் அணுக்கள், 6 ஆக்சிஜன் அணுக்கள்
வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு பொருளின் ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையையும், அணுக்களின் வகைகளையும் நமக்குத் தெரிவிக்கிறது.
அட்டவணை 3.5 பொதுவான சேர்மங்களும் அவற்றின் வேதியியல் வாய்ப்பாடும்
சேர்மங்களின் வாய்ப்பாடு பெயர்கள்
H2O நீர்
C6H12O6 குளுக்கோஸ்
NaCl சோடியம் குளோரைடு
C2H5OH எத்தனால்
NH3 அம்மோனியா
H2SO4 கந்தக அமிலம்
CH4 மீத்தேன்
C12H22O11 சுக்ரோஸ்