நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | முதல் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மூலக்கூறுகள் | 7th Science : Term 1 Unit 3 : Matter Around Us
மூலக்கூறுகள்
ஒரு அணுவானது மற்றொரு அணு அல்லது அணுக்களுடன் இணைந்து உருவாக்கும் கூட்டுப் பொருள் மூலக்கூறு என அழைக்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்பினால் இணைவதால் மூலக்கூறு உருவாகிறது.
நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயுவானது வேதிப்பிணைப்பினால் இணைந்த இரண்டு ஆக்சிஜன் அணுக்களால் உருவாகிறது.
மூன்று ஆக்சிஜன் அணுக்கள் வேதிப் பிணைப்பினால் இணைவதன் மூலம் ஓசோன் எனப்படும் ஒரு மூலக்கூறு உருவாக்கப்படுகிறது.
நீர் (H2O) மூலக்கூறானது ஒரு ஆக்சிஜன் (O) அணுவும், இரண்டு ஹைட்ரஜன் (H2) அணுக்களும் இணைவதால் உருவாகிறது.
மூலக்கூறுகள் அணுக்களின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேவேளை, அவை தனித்தும் காணப்படுகின்றன. ஒரே வகையான அணுக்கள் அல்லது பல்வேறு வகையான அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின்றன.
மூலக்கூறுகளை நாம் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
• ஒரே ஒரு அணுவைக் கொண்ட மூலக்கூறுகள் ஓரணு மூலக்கூறுகள் எனப்படுகின்றன (மந்த வாயுக்கள்).
• இரண்டு அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் ஈரணு மூலக்கூறுகள் எனப்படுகின்றன (ஆக்சிஜன், நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன்).
• மூன்று அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் மூவணு மூலக்கூறுகள் எனப்படும் (ஓசோன், சல்பர் டை ஆக்சைடு, கார்பன்-டை- ஆக்சைடு)
• மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள் பல அணு மூலக்கூறுகள் எனப்படுகின்றன (பாஸ்பேட், சல்பர் மற்றும் பிற)
தனிமத்தின் மூலக்கூறுகள்
ஒரு தனிமத்தின் மூலக்கூறுகள் வேதிப் பிணைப்பினால் இணைந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒரே வகையான அணுக்களைக் கொண்டுள்ளன. வாயுக்கள் ஒரே தனிமத்தின் இரண்டு அணுக்களால் உருவானவை என்பதை அட்டவணை 3.1 ல் காணலாம்.
சேர்மங்களின் மூலக்கூறுகள்
சேர்மத்தின் மூலக்கூறு வேதிப் பிணைப்பினால் இணைந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேறுபட்ட அணுக்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக கீழே காண்பிக்கப்பட்டுள்ள நீர் மூலக்கூறு மாதிரியைக் கருதுவோம். ஒவ்வொரு நீர் மூலக்கூறும் ஒரு ஆக்சிஜன் அணுவையும், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டுள்ளது. திண்மம், நீர்மம் மற்றும் வாயு என எந்நிலையில் நீர் காணப்பட்டாலும் அதிலுள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் இவ்விகிதமானது மாறாததாக உள்ளது. இந்த விதியானது அனைத்துச் சேர்மங்களின் மூலக்கூறுகளுக்கும் பொருந்துகிறது. வெவ்வேறு அணுக்களைக் கொண்ட சேர்மங்கள் அட்டவணை 3.2ல் தரப்பட்டுள்ளன
வயிற்றுப்போக்கு மருந்தில் பிஸ்மத்
பிஸ்மத் என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனிமம் ஆகும். இதை பிற தனிமங்களுடன் இணைத்து வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
அட்டவணை 3.1 சில தனிமங்களின் மூலக்கூறுகள்
அட்டவணை 3.2 சில சேர்மங்களின் மூலக்கூறுகள்