நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | முதல் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தனிமங்களின் குறியீடுகள் | 7th Science : Term 1 Unit 3 : Matter Around Us
தனிமங்களின் குறியீடு
ஒரு தனிமத்தின் குறியீடு என்பது அத்தனிமத்தினைச் சுருக்கமாகக் குறிப்பிடக்கூடிய முறையாகும். ஒவ்வொரு தனிமமும் தனிப்பட்ட குறியீட்டைக் கொண்டுள்ளது. இக்குறியீடு அத்தனிமத்தின் ஒரு அணுவினைக் குறிக்கிறது. இக்குறியீடுகள் பொதுவாக தனிமத்தின் பெயர்களிலிருந்து பெறப்படுகின்றன. இவை ஆங்கிலம் அல்லது இலத்தீன் மொழிப் பெயர்களாக உள்ளன. இக்குறியீடுகள் International Union of Pure and Applied Chemistry (IUPAC) என்ற அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
குறியீடுகளை, தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர் டால்டன் ஆவார். அவர் ஒரு தனிமத்தினைக் குறிப்பதற்கு பயன்படுத்திய குறியீடு ஒரு குறிப்பிட்ட அளவையும் குறித்தது. அதாவது, அது அத்தனிமத்தின் ஒரு அணுவைக் குறித்தது. ஒரு தனிமத்தின் பெயரில் உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு தனிமத்தின் பெயரை எழுதலாம் என்று பெர்சிலியஸ் என்பவர் பரிந்துரைத்தார்.
தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
• தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் மட்டுமே இடம்பெறுகின்றன.
• பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து கொண்டு குறிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஆக்சிஜனின் குறியீடு O எனவும், ஹைட்ரஜனின் குறியீடு H எனவும் குறிக்கப்படுகின்றது. தனிமங்களின் குறியீடு பற்றி நீங்கள் எட்டாம் வகுப்பில் விரிவாகக் காண்பீர்கள்.
ஆரம்ப நாட்களில் தனிமங்களின் பெயர்கள் அத்தனிமம் முதன்முதலில் எந்த இடத்தில் கிடைத்ததோ அந்த இடத்தின் பெயரிலிருந்து வருவிக்கப்பட்டது. உதாரணமாக காப்பர் என்ற பெயர் சைப்ரஸ் என்ற பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது. சில தனிமங்களின் பெயர்கள் அத்தனிமத்தின் நிறங்களிலிருந்து உருவாக்கப்பட்டன. உதாரணமாக, தங்கம் (Gold) என்பது மஞ்சள் எனப் பொருள் தரும் ஆங்கில வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டது. தற்காலங்களில் IUPAC அமைப்பே தனிமங்களுக்கான பெயர்களை அங்கீகரிக்கிறது. பல தனிமங்களின் குறியீடுகள் அத்தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களின் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளை இணைத்து உருவாக்கப்படுகின்றன. குறியீட்டின் முதல் எழுத்தானது எப்போதும் பெரிய ஆங்கில எழுத்தினாலும் இரண்டாவது எழுத்தானது சிறிய ஆங்கில எழுத்தினாலும் எழுதப்படுகின்றது.
செயல்பாடு 1
கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதவும்.
தனிமம் குறியீடு
தங்கம் Au
வெள்ளி Ag
தாமிரம் Cu
இரும்பு Fe
நைட்ரஜன் N2
ஆக்சிஜன் O2
அலுமினியம் Al
கால்சியம் Ca
பாஸ்பரஸ் P
மெக்னீசியம் Mg
பொட்டாசியம் K
சோடியம் Na
செயல்பாடு 2
கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.
சேர்மங்கள் தனிமங்களின்உறுப்புகள்
நீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
உப்பு (சோடியம் குளோரைடு) சோடியம் மற்றும் குளோரின்
சோடியம் கார்பனேட் சோடியம், கார்பன் மற்றும் ஆக்சிஜன்
சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்) கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
வெள்ளைச் சர்க்கரை (சுக்ரோஸ்) கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
கால்சியம் ஆக்சைடு கால்சியம் மற்றும் ஆக்சிஜன்
கால்சியம் ஹைட்ராக்சைடு கால்சியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
சோடியம் ஹைட்ராக்சைடு சோடியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பொட்டாசியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
செயல்பாடு 3
கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.