அடிப்படை பிரச்சினைகள்
அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள்
• விருப்பங்கள் எண்ணற்றவை
• வளங்கள் பற்றாக்குறையானவை
+ இலவசமாக கிடைப்பதல்ல
• விருப்பங்களின் தெரிவு
• பொருளியல்
பற்றாக்குறையான வளங்களைக் கொண்டு மக்கள் எவ்வாறு தங்களது விருப்பத்தை பூர்த்தி செய்கிறார்கள் என்பதைக் கூறுகிறது
வளங்கள் ஏராளமாகவும், தேவைகள் சிலவாகவும் இருந்தால் பொருளாதாரப் பிரச்சினை இருப்பதில்லை. ஆனால இத்தகைய சூழ்நிலை ஒரு போதும் இருப்பதில்லை. எப்போதும் வளங்கள் குறைவாகவும் நமது தேவை எண்ணிலடங்காதவையாகவும் இருக்கிறது. எனவே எல்லாச் சமுதாயத்திலும் சில தெரிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எந்த பண்டங்களை உற்பத்தி செய்வது? எவ்வாறு உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? எங்கு உற்பத்தி செய்வது? எவ்வளவு உற்பத்தி செய்வது? போன்ற வினாக்கள் எல்லாச் சமுதாயங்களிலும் எழுகின்றன. இவற்றிற்கான விடை சில முக்கியமான சிக்கலான முடிவுகளை சார்ந்துள்ளது:
அ) உணவு, உடை, வீட்டுப் பொருட்கள் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்வதா? அல்லது ஆடம்பரப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?
ஆ) விவசாயப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்வதா? அல்லது தொழிற்சாலைப் பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதா?
இ) வளங்களை அதிகமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதா? அல்லது வளங்களை அதிகமாக ராணுவப் பணிகளுக்கு பயன்படுத்துவதா?
ஈ) நுகர்வுப் பண்டங்களை அதிகம் வைத்துக் கொள்வதா? அல்லது முதலீட்டுப் பண்டங்களை வைத்துக் கொள்வதா?
உ) அடிப்படைக் கல்விக்கு அதிகம் செலவு செய்வதா? அல்லது உயர்கல்விக்கு அதிகம் செலவு செய்வதா?
ஒவ்வொரு சமுதாயமும் உழைப்புச் செறிவு மிக்க தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதா? அல்லது, மூலதனச் செறிவு மிக்க தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதா? என்பதை முடிவு செய்யவேண்டும். அதாவது உழைப்பை அதிகம் பயன்படுத்துவதா அல்லது இயந்திரத்தை அதிகம் பயன்படுத்துவதா என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு சமுதாயமும் உற்பத்தி செய்த பண்டங்களை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுப்பது? யார் அதிகம் பெறுகிறார்கள்? யார் குறைவாகப் பெறுகிறார்கள்? என்பதையும் அறிய வேண்டியுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்ச நுகர்வுக்காவது பண்டங்கள் மற்றும் பணிகள் கிடைக்கின்றனவா? என்பதையும் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. வளங்கள் பற்றாக்குறையாகவே இருப்பதால் மாற்று வாய்ப்புகளையும் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை ஒரு சமுதாயம் சந்திக்கின்றது.
ஒரு பொருளாதாரத்தில், உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளை தனி நபர்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்ற பிரச்சினைகளையும் சமுதாயம் சந்திக்க வேண்டியுள்ளது.