Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | உற்பத்தி வாய்ப்பு வளைகோடு

நுண் பொருளாதாரம் - உற்பத்தி வாய்ப்பு வளைகோடு | 11th Economics : Chapter 1 : Introduction To Micro-Economics

   Posted On :  29.07.2022 07:11 pm

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்

உற்பத்தி வாய்ப்பு வளைகோடு

கொடுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தொழில்நுட்ப நிலையில், உற்பத்தி வாய்ப்பு வளைகோடானது சமுதாயத்தால் தேர்வு செய்யப்படும் பண்ட வரிசையை எடுத்துக் காட்டுகிறது.

உற்பத்தி வாய்ப்பு வளைகோடு

ஏதேனும் இரு பொருள்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் எதை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற வினாவிற்கு பதில் தரும் முறையை வடிவியல் சாதனம் மூலம் விளக்குவதே, உற்பத்தி வாய்ப்பு வளைகோடு எனப்படும். கொடுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தொழில்நுட்ப நிலையில், உற்பத்தி வாய்ப்பு வளைகோடானது சமுதாயத்தால் தேர்வு செய்யப்படும் பண்ட வரிசையை எடுத்துக் காட்டுகிறது. 

சில அனுமானங்களின் அடிப்படையிலேயே உற்பத்தி வாய்ப்பு வளைகோடு விளக்கப் பெறுகின்றது. 

i) காலத்தில் மாற்றம் இல்லை . வளைகோட்டின் நெடுகிலும் ஒரே காலம் நிலைத்திருக்கிறது. 

ii) உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் நிலையானது.  

iii) சமுதாயத்தில் முழு வேலைவாய்ப்பு நிலவுகிறது. 

iv) கொடுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இரு பண்டங்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். 

v) உற்பத்தி வளங்கள் முற்றிலும் இடம் பெயரக் கூடியவை. 

vi) உற்பத்திக் காரணிகளின் அளவும், தரமும் கொடுக்கப்பட்டுள்ளன.

vii) உற்பத்தியில் குறைந்துசெல் விதி நிலவுகிறது. 

ஒவ்வொரு உற்பத்தி வாய்ப்பு வளைகோடும் அனுமானங்களைக்கொண்டு அமைகிறது. இதில் மாற்றம் ஏற்பட்டால் அக்கோட்டின் தன்மையை பாதிக்கிறது.

கீழ்க்காணும் அட்டவணையைப் பயன்படுத்தி ஓர் உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டை வரையலாம்.


இந்த அட்டவணையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தில் அனைத்து வளங்களும் உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டால், அதிகபட்சம் 500 டன் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்பதை அறியலாம். மாறாக, அனைத்து வளங்களையும் மோட்டார் வாகனத்தை மட்டுமே உற்பத்தி செய்ய பயன்படுத்தினால், 25 மோட்டார் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இந்த எதிர்மாறான வாய்ப்புகளுக்கு இடையில், நாம் கொஞ்ச அளவு உணவை விட்டுக் கொடுத்தால், நமக்கு சில மோட்டார் வாகனங்கள் கிடைக்கும். இந்த முடிவு பொருளாதார சமூக அமைப்புகளைப் பொறுத்தே அமையும்.


உற்பத்தி வாய்ப்பு அட்டவணையைக் கொண்டு வரையப்படுவது உற்பத்தி வாய்ப்பு வளைகோடாகும்.

X - அச்சில் உணவின் அளவும், y - அச்சில் மோட்டார் வாகனத்தின் எண்ணிக்கையும் காட்டப்பட்டுள்ளது. வெவ்வேறு ஆறு வகையான உற்பத்தி வாய்ப்புகளும் P1, P2, P3, P4, P5 மற்றும் P6 என்ற புள்ளிகளால் குறிப்பிடப்பட்டுள்ளன.

உணவு உற்பத்தி

இருவேறு உற்பத்தி வாய்ப்பு அட்டவணைகளுக்கு இடையில், எண்ணிலடங்கா உற்பத்தி வாய்ப்புகள் இருக்கலாம். அளிக்கப்பட்ட வளங்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு சமுதாயமோ அல்லது நிறுவனமோ உற்பத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய வரைபாதையை P1 லிருந்து P6 உற்பத்தி வளைகோடு காட்டுகிறது. இந்த வளைகோட்டைத் தாண்டி வெளியே உள்ள (உ.ம். புள்ளி P) புள்ளிகள் அடைய முடியாதவை. ஏனெனில், சமுதாயத்தின் வளங்கள் பற்றாக்குறையாக உள்ளன.

உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டில் உள்ள P7 போன்ற புள்ளியை சமுதாயத்தால் அடைய முடியும், ஆனால் அப்போது வளங்கள் முற்றிலுமாக பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும். (உதாரணமாக சமுதாயம் P4 எனும் புள்ளியில் இருந்தால் மோட்டார் வாகனங்களின் உற்பத்தியை நிலைபெறச் செய்து உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது உணவு உற்பத்தியின் அளவை நிலைபெறச் செய்து மோட்டார் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது ஒரே சமயத்தில் இரண்டின் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்).

உற்பத்தி வாய்ப்பு வளைகோடு மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி இடம் பெயர்வதற்கான காரணங்களாவன: 

1) உற்பத்தி சாதனங்களின் அளிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் 

2) தொழில் நுட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் 


வளங்களின் அளிப்பு அதிகரிப்பதாலும், தொழில்நுட்ப மேம்பாட்டினாலும், காலப் போக்கில் பொருளாதாரத்தின் உற்பத்தி ஆற்றல் அதிகரிக்கலாம், இதனால் உற்பத்தி வாய்ப்பு வளைகோடு கீழே தரப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி AEயில் இருந்து A1 E1, ஆக மேல்நோக்கி இடம்பெயரும்.

இவ்வாறு உற்பத்தி வாய்ப்பு வளைகோடு மேல் நோக்கி இடம் பெயருதல் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாகும். 

உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டின் பயன்கள்

பல்வேறு ஆய்வுகளுக்கு உற்பத்தி வாய்ப்பு வளைகோடு எனும் சதனம் பயன்படுகிறது. அவற்றில் பிரபலமான சில இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.

(i) தேர்ந்தெடுப்பின் பிரச்சினை

வளங்கள் பற்றாக்குறையாகவும், தேவைகள் எண்ணற்றவையாகவும் இருப்பதால் அதிக வருவாய் உள்ள குழுக்களுக்கும் குறைந்த வருவாய் உள்ள குழுக்களுக்கும் இடையே வளங்களைப் பங்கிடுதலில் சிக்கல்கள் எழலாம். வெவ்வேறு நிலையில் இருக்கிற குடிமக்களுக்கு இடையே பண்டங்களை பங்கிடுதலிலும் சிக்கல்கள் எழலாம். உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டில் பல இணைப்புகள் (பலவாய்ப்புகள்) உள்ளதால் தெரிவு சார்ந்த பிரச்சினைகள் எழாது.

(ii) பற்றாக்குறை எனும் கருத்து

உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டின் உதவியுடன் பற்றாக்குறை எனும் கருத்தை விளக்கலாம். எந்த ஒரு சமுதாயமும் குறிப்பிட்ட அளவிலான வளங்களை மட்டுமே பெற்றிருப்பதால், இருக்கிற தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்பதை நாம் அறிவோம். பொருளாதார பற்றாக்குறையே வாழ்வின் எதார்த்த நிலை. வளங்களின் பற்றாக்குறையினால் ஏற்படும் சிரமங்களை உற்பத்தி வாய்ப்பு வளைகோடு பிரதிபலிக்கிறது.

(iii) மைய சிக்கல்களுக்கான தீர்வு

பொருளாதாரத்தின் மையமான சிக்கல்களுக்கு உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டின் மூலம் விளக்கம் அளிக்க முடியும். எதை எவ்வளவு உற்பத்தி செய்வது என்ற பிரச்சினைக்கான தீர்வு உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டின் எந்த பகுதியை தேர்ந்தெடுப்பது என்ற முடிவில் அடங்கியுள்ளது. உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டின் உட்பகுதியில் உள்ள ஏதேனும் புள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அது அந்த பொருளாதாரம் திறனற்ற உற்பத்தி முறையையும் திறனற்ற வளங்களின் தொகுப்பினையும் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.


தொகுப்புரை

இந்த அத்தியாயம் பொருளாதாரத்தின் பரந்த கண்ணோட்டத்தை அளித்துள்ளது. செல்வம், நலம், பற்றாக்குறை, உற்பத்தி வளர்ச்சி போன்ற பொதுப் பண்புகளை உடைய இலக்கணங்களை தந்து பொருளாதாரம் சார்ந்த அத்தியாவசியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன? எவ்வாறு? யாருக்காக? உற்பத்தி செய்வது என்பதைப் பற்றியும் பொருளியலின் பிரிவுகளையும், நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளாதாரத்திற்கான வேறுபாடுகளையும், அடிக்கடி தோன்றும் சில அடிப்படைக் கருத்துக்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்த அத்தியாயம் இரண்டு வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பொருளாதாரம் பற்றிய ஆய்வு ஒரு புத்திசாலித்தனமான கண்கவர் சாகசமாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. அதே சமயம் மக்களுடைய வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் உள்ளது. இப்பொழுதும், எப்பொழுதும் பாடம் கற்ற பின்னர் சுற்றுப்புற மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை உற்று நோக்க வேண்டும். இந்த வழியில் பொருளாதாரம் கற்றல் ஒரு பொருளாதார நிபுணர் போல் சிந்திக்க வைக்கிறது எனலாம்.


சொற்களஞ்சியம்

பற்றாக்குறை

மக்கள் என்ன விரும்புகிறார்கள் மற்றும் மக்கள் எதைப் பெற முடியும் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளி

உற்பத்தி

பயன்பாட்டை உருவாக்குதல்.

பகிர்வு

நாட்டு வருமானம் நான்கு உற்பத்திக் காரணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது.

சேவைகள்

பணிகள், பண்டங்களைப் போன்றே பொருளாதாரக் குணங்கள் பெற்றவை. பணிகளை உரிமையாளர்களிடமிருந்து பிரிக்க இயலாது. மேலும் அவை எளிதில் அழியக் கூடியது.

மதிப்பு

பரிமாற்றத்தின் மூலம் ஒரு பொருள் மற்ற பொருள்களை பெறும் சக்தியாகும்.

விலை

பணத்தில் பண்டத்தின் மதிப்பு.

வருமானம்

குறிப்பிட்ட காலத்தில் பணமாகவோ அல்லது பணம் அல்லாத வேறு வகையிலோ, சம்பாதித்தோ அல்லது வேறு வழியாகவோ பெறுவதாகும்.

.பகுத்தாய்வு முறை (Deductive Method)

பகுத்தாய்வு முறை என்பது  தர்க்க ரீதியான ஒரு செயல் முறையாகும் . பொதுக்கருத்தில் இருந்து ஒரு தனிக் கருத்தை அடைவது ஆகும்.

தொகுத்தாய்வு முறை (Inductive Method)

தொகுத்தாய்வு என்பது தர்க்க ரீதியான ஒரு செயல் முறை முறையாகும். தனிக்கருத்தில் இருந்து பொதுக்கருத்தை அடைவதாகும்.


Tags : Micro-Economics நுண் பொருளாதாரம்.
11th Economics : Chapter 1 : Introduction To Micro-Economics : Production Possibility Curve Micro-Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம் : உற்பத்தி வாய்ப்பு வளைகோடு - நுண் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்