பொருளியல்: அதன் தன்மைகள்
பொருளியலின் இயல்பினை, குறிப்பிட்ட சில பொருளியல் அறிஞர்களின் பல்வேறு வரையறைகளைப் படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
பொருளியலின் இயல்பு என்பது அதன் பாடப்பொருளையும், ஏன், எப்படி அவை பாடப்பொருள்களில் இடம்பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிடுகின்றது. பொருளியலுக்கு பல்வேறு இலக்கணம் வழங்கப்பட்டதன் காரணமாக, சில வல்லுநர்கள் பொருளியலுக்கு விளக்கம் தேடுவது மிகவும் சிரமமான செயல் என்று கூறியுள்ளனர். எடுத்துக்காட்டாக, J.M. கீன்ஸ் "அரசியல் பொருளாதாரம் தனது வரையறை மூலம் தனக்கு தானே குரல் வளையை நெரித்துக் கொள்கிறது" என்பதாக பொருளியலை அணுகுகிறார்.
ஓர் இயலின் வரையறையானது கற்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுவதாகவோ, வியக்கத்தக்கதாகவோ, மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவோ அல்லது பயனுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். உண்மையில், வரையறைகளே இத்தகைய சமூக அறிவியலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அறிவியல் போன்று புதிய வரையறைகளை உருவாக்கிக்கொள்ள மக்களுக்குச் சுதந்திரம் உள்ளது. பெரும்பாலான இலக்கணம் கூறுவதற்கான வாய்ப்புகள் பொருளியலுக்கு அதிகமாக இருப்பதால்தான், உற்சாகம் தரும் ஏராளமான வரையறைகள் வருகின்றன. ஒவ்வொரு வரையறையும் பொதுமைபடுத்தப்பட்ட தனித்துவம் வாய்ந்தவை. பொருளியலின் பாடப் பொருளைப் பற்றிய ஒரு முழுமையான அறிவை அடைவதற்கு இந்தப் பல்வேறு வரையறைகளும் வழி வகுக்கின்றன.
கருத்துக்கள் இணைந்து அதில் உள்ள சிறப்பம்சங்கள் வலியுறுத்தப்பட்டு புதிய வரையறைகள் எழுவதன் மூலம், அறிவியல் ஒவ்வொரு நிலையிலும் படிப்படியாக வளர்கிறது. மேலும், ஓர் இயல் என்பது தெளிவான வரையறையும், எல்லையும் கொண்டிருந்தால்தான் அதை கற்பது சாத்தியம் ஆகும்.
நான்கு வரையறைகள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலும் பொருளியலின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்ப நான்கு வரையறைகள் தரப்பட்டுள்ளன. அவை
1. தொன்மை காலத்தை உணர்த்தும் ஆடம் ஸ்மித்தினுடைய செல்வ இலக்கணம்;
2. புதிய தொன்மை காலத்தை உணர்த்தும் மார்ஷலின் நல இலக்கணம்;
3. புதிய யுகத்தை உணர்த்தும் இராபின்ஸின் பற்றாக்குறை இலக்கணம்;
4. நவீன யுகத்தை உணர்த்தும் சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணம்.ஆடம்ஸ்மித் (1723-1790) "நாடுகளின் செல்வத்தின் இயல்பும், காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு" (1776) என்ற தனது நூலில் "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்" என்று வரையறுத்துள்ளார்.
அவர் ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை விளக்குகின்றார். அவரைப் பொறுத்தவரை சமுதாயத்தில் உள்ள தனி மனிதர்கள் தங்கள் சுய இலாபத்தை முன்னேற்ற விரும்புவதாக அவர் கருதுகிறார். தனிமனிதர்கள் அவ்வாறு செயல்படும்போது அவர்களை திரைக்குப் பின்னாலிருந்து ஒரு புலனாக உந்து சக்தி (Invisible hand) வழி நடத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக ஸ்மித் கூறுகிறார். ஒவ்வொரு நபரும் தனது சுய நன்மைக்காக உழைக்கிறான்.
உற்பத்தியின் அளவினை அதிகரிக்க "வேலை பகுப்புமுறை"யை (Division of Labour) அறிமுகப்படுத்துவதை ஸ்மித் ஆதரிக்கின்றார். சமுதாயம் மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்கின்றன. அளிப்பு ஆற்றல் மிகுந்து இருப்பதினால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கின்றன.
ஆடம்ஸ்மித்தின் நூலான "நாடுகளின் செல்வம்" (1776)- வெளியீட்டுக்குப்பின் பொருளியல் ஒரு தனி இயலாக உருவானது.
திறனாய்வு
ஸ்மித்தைப் பொறுத்தவரை, பொருளியல் என்பது 'செல்வத்தைத் திரட்டுதல்' மற்றும் 'செல்வத்தைச் செலவிடுதல்' சார்ந்த நடவடிக்கைகளாகும். பொருட்சார் செல்வம் என்ற ஒன்றிற்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. செல்வமே இறுதியானதாக கருதப்பட்டுள்ளது. இந்த கருத்தினால் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான மனித நலம் அவரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மதம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் மேலோங்கியிருந்த காலக் கட்டத்தில் ஸ்மித் தனது வரையறையை வழங்கியுள்ளார். எனவே, இரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர், நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தைக் கற்றுத் தருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுவதால், பொருளியலை ஓர் "இருண்ட அறிவியல்" (dismal science) எனக் கூறியுள்ளனர்.
ஆல்ஃபிரட் மார்ஷல் (1842-1924) தன்னுடைய " பொருளியல் கோட்பாடுகள்" (1890) என்ற நூலில் பொருளியலை கீழ்வருமாறு வரையறுத்துள்ளார்:
"அரசியல் பொருளியல் அல்லது பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும், பொருள் சார் நலனை அடைவதின் பொருட்டு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வதும் ஆகும். பொருளியல் ஒருபுறம் செல்வத்தைப்பற்றியும், முக்கியமான மற்றொருபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது".
மார்ஷல் வரையறையின் சிறப்பம்சங்கள்
அ) அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முதலும், முடிவுமானது செல்வமே என்று பொருளியலில் கருதப்படவில்லை . மனிதன் முதலில் நலத்தையே மேம்படுத்த முயல்கிறான், செல்வத்தையல்ல.
ஆ) பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையைப் பற்றியதே; அந்தச் சாதாரண மனிதர்கள் அன்பினால் கட்டுப்பட்டவர்களேயன்றி, உச்ச பட்ச பணம் பெறுவதை நோக்கிச் செல்பவர்கள் அல்லர்.
இ) பொருளியல் ஒரு சமூக அறிவியல் ஆகும். அது சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றிப் படிக்கிறது.
திறனாய்வு
அ) மார்ஷல், பொருள்சார் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளார். அவர் பொருள்சாரா நலனைத் தரக்கூடிய மருத்துவர், ஆசிரியர் போன்றோரது பணிகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், அவர்களது பணிகளும் மனித நலனை மேம்படுத்துகிறது.
ஆ) பொருள் சாரா பணிகளுக்கு வெகுமதியாக அளிக்கப்படும் பணத்தினைப் பற்றி, மார்ஷல் தனது கூலிக் கோட்பாட்டில் ஏதும் கூறாமல் புறக்கணித்துவிட்டார்.
இ) மார்ஷலின் இலக்கணமானது நலன் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், நலன் என்பது தெளிவுற வரையறுக்கப்படவில்லை. நலன் என்பது மனிதருக்கு மனிதர், நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபடக்கூடியது. மக்கள் நலனை மேம்படுத்தும் மற்றும் மேம்படுத்தாத பொருட்களை பற்றி மார்ஷல் தெளிவாக வேறுபடுத்தி காட்டியுள்ளார். ஆனால் நடைமுறையில், பொருளாதாரத்தில் மதுபானங்கள் போன்ற பொருட்கள் மனிதநலனை மேம்படுத்துவதாக இல்லை எனினும், விலை பெறுபவையாக உள்ளதால், அவையும் பொருளியலின் எல்லைக்குள் உட்படுத்தப்படுகிறது.
ஈ) எனினும், நலன் என்பது தனி மனிதனோ அல்லது மனிதர்களின் குழுவோ மகிழ்ச்சியாகவோ அல்லது வசதியாகவோ வாழ்வதாகும். தனிமனிதனின் நலன் அல்லது நாட்டின் நலனானது அந்த நாடு கொண்டுள்ள செல்வ இருப்பை மட்டுமே சார்ந்தது அல்ல. அது அந்நாட்டின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளையும் சார்ந்ததாகும்.
இலயனல் ராபின்ஸ், “பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை” என்ற தமது நூலை 1932ல் வெளியிட்டார். அவரை பொறுத்த வரையில் பொருளியல் என்பது “விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே” ஆகும்.
ராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள்:
அ) விருப்பங்கள் மனிதனின் தேவைகளை குறிக்கின்றன. மனிதர்கள் எல்லையற்ற தேவைகளை உடையவர்கள்.
ஆ) மனிதர்களின் எல்லையற்றதேவைகளை பூர்த்திசெய்யும் வளங்களின் அளிப்புகள் குறைவானதாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ உள்ளன. ஒரு பொருளின் பற்றாக்குறை என்பது அதன் தேவையை பொருத்து அமைகிறது.
இ) மேலும், பற்றாக்குறையான வளங்கள் மாற்று வழிகளில் பயன்தரக் கூடியவையாக உள்ளன. எனவே, மனிதன் தன் தேவைகளை வரிசைப்படுத்தி, முதலில் மிகுந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்கிறான். எனவே, ராபின்ஸ் கூற்றுப்படி பொருளியல் என்பது தேவைகளைத் தேர்வு செய்யும் அறிவியலாகும்.
திறனாய்வு
அ) ராபின்ஸ் மனிதர்களுக்கு நலன் தரக்கூடிய பொருட்கள் அல்லது நலன்தரா பொருட்கள் என்று தரம் பிரிக்கவில்லை. அரிசி மற்றும் மதுபானம் ஆகிய இரண்டு உற்பத்தியிலும், பற்றாக்குறையான வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரிசியை உற்பத்தி செய்வதால் மனிதனின் நலன் மேம்படுகிறது. ஆனால் மதுபான உற்பத்தி மனிதனின் நலனை மேம்படுத்தாது. ஆனாலும், முடிவுகளைச் சமமாகவே பொருளியல் கருதுகிறது என ராபின்ஸ் கூறுகிறார்.
ஆ) பொருளியல் என்பது நுண்ணியல் பொருளியல் கருத்துக்களான வளங்களைப் பங்கிடுதல், பண்டங்களின் விலைத் தீர்மானம் ஆகியவற்றை மட்டுமே கூறுவது அல்ல. அது பேரியல் பொருளாதார நிகழ்வுகளான தேசிய வருவாய் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் உள்ளடக்கியது. ஆனால் ராபின்ஸ் பொருளியலை வளங்களை ஒதுக்கீடு செய்யும் இயலாக மட்டுமே சுருக்கிக் கூறிவிட்டார்.
இ) ராபின்ஸின் இலக்கணமானது பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கவில்லை.
பால் அந்தோணி சாமுவேல்சனின் புத்தகம், "பொருளாதாரம் ஒரு அறிமுக பகுப்பாய்வு" 1948. அவரின் கூற்றுப்படி பொருளியல் என்பது, "மனிதனும், சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான வளங்களைக் கொண்டு, பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து, அவற்றை தற்காலத்திலும் எதிர்காலத்திலும், மக்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் இயலாகும்" என வரையறை செய்கிறார்.
வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்கள்
அ) எல்லையற்ற இலக்குகளோடு தொடர்புடைய சாதனங்கள் பற்றாக்குறையானவை, அவை மாற்றுப் பயனுடையவை என ராபின்சைப் போன்றே பால் சாமுவேல்சனும் கூறுகிறார்.
ஆ) சாமுவேல்சன் தன்னுடைய இலக்கணத்தில் காலத்தையும் சேர்த்து இயக்கத் தன்மையுடையதாக உருவாக்கியுள்ளார். எனவே, அவரது இலக்கணம் பொருளாதாரவளர்ச்சியை உள்ளடக்கியதாக உள்ளது.
இ) சாமுவேல்சனின் இலக்கணம் பணம் பயன்படுத்தப்படாத, பண்டமாற்றுப் பொருளாதாரத்திற்கும் பொருந்தக்கூடியது.
ஈ) சாமுவேல்சனின் இலக்கணம், உற்பத்தி, பகிர்வு மற்றும் நுகர்வு போன்ற பல கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
உ) சாமுவேல்சன் பொருளியலை ஒரு சமூக அறிவியலாகக் கருதினார். ஆனால் ராபின்ஸ் பொருளியலை தனி மனிதனின் நடத்தை பற்றிய அறிவியலாகக் கருதினார்.
மேற்காண் அனைத்து இலக்கணங்களிலும் சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணமே அதிக திருப்திகரமானதாகக் கருதப்படுகிறது.