Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொருளியல் முறைகள், கூறுகள், கோட்பாடுகள் மற்றும் விதிகள்
   Posted On :  26.07.2022 07:32 pm

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்

பொருளியல் முறைகள், கூறுகள், கோட்பாடுகள் மற்றும் விதிகள்

மற்ற அறிவியலைப் போன்று பொருளியலும் அதற்குரிய விதிகளைக் கொண்டுள்ளது.

பொருளியல் முறைகள், கூறுகள், கோட்பாடுகள் மற்றும் விதிகள்


1. பொருளியல் ஆய்வு முறைகள்:பகுத்தாய்வு மற்றும் தொகுத்தாய்வு

மற்ற அறிவியலைப் போன்று பொருளியலும் அதற்குரிய விதிகளைக் கொண்டுள்ளது. இந்த விதிகள் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் பகிர்வு ஆகியவற்றோடு தொடர்புடையவை.


தர்க்கரீதியாக ஒருவிதியை அடைவதும் அல்லது அறிவியல் ரீதியாக பொதுமைப்படுத்துவதும் ஆய்வு முறை எனப்படும்.

பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. 

அ) பொருளியல் பகுத்தாய்வு முறை

பகுத்தாய்வு முறையை பகுத்தறியும் முறை என்றும் கருத்தியலான முறை என்றும் கூறுவதுண்டு. பகுத்தாய்வு முறை என்பது முழுமை தொகுதியினை பற்றிய கருத்தின் அடிப்படையில் அதன் தனி அலகு ஒன்றினைப் பற்றி கருத்துக் கூறுவதாகும். புகழ்பெற்ற தொன்மை மற்றும் புதிய தொன்மை பொருளியல் அறிஞர்களான ரிக்கார்டோ ,சீனியர் ஜே.எஸ்.மில்,மால்தஸ், மார்ஷல், பிகு ஆகியோர் தமது பொருளியல் ஆய்வில் இம்முறையை பெரிதும் பயன்படுத்தினர்.

பகுத்தாய்வு முறையின் படிகள்

படி 1: எந்த பிரச்சினையை ஆராய்கிறோம் என்பதை துல்லியமாகவும், தெளிவாகவும் ஆராய்ச்சியாளர் அறிந்திருக்க வேண்டும்.

படி 2: ஆய்வில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருத்துக்களை தெளிவாக ஆய்வாளர் வரையறுக்க வேண்டும். மேலும், கோட்பாட்டின் எடுகோள்கள் சுருக்கமாக கூறப்படவேண்டும்.

படி 3: அனுமானங்களின் (Assumptions) வாயிலாக கருதுகோள்களை (Hypothesis) உருவாக்க வேண்டும்.

படி 4: கருதுகோள்கள் எதார்த்த உலகில் நேரடி உற்றுநோக்கல் மூலமாகவும், புள்ளியியல் ஆய்வு முறைகள் மூலமாகவும் சரிபார்க்கப்பட வேண்டும். (உ.ம்.) ஒரு பண்டத்தின் விலைக்கும் அப்பண்டம் தேவைப்படும் அளவிற்கும் தலைகீழ் உறவு உள்ளது.

ஆ) பொருளியல் தொகுத்தாய்வு முறை

தொகுத்தாய்வு முறை செயலறி முறை என்றும் அழைக்கப்படுகிறது. இதனை வரலாற்றுப் பள்ளியை சேர்ந்த பொருளியல் அறிஞர்கள் பின்பற்றினர். இம்முறை தனிக் கருத்திலிருந்து பொதுக் கருத்தைப் பெறுவதாகும்.

கீழ்க்காணும் முறைகளின் அடிப்படையில் பொருளியல் பொதுமைகள் பெறப்படுகின்றன.

(i) பரிசோதனைகள் 

(ii) உற்று நோக்குதல் மற்றும் 

(iii) புள்ளியியல் முறைகள் 

படி 1: ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து, அவைகளை முறையாக ஒழுங்குபடுத்தி அவற்றிலிருந்து பொது முடிவுக்கு வருவதாகும்.

படி 2: விவரங்களை உற்று நோக்குவது மூலம் முடிவுக்கு வருவதும் எளிது.

படி 3: விவரங்களைப்பொதுமைப்படுத்தி கருதுகோள்கள் உருவாக்குதல்.

படி 4: கருதுகோள்களை சரிபார்த்தல்

(உ.ம்.) ஏங்கலின் விதி.

ஏங்கலின் விதியின்படி, "உணவுப் பண்டங்களுக்காக செலவிடப்படும் செலவின் சதவீதம், மொத்த செலவு (வருமான உயர்வின் போது) அதிகரிக்கும்போது குறையும்.

இன்றைய பொருளாதார அறிஞர்கள் இரண்டு முறைகளும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக கருதுகின்றார்கள். ஆல்ஃபிரட் மார்ஷலின் கூற்றுப்படி: "நடப்பதற்கு வலது காலும், இடது காலும் எவ்வாறு அவசியமோ, அது போல பகுத்தாய்வு முறையும், தொகுத்தாய்வு முறையும் அறிவியல் ஆய்வுக்கு அவசியமாகும்".


2. பொருளாதார உண்மைகளும், கோட்பாடுகளும்

பொருளாதார அறிஞர்கள் ஆய்வு முறைகளை பயன்படுத்தி உண்மைகளை உற்றுநோக்குகின்றனர். எடுத்துக்காட்டாக, பண்டத்தின் விலையில் ஏற்படுகின்ற மாற்றத்தால் பண்டத்தின் தேவை அளவில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்கின்றார்கள்.

இதன் மூலம் இரண்டு மாற்றங்களும் தலைகீழ் தொடர்புடையன என்பதை உணர்கிறார்கள். அதாவது விலை அதிகரிக்கும்போது பண்டத்தின் தேவையின் அளவு குறைகிறது. இவ்வாறு தேவைக் கோட்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்ற பல கூறுகளை பல காலங்களில் பல இடங்களில் ஆராய்ந்த பிறகு உருவாகக் கூடிய கோட்பாடானது, விதியாக உயர்வுப் பெற்று உலகளாவிய விதி என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


3. பொருளியல் விதிகளின் இயல்புகள் 

ஒரு விதி எனப்படுவது இருவேறு அல்லது அதற்கு மேலான காரணிகளுக்கு இடையேயான காரண காரிய தொடர்பினை விளக்குவதாகும். மார்ஷல் பொருளியல் விதிகளை போக்குரைக் கூற்றுகள் (Statement of tendencies) என்கிறார். பணவிலையால் அளவிடத்தக்க நடவடிக்கைகளின் உந்துதலை விவரிக்கும் சமூக விதிகள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இயற்கை அறிவியலில் ஒரு குறிப்பிட்ட காரணத்தைப் பின்பற்றி உறுதியான விளைவு எதிர்பார்க்கப்படுகிறது. பொருளியலில் விதிகள், காரணம் மற்றும் விளைவு ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பைக் கொண்டு இயங்குகின்றன. இங்கு புள்ளி விவரங்களின் மூலம் கணிக்கப்படுகிறன்ற விளைவுகள் அவசியமானவையாகவும், தவிர்க்க முடியாதவையாகவும் உள்ளது. இருப்பினும் பொருளியல் விதிகள், இயல் அறிவியல்களைப் போன்று துல்லியமானவை அல்ல. புவிஈர்ப்பு விசையின் துல்லியத்தன்மையோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு பொருளியல் விதிகள் இல்லை என்கிறார் மார்ஷல்.

இயல் அறிவியலாளர்கள் அறிவியல் தன்மைகளை ஆய்வுக்கூடத்தில் கருவிகளின் துணையால் திரும்பத் திரும்ப ஆராய்ந்து தெளிவான, துல்லியமான முடிவுகளுக்கு வர இயலும். மாறுகின்ற மனநிலையைக்கொண்ட மனிதர்களின் நடத்தைகளைக் கொண்டு எதிர்பார்க்கப்படும் கணிப்பு தவறானதாக அமையும். எனவே பொருளியல் அறிவியலில் மாற்றங்களை எளிதில் கொண்டுவர இயலாது. தேவை விதிக்கு பல விதிவிலக்குகள் உள்ளன. எனவே பொருளாதார விதிகள் மீற முடியாதவை அல்ல.

நுண் பொருளியலின் முக்கியத்துவம்

ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது 

பொருளாதாரக் கொள்கைக்கான கருவிகளைத் தருகிறது. 

பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது. 

வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது. 

பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது. 

பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது 

வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது 

முன் கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது. 

விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.

மார்ஷல், பொருளியல் விதிகளை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதாக கணிக்க முடியாது. எனவே பொருளியல் விதிகளை அலைகளின் விதிகளோடு ஒப்பிடலாம் என்கிறார். குறைவான காற்றழுத்தம் கொண்ட அலைக்கு பின்னர் அதிக உயரமான அலைகள் வரும் என்பதை எப்படி உறுதியாக கூறமுடியாதோ, அது போல பொருளியல் விதிகளை உறுதியிட்டு சொல்ல இயலாது. ஏனெனில் மனிதனின் நடத்தைகள் எளிதில் மாறக்கூடியவையாக உள்ளன (உ.ம்.) மற்றவை மாறாதிருக்கும் போது, ஒரு பண்டத்தின் விலை குறைந்தால் அப்பண்டத்தின் தேவை அதிகரிக்கும். அதற்கு மாறாக, விலை அதிகரித்தால் அப்பண்டத்திற்கான தேவை குறைகிறது என்று தேவை விதி எடுத்துரைக்கின்றது.

'மற்றவை மாறாமலிருக்க' (Ceteris paribus) எனும் அனுமானத்தை (Assumption) பயன்படுத்துவதால் பொருளாதார விதிகள் கருதுகோள்களாகின்றன. இருப்பினும் இயல் அறிவியலில் உள்ள கற்பனைக் கூறுகளைவிட பொருளியலில் உள்ள கற்பனைக் கூறுகள் குறைவானவை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

பணத்தை அளவுகோலாகப் பயன்படுத்துவதால், பொருளியலின் விதிகள் சரியானவையாகவும், சுருக்கமானவையாகவும், பிற சமூக அறிவியல்களை விட துல்லியமானவையாகவும் உள்ளன. எனினும், அளவுகோலான பணத்தின் மதிப்பே நிலையாக இல்லாத காரணத்தால், பொருளாதார விதிகளை எப்போதும் அனுமானங்கள் சூழ்ந்துள்ளன. பொருளாதார விதிகள் உலகறிந்த உண்மைகளாக உள்ளன. உதாரணமாக சேமிப்பு வருமானத்தை சார்ந்துள்ளது. மற்றொரு உலகறிந்த உண்மை மனித விருப்பங்கள் எண்ணற்றவை.


11th Economics : Chapter 1 : Introduction To Micro-Economics : Economics: Its Methods, Facts, Theories and Laws in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம் : பொருளியல் முறைகள், கூறுகள், கோட்பாடுகள் மற்றும் விதிகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்