Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொருளியலின் எல்லை
   Posted On :  26.07.2022 03:38 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்

பொருளியலின் எல்லை

பொருளியலின் எல்லை என்பது பொருளியலின் பாடப் பொருளாகும்.

பொருளியலின் எல்லை

பொருளியலின் எல்லை என்பது பொருளியலின் பாடப் பொருளாகும்.பொருளியல் ஒரு கலையா அல்லது ஓர் அறிவியலா மற்றும் அறிவியலாக இருப்பின் அது இயல்புரையியலா அல்லது நெறியுரையியலா என்பது இங்கு தெளிவுபடுத்தப்படுகிறது.


1. பொருளியல் : பாடப்பொருள்


 பொருளியல், பொருளாதாரத்தில் உள்ள அமைப்புகள், தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் நடத்தைகள் மற்றும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளில் கவனம் செலுத்துகிறது. இது பண்டங்கள் மற்றும் பணிகளின் நுகர்வு, உற்பத்தி மற்றும் உற்பத்திக் காரணிகளுக்கான வருமானப் பகிர்வு ஆகியவைகளை ஆராய்கிறது. நடைமுறையில் இருக்கும் சமுதாய, சட்ட மற்றும் நிறுவன அமைப்புகளின் அடிப்படையில் பகுத்தறிவுள்ள மனிதர்களின் நடவடிக்கைகளைப் பொருளாதாரம் உள்ளடக்கியுள்ளது. பொருளாதார அறிவியலில், சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாதவைகள் மற்றும் நெறிமுறை இல்லாத நடவடிக்கைகள் சேர்க்கப்படுவதில்லை.

பொருளியல், கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி, மனிதனுடைய பன்முக விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வழிகளைப் பற்றி ஆராய்கிறது. பற்றாக்குறை என்பது மக்களின் விருப்பத்திற்கும், அதற்குத் தேவையான வளங்களுக்குமிடையே உள்ள இடைவெளியாகும். மனிதனுடைய விருப்பங்களைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகவோ அல்லது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்களின் அளிப்பை அதிகரிப்பதன் மூலமாகவோ பற்றாக்குறையை சரிசெய்ய முடியும். விருப்பத்தைக் குறைத்துக் கொள்வதை விட, பண்டங்களின் அளிப்பை அதிகப்படுத்துவதே சிறந்தது என சில பருப்பொருள்சார் பொருளியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

•  பொருளியல் மனித நடவடிக்கைகளோடு தொடர்புடையது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள்; மற்றும் ஒருவரின் செயல் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கும். ஆகவே, பொருளியல் மனித அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்று அழைக்கப்படுகின்றது.

பகுத்தறிவுள்ள அல்லது சாதாரண மனிதனின் நடவடிக்கைகளே பொருளியலின் பாடப்பொருளாகும்.

மனிதனின் செல்வம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் பொருளியலின் பாடப்பொருளாகும். எனவே செல்வம் சாராத மனித நடவடிக்கைகள் (பொருளாதாரம் சாராநடவடிக்கைகள்) பொருளியலில் சேர்க்கப்படுவதில்லை. உதாரணமாக, மகிழ்ச்சிக்காக மட்டைப் பந்து விளையாடுதல், தாயின் குழந்தைப் பராமரிப்பு போன்றவை பொருளியல் பாடப் பொருளாக கருதப்படாது.

பொருளியல் ஒரு கலையா அல்லது ஓர் அறிவியலா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அது அறிவியல் எனில் அதனுடைய குறிப்பிடத்தக்க இயல்புகளை தெளிவாகக் கூறவேண்டும்.


2. பொருளியல் என்பது ஒரு கலை மற்றும் அறிவியல்

(i) பொருளியல் ஒரு கலை

கலை என்பது நடைமுறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இலக்குகளை அடைய அறிவைப் பயன்படுத்துவதாகும். பொருளியல் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிகாட்டுகிறது.

A.C. பிகு, ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் பலர் பொருளியலை ஒரு கலையியல் என்கின்றனர்.

(ii) பொருளியல் ஓர் அறிவியல் 

அறிவியல் என்பது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஓர் அறிவுத் தொகுதியாகும். தொடர்புடைய அனைத்து உண்மைகளும் சேகரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு அளவிடப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற உண்மைகளைப் பயன்படுத்தி காரண - விளைவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை அறிவியல் எடுத்துரைக்கின்றது.

அறிவியல் விதிகள் பரிசோதனைகள் மூலம் சோதிக்கப்பட்டு எதிர்கால கணிப்புகளை உருவாக்குகின்றன. இந்த விதிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இயற்பியல், வேதியியலைப் போன்றே பொருளியலும் ஓர் அறிவியல் என்று ராபின்ஸ், ஜோர்டன் மற்றும் ராபர்ட்சன் போன்ற பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பொருளியல் அறிவியலைப் போன்று பல ஒருமித்த பண்புகளை கொண்டுள்ளது.

பொருளியல், பிரச்சினைக்களுக்கான காரண-விளைவுக்களுக்கு இடையேயுள்ள உறவுகளைப் பற்றி ஆராய்கிறது. ஆகையால் பொருளியல் கலை மற்றும் அறிவியலாக கருதப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.


3. பொருளியல்: இயல்புரை அறிவியல் மற்றும் நெறியுரை அறிவியல்

இயல்புரை அறிவியல், உள்ளதை உள்ளவாறு கூறுகிறது. அதாவது பிரச்சினையை உண்மையின் அடிப்படையில், அதன் காரணங்களின்


மூலம் ஆய்வு செய்கிறது. எடுத்துக்காட்டாக, விலை ஏற்றத்தின்போது, அதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன.

நெறியுரை அறிவியல், எதுவாக இருக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடையளிப்பதாக உள்ளது. இங்கு முடிவுகள் உண்மையின் அடிப்படையில் அமைவதில்லை . ஆனால் சமூக, பண்பாடு, அரசியல், சமயம் சார்ந்த வெவ்வேறான கருத்துக்களின் அடிப்படையில் அமைகிறது. இது அடிப்படையில் உள்ளுணர்வு சார்ந்ததாக இருக்கிறது.

சுருக்கமாக, இயல்புரை அறிவியல் என்பது ஏன் மற்றும் எப்படி என்பதையும், நெறியுரை அறிவியல் எதுவாக இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எளிதாக விளக்கலாம்.

வட்டிவீதம் அதிகரிக்கும்போது, இயல்புரை அறிவியல் வட்டி வீதத்தை ஏன் குறைக்க வேண்டும், எப்படிக் குறைப்பது என்று கூறுகிறது. நெறியுரை அறிவியல் என்பது வட்டி வீதம் அதிகரிப்பதால் ஏற்படக் கூடிய நன்மை அல்லது தீமையைக் கூறுகிறது.

இயல்புரை மற்றும் நெறியுரைப் பொருளியலை விளக்கும் மூன்று கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

இயல்புரைப் பொருளியல் 

அ) பண அளிப்பு அதிகரிப்பு பொருளாதாரத்தில் விலை ஏற்றத்தை ஏற்படுத்துகிறது. 

ஆ) நீர்ப்பாசன வசதி மற்றும் இரசாயன உரங்களின் விரிவாக்கத்திற்கேற்ப உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கிறது.

இ) பிறப்பு வீத அதிகரிப்பும், இறப்பு வீதக் குறைவும் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தில் பிரதிபலிக்கின்றன. 

நெறியுரை பொருளியல் 

அ) பணவாட்டத்தை விட பணவீக்கமே மேலானது.

ஆ) வளர்ச்சி குறைந்த நாட்டில் ஆடம்பரப் பண்டங்களை அதிகமாக உற்பத்தி செய்வது நல்லதல்ல.

இ) செல்வம் மற்றும் வருமானப் பகிர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட வேண்டும்.



11th Economics : Chapter 1 : Introduction To Micro-Economics : Scope of Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம் : பொருளியலின் எல்லை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்