பொருளியலின் உட்பிரிவுகள்
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கையின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது. இந்தப் பகுதியில் மனித விருப்பங்களின் இயல்புகளின் அடிப்படையில், நுகர்வோரின் நடத்தை, குறைந்துசெல் பயன்பாடு, நுகர்வோர் உபரி போன்ற பல விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும். இது உற்பத்தி காரணிகளின் இயல்புகளை உள்ளடக்கி உள்ளது. அதாவது நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு மேலும் உள்ளீடு, வெளியீடுகளுக்கு இடையேயான உறவு ஆகியன இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன.
பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது. இதன் பிரிவு வர்த்தகம் (trade) மற்றும் வணிகத்தை (commerce) உள்ளடக்கியது. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்றபோதுதான் நுகர்வு சாத்தியமாகிறது.
உற்பத்தி என்பது உற்பத்திகாரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும். இவ்வாறாக நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு போன்றவைகளின் முயற்சியால் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட செல்வங்கள் உற்பத்தி காரணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இப்பிரிவில் உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்படும் ஊதியங்களான வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் ஆகியவற்றைப் பற்றி படிக்கப்படுகிறது. பகிர்வு என்னும் பகுதி உற்பத்தி காரணிகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை விளக்குகிறது.