இரத்த
அழுத்தம்
தமனிகளின் வழியே இரத்தம் ஓடும்
போது அத்தமனிகளின் பக்கவாட்டுச் சுவர் மீது இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தமே இரத்த
அழுத்தம் எனப்படும்.
இரத்த அழுத்தமானது தமனிகளில்
அதிகரித்து, ஆர்டிரியோல்கள் மற்றும் தந்துகிகளில் படிப்படியாக குறைந்து பின்னர் மிகக்
குறைவான இரத்த அழுத்தம் சிரையில் காணப்படுகிறது.
பொதுவாக இரத்த அழுத்தம்
சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் என குறிப்பிடப்படுகிறது.
சிஸ்டோலிக் அழுத்தம்
வென்ட்ரிகுலார் சிஸ்டோல்
நிகழ்வின் போது இடது வெண்ட்ரிக்கிள் சுருங்குவதால் இரத்தம் பெருந்தமனிக்குள் மிக
வேகமாக செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வின் போது ஏற்படும் மிகை அழுத்தம் சிஸ்டோலிக்
அழுத்தம் எனப்படும்.
டயஸ்டோலிக் அழுத்தம்
டயஸ்டோல் நிகழ்வின் போது இடது
வென்ட்ரிக்கிள்கள் விரிவடைவதன் காரணமாக அழுத்தம் குறைகிறது. இக்குறை அழுத்தமே
டயஸ்டோலிக் அழுத்தம் எனப்படும்.
ஒரு ஆரோக்கியமான மனிதரில் ஓய்வாக
உள்ள நிலையில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது 120mmHg / 80mmHg அளவில்
காணப்படுகிறது. உடற்பயிற்சி, கவலை, உணர்ச்சி
வசப்படுதல், மன அழுத்தம் மற்றும் உறக்கம் போன்ற நிலைகளில்
இவ்வளவீடு மாறுபடுகிறது.
தொடர்ந்து அல்லது அடிக்கடி இரத்த
அழுத்தம் அதிகரித்தல் ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) எனப்படும்.
ஹைபர்டென்ஷன் அதிகரிப்பதன் மூலம் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் உண்டாகின்றன. குறைவான
இரத்த அழுத்த நிலை ஹைப்போடென்ஷன் (குறை இரத்த அழுத்தம்) எனப்படும்.
மனித உடலின் உள்ளுறுப்புகள்
ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய ஸ்டெத்தாஸ்கோப் பயன்படுகிறது. ஸ்டெத்தாஸ்கோப்பினை
மார்புப் பகுதியில் வைத்து இதயத்தின் ஒலியினைக் கேட்டறியலாம். இது ஒரு குறிப்பிட்ட
இடத்தில் சிக்கல் உள்ளதைத் தெரிந்து கொண்டு நோய்களை அடையாளம் கண்டறிய உதவும்
சாதனமாகும். நவீன மின்னணு ஸ்டெத்தாஸ்கோப் மிகவும் துல்லியமானது.
இரத்த அழுத்தத்தைக் கண்டறிய
உதவும் மருத்துவ உபகரணம் ஸ்பிக்மோமானோ மீட்டர் ஆகும். இக்கருவியைக் கொண்டு ஒரு
மனிதனின் மேற்கரத் தமனியின் அழுத்தம், அவர் ஓய்வாக உள்ள நிலையில் அளவிடப்படுகிறது.
மேலும் இக்கருவி இரத்த ஓட்டத்தின் நிலையையும், இதயம் செயல்படுவதையும்
கண்டறிய உதவுகிறது. குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்த நிலைகளைக் கண்டறிய
உதவுகிறது. மானோமெட்ரிக் மற்றும் நவீன எண்ணியல் (டிஜிட்டல்)
வகையிலான உபகரணங்கள் இரத்த அழுத்தத்தினை அளக்க உதவும் சாதனங்களாகும்.