மனித
இதயத்தின் அமைப்பு
இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை
உந்தித் தள்ளும் தசையால் ஆன விசையியக்க உறுப்பு இதயம் ஆகும். மனித இதயம்
நுரையீரலுக்கு இடையில்,
மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக
சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதயம் கார்டியாக் தசை
எனும் சிறப்புத் தசையால் ஆனது.
இதயம் இரண்டு அடுக்கினால் ஆன
பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது. இவ்வடுக்கின் இடைவெளியில் நிரம்பியுள்ள பெரிகார்டியல்
திரவம் இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால்
ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும் உயவுப் பொருளாக உள்ளது.
மனித இதயம் நான்கு
அறைகளைக்கொண்டது. மெல்லிய தசையால் ஆன மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது
ஏட்ரியங்கள் (ஒருமை - ஏட்ரியம்) என்றும் தடித்த தசையால் ஆன
கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும்.
இவ்வறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் ‘செப்டம்' எனப்படும்.
ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள இடைச் சுவரினால்,
ஆக்சிஜன் மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த இரத்தம் ஒன்றுடன் ஒன்று
கலவாமல் தடுக்கப்படுகிறது.
இரண்டு ஆரிக்கிள்களும், ஆரிக்குலார்
இடைத்தடுப்பு சுவரினால் பிரிக்கப்பட்டுள்ளன. வலது
ஆரிக்கிளை விட இடது ஆரிக்கிள் சிறியது. உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும்
ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை முக்கிய சிரைகளான மேற் பெருஞ்சிரை,
கீழ் பெருஞ்சிரை மற்றும் கரோனரி சைனஸ்
மூலம் வலது ஆரிக்கிள் பெறுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் மிகுந்த
இரத்தத்தினை நுரையீரல் சிரைகளின் மூலம் இடது ஆரிக்கிள் பெறுகின்றது. வலது
மற்றும் இடது ஆரிக்கிள்கள் முறையே வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு
இரத்தத்தினை (உந்தித்தள்ளுகின்றன) செலுத்துகின்றன.
இதயத்தின் கீழ் அறைகள்
வெண்ட்ரிக்கிள்கள் எனப்படும். வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்கள், இடை
வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.
வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து
உருவான நுரையீரல் பொதுத்தமனி, வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகளாகப்
பிரிவடைகிறது. வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகள் முறையே வலது, இடது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை செலுத்துகின்றன.
இடது வெண்ட்ரிக்கிளானது வலது வெண்ட்ரிக்கிளைவிட சற்று பெரியதாகவும், சிறிது குறுகலாகவும் அமைந்துள்ளது. இதனுடைய சுவர் வலது வெண்ட்ரிக்கிளை விட
மூன்று மடங்கு தடிமனானது. இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி
தோன்றுகிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை
பெருந்தமனி அளிக்கின்றது. கரோனரி தமனி இதயத்தசைகளுக்கு இரத்தத்தை
அளிக்கிறது.
வால்வுகள்
இதய வால்வுகள் தசையால் ஆன சிறு
மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு உதவுகின்றன.
இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும்
உதவுகிறது. இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.
வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு
இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது
வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய
இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது.
வால்வின் இதழ் முனைகள் கார்டா டென்டினே என்ற தசை நீட்சிகளால்
வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.
இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு
இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது
வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது இரண்டு கதுப்பு போல
அமைந்துள்ளதால், ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு
என்றும் அழைக்கப்படுகிறது.
அரைச்சந்திர
வால்வுகள்
இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத்
தமனிகளில் (பெருந்தமனி,
நுரையீரல் தமனி) உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள்
இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன. அவை நுரையீரல் மற்றும் பெருந்தமனி
அரைச்சந்திர வால்வுகள் எனப்படுகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
முதுகெலும்பிகளின்
இதய அறைகள்
இரண்டு
அறைகள் : மீன்கள்
மூன்று
அறைகள் : இருவாழ்விகள்
முழுமையுறா
நான்கு அறைகள் : ஊர்வன
நான்கு
அறைகள் : பறவைகள், பாலூட்டிகள் மற்றும் முதலை (ஊர்வன)
நமது உடலில் இரத்தம் ஆக்சிஜன்
மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த சுற்றோட்டங்களைக் கொண்டது. சுற்றோட்டத்தின்
வகைகளாவன
i. சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஒட்டம்
இதயத்தின் இடது
வெண்ட்ரிக்கிளிலிருந்து துவங்கி ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் பல
உறுப்புகளுக்கு எடுத்து சென்று மீண்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை வலது
ஏட்ரியத்திற்கு கொண்டு வரும் சுற்றோட்டத்தினை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம்
என்கிறோம். ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும்
பெருந்தமனி எடுத்துச் செல்கிறது.
ii. நுரையீரல் இரத்த ஒட்டம்
வலது வெண்டிரிக்கிளிலிருந்து
இரத்தம் நுரையீரல் தமனியின் மூலம் நுரையீரலை அடையும். நுரையீரலிருந்து ஆக்சிஜன்
பெற்ற இரத்தம் நுரையீரல் சிரைகளின் மூலம் மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியத்தை
வந்தடையும். இவ்விதம்,
வலது வெண்டிரிக்கிளிலிருந்து நுரையீரல் வழியாக இரத்தம் மீண்டும்
இடது வெண்டிரிக்கிளைச் சென்றடைவதே நுரையீரல் இரத்த ஓட்டம் எனப்படுகிறது.
iii. கரோனரி சுற்றோட்டம்
இதயத் தசைகளுக்கு (கார்டியக்
தசைகள்) இரத்தம் செல்லுதல் கரோனரி சுழற்சி எனப்படும். இதயத் தசைகளுக்கு
ஆக்சிஜன் மிகுந்த இரத்தம் கரோனரி தமனி மூலமாக பெறப்படுகிறது. இது பெருந்தமனியின்
வளைவிலிருந்து உருவாகிறது. இதயத் தசையிலிருந்து ஆக்சிஜன் குறைந்த இரத்தம் கரோனரி
சைனஸ் மூலம் வலது ஏட்ரியத்தை வந்தடைகிறது.
ஒரு முழு சுழற்சியின் போது
இரத்தமானது இதயத்தின் வழியாக இருமுறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம்
எனப்படும். இம்முறையிலான இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த
இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.
ஆனால் சில விலங்கினங்களில்
ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும் ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்து
இதயத்தினுள் ஒரு முறை மட்டுமே சென்று வரும். இத்தகைய சுற்றோட்டம் ஒற்றை இரத்த
ஓட்டம் எனப்படும். எகா மீன்கள், இருவாழ்விகள் மற்றும் சில ஊர்வன.
இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும்
வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும்
(டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர். இதயமானது
சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72
- 75 முறை துடிக்கிறது.
மேலும் அறிந்து கொள்வோம்
நியூரோஜெனிக் மற்றும் மையோஜெனிக் இதயத் துடிப்பு
நரம்புத்
தூண்டலினால் நியூரோஜெனிக் இதயத்துடிப்பு உண்டாகிறது. இத்தூண்டல் இதயத்தின்
அருகில் உள்ள நரம்பு முடிச்சினால் தூண்டப்படுகிறது. எ.கா. வளைதசைப் புழுக்கள், பெரும்பாலான கணுக்காலிகள்
மையோஜெனிக் இதயத் துடிப்பானது மாறுபாடடைந்த சிறப்புத் தன்மை வாய்ந்த
இதயத்தசை நார்களால் தூண்டப்படுகிறது. எ.கா. மெல்லுடலிகள், முதுகெலும்பிகள்.
இதயத் துடிப்பு பரவுதல்
மனித இதயம் மயோஜெனிக்
வகையைச் சேர்ந்தது. இதயத்தசையில் காணப்படும் சிறப்புப் பகுதியான சைனோ ஏட்ரியல் கணு
(SA) இதயம்
சுருங்குவதைத் துவக்குகிறது. இது வலது ஏட்ரிய சுவரில் உள்ள மேற்பெருஞ்சிரைத்
துளையின் அருகில் காணப்படுகிறது. SA கணுவானது மேற்புறம்
அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது. இது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது.
SA கணுவானது
இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது. ஏனெனில் இது இதயத் துடிப்புகளுக்கான
மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது. சைனோ
ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய
சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார்
திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV)
கணுவிற்கு பரவுகிறது. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும்
புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை
சுருங்கச் செய்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஹிஸ் (1893) ஏட்ரியோ - வெண்ட்ரிக்குலார் கற்றைகளைக் கண்டறிந்தார். அதனால் இது ஹிஸ்
கற்றை என்று அழைக்கப்படுகிறது.
நாடித்துடிப்பு
இதயத் துடிப்பின் போது இரத்தமானது
தமனிகளுக்குள் உந்தித் தள்ளப்படுகிறது. இரத்தம் ஒவ்வொரு முறையும் தமனிகளுக்குள்
உந்தப்படும் போது தமனிகள் விரிவடைவதை நாடித்துடிப்பு என்கிறோம். இதனை மணிக்கட்டின்
அருகில் உள்ள தமனியின் மீது விரல் நுனியினை வைத்து உணரலாம். இயல்பான
நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 - 90 முறைகள் ஆகும்.
செயல்பாடு 3
இதயத் துடிப்பினைக் கண்டறிதல்
உபகரணங்கள் : நிறுத்துக் கடிகாரம்
செய்முறை : நீ ஓய்வாக அமர்ந்த நிலையில் உன் நண்பனைக் கொண்டு உன்
மணிக்கட்டின் நாடித் துடிப்பினை 15 வினாடிகளுக்கு கண்டறியவும். ஒரு
நிமிடத்திற்கு ஓய்வு நிலையில் இதயத் துடிப்பைக் கணக்கிடவும்.
நீ 5 நிமிடங்கள் நடந்து அல்லது ஓடிய பிறகு 15
வினாடிகளுக்கு உனது இதய துடிப்பினை கணக்கிட்டு, பின்னர் ஒரு
நிமிடத்திற்கான இதயத் துடிப்பின் வீதத்தினைக் கணக்கிடவும்.
ஆய்வு : நாடித் துடிப்பின் காரணம் என்ன?
ஒவ்வொரு
நிலையிலும் இதயத் துடிப்பின் மாற்றத்திற்குக் காரணம் என்ன?
ஓர் இதயத் துடிப்பு துவங்குவதற்கும்
முடிவடைவதற்கும் இடைப்பட்ட வரிசைக்கிரமமான நிகழ்வுகள் இதய சுழற்சி
(கார்டியாக் சுழற்சி) எனப்படும். இதய சுழற்சியின் போது, இரத்தமானது இதயத்தின்
அறைகளுக்குள் குறிப்பிட்ட திசையில் செல்லும். ஒவ்வொரு இதய சுழற்சியும் 0.8 வினாடிகளில் முடிவடையும்.
ஒரு இதய சுழற்சி கீழ்க்கண்ட
நிகழ்வுகளை உள்ளடக்கியது.
1. ஏட்ரியல்
சிஸ்டோல்:
ஆரிக்கிள்கள் சுருக்கம் (0.1 வினாடி)
2.
வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல்: வெண்ட்ரிக்கிள்கள் சுருக்கம் (0.3 வினாடி)
3. வெண்ட்ரிக்குலார்
டயஸ்டோல்:
வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைதல் (0.4 வினாடி)
இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான
முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது.
முதல் ஒலியான ‘லப்’ நீண்ட
நேரத்திற்கு ஒலிக்கும். வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும்
ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது. இரண்டாவது ஒலியான ‘டப்’ சற்று
குறுகிய காலமே ஒலிக்கும் இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில்
அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.