நீராவிப்
போக்கு
தாவரத்தின் புற
உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக
வெளியேறுவதே நீராவிப் போக்கு எனப்படும். ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டு காப்புச்
செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளையானது (stomata) பகலில் திறந்தும், இரவில் மூடியும் காணப்படும். இலைத்துளையின் செயல்பாடானது காப்புச்
செல்களின் விறைப்பழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது. பகலில் காப்பு செல்களுக்குள்
அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால்
இலைத்துளை திறந்து கொள்கின்றன. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால்
விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை
மூடிக் கொள்கிறது.
நீராவிப் போக்கின் காரணமாக
இலையிடைத்திசுவிலிருந்து (மீசோபில்) நீரானது இலைத்துளை வழியாக வெளியேறுவதால்
நீரின் செறிவு இலையிடைத்திசுவில் குறைகிறது. இதனால் சவ்வூடு பரவல் மூலம்
சைலத்திலிருந்து நீரானது மீண்டும் இலையிடைத் திசுக்களுக்கு செல்கிறது. இந்த
வேறுபாட்டின் காரணமாக இலையில் ஒரு இழுவிசை உண்டாகிறது. இது நீராவிப் போக்கு
இழுவிசை எனப்படும். இந்த இழுவிசை வேர் வரை கடத்தப்படுவதால் வேர்த்தூவியின் மூலம்
மீண்டும் மீண்டும் நீர் மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்டு தொடர்ச்சியாக இலைக்கு
செல்கிறது.
நீராவிப்
போக்கினைப் பாதிக்கும் காரணிகள்
நீராவிப் போக்கினைப் பாதிக்கும்
வெளிபுறக் காரணிகள் வெப்பநிலை,
ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்றின் திசைவேகம்.
உட்புறக் காரணிகள் இலைத் துளையின் எண்ணிக்கை மற்றும் விரவல், திறந்த நிலையிலுள்ள இலைத்துளைகளின் சதவீதம், தாவரத்தில்
இருக்கும் நீரின் அளவு, தாவரத்தின் அடுக்கு அமைவு போன்றவை.
நீராவிப்
போக்கின் முக்கியத்துவம்
• நீராவிப் போக்கின் இழுவிசையின்
காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.
• ஒளிச்சேர்க்கைக்கு தேவையான நீர்
கிடைக்கிறது.
• கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப்
பகுதிகளுக்கும் செல்ல உதவுகிறது.
• இலைகளின் மேற்பரப்பு
குளிர்ச்சியாக இருக்க நீராவிப் போக்கு உதவுகிறது.
• செல்கள் விறைப்புத் தன்மையுடன்
இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.