கரைசலின் செறிவு
கரைசல் என்றால் என்ன என்பதையும், கரைசலில் உள்ள
கூறுகள் மற்றும் அதன் வகைகளையும் விவாதித்தோம். பெரும்பாலான வேதிவினைகள் கரைசல்
நிலையிலேயே நிகழ்கின்றன. எனவே, அத்தகைய கரைசல்களில்
கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் சரியான அளவை அறிந்து கொள்வதன் மூலம் அதில்
நிகழும் விளைவுகளை நன்கு ஆராய இயலும். கரைசலில் உள்ள கரைபொருளின் சரியான அளவினை
குறிப்பதற்கு நாம் செறிவு என்ற பதத்தை பயன்படுத்துகிறோம்.
கரைசலின் செறிவு
என்பது “கொடுக்கப்பட்ட
கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு”
என வரையறுக்கப்படுகிறது.
கரைசலின் செறிவினை அளவிட பல்வேறு
முறைகள் உள்ளன. நாம் இங்கு நிறை சதவீதம் மற்றும் கனஅளவு சதவீதம் ஆகியவற்றை
பயன்படுத்தி ஒரு கரைசலின் செறிவினை எவ்வாறு கணக்கிடலாம் என்பதைக் காண்போம்.
நிறை சதவீதம் என்பது ஒரு கரைசலில்
உள்ள கரைபொருளின் நிறையை சதவீத்தில் குறித்தால் அது அக்கரைசலின் நிறை சதவீதம்
எனப்படும். இது திண்ம கரைபொருளையும், திரவக் கரைப்பானையும் கொண்ட கரைசலின் செறிவை
குறிக்க பயன்படுகிறது.
உதாரணமாக, 5% சர்க்கரைக்
கரைசல் என்பது 5 கி சர்க்கரையை, 95 கி
நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல் ஆகும். கரைசலின் மொத்த நிறை 100 கி ஆகும்.
வழக்கமாக நிறை சதவீதம் என்பது w/w என
குறிக்கப்படுகிறது. இது வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
கனஅளவு சதவீதம் என்பது ஒரு கரைசலில்
உள்ள கரைபொருளின் கனஅளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு
சதவீதம் என வரையறுக்கப்படுகிறது. இது திரவக் கரைபொருள் மற்றும் திரவக்
கரைப்பானைக் கொண்ட கரைசல்களின் செறிவைக் குறிக்க பயன்படுகிறது.
உதாரணமாக, 10% கனஅளவு
எத்தனால் நீர்க்கரைசல் என்பது 10 மி.லி எத்தனாலை 90 மி.லி நீரில் கரைத்து பெறப்படும் கரைசலை குறிக்கிறது.
பொதுவாக கனஅளவு சதவீதம் என்பது V/v என
குறிக்கப்படுகிறது. கனஅளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும் போது குறைகிறது.
ஏனெனில், திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்.
அன்றாட வாழ்வில் நாம்
பயன்படுத்தக்கூடிய திரவ மருந்துகள் (Syrup), வாய்கழுவும் திரவங்கள் (Mouth wash),
புரைத் தடுப்பான்கள் (Antiseptic), வீட்டு
உபயோகப் பொருட்கள், கிருமிநாசினிகள் போன்ற கரைசல்களில் உள்ள
கரைபொருளின் அளவுகள் v/v என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் களிம்புகள் (Ointment), அமிலநீக்கிகள், சோப்புகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செறிவுகள் w/w என்று குறிப்பிடப்படுகிறது.