கரைசல்களின்
வகைகள்
1. கரைபொருள் மற்றும்
கரைப்பானின் இயற்பியல் நிலைமையை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு
பொருள்கள் பொதுவாக மூன்று இயற்பியல்
நிலைகளில் (நிலைமை) காணப்படுகிறது. அவைகள் திண்மம், திரவம் மற்றும் வாயு. இருமடிக்கரைசலில் உள்ள
கரைபொருள் மற்றும் கரைப்பான் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு இயற்பியல் நிலையில்
காணப்படுகிறது. ஆனால் ஒரு கரைசலில் கரைப்பானின் பங்கு பெரும்பான்மையானது. அதனுடைய
இயற்பியல் நிலையானது, கரைசல்களின் பண்புகளை தீர்மானிப்பதில்
முக்கிய காரணியாக விளங்குகிறது. பல்வேறு வகையான இருமடிக்கரைசல்களை அட்டவணை 9.1-இல் காணலாம்.
2. கரைப்பானின்
தன்மையை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு
நீரில் பெரும்பாலான பொருட்கள்
கரைகிறது. எனவே நீர் ஒரு 'உலகளாவிய கரைப்பான்’ அல்லது ‘சர்வக்கரைப்பான்’ என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் சில பொருட்கள் நீரில் கரைவதில்லை.
இவற்றைக் கரைக்க ஈதர்கள், பென்சீன், ஆல்கஹால்கள்
போன்ற கரைப்பான்களைப் பயன்படுத்தி கரைசல்கள் தயாரிக்கப்படுகிறது. கரைப்பானின்
வகைகளை அடிப்படையாகக் கொண்டு கரைசல்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவைகளாவன:
நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல்.
அ) நீர்க்கரைசல்
எந்த ஒரு கரைசலில், கரைபொருளைக்
கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க்கரைசல் எனப்படும்.
உதாரணமாக நீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை, நீரில் கரைக்கப்பட்ட
காப்பர் சல்பேட் போன்றவைகளாகும்.
ஆ) நீரற்ற கரைசல்
எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர, பிற திரவங்கள்
கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்ற கரைசல் என அழைக்கப்படுகிறது. நீரைத்
தவிர பிற கரைப்பான்களை நீரற்ற கரைப்பான்கள் என அழைக்கிறோம். பொதுவாக ஆல்கஹால்கள்,
பென்சீன், ஈதர்கள், கார்பன்
டைசல்பைடு போன்றவை நீரற்ற கரைப்பான்களாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கார்பன்
டைசல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர், கார்பன் டெட்ரா குளோரைடில்
கரைக்கப்பட்ட அயோடின்.
3. கரைபொருளின் அளவை அடிப்படையாகக்
கொண்ட வகைப்பாடு
குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குறிப்பிட்ட அளவு
கரைப்பானில் குறிப்பிட்ட அளவு கரைபொருள் கரைகிறது. கரைப்பானில் உள்ள கரைபொருளின்
அளவைப் பொருத்து கரைசல்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
(i) தெவிட்டிய கரைசல்
(ii) தெவிட்டாத கரைசல்
(iii) அதிதெவிட்டிய கரைசல்
(i) தெவிட்டிய கரைசல்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த
ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ, அக்கரைசல்
தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக்
கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. மேலும் கரைபொருளைச் சேர்க்கும் போது
அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது.
(ii) தெவிட்டாத கரைசல்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில்
கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல்
தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20
கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து
தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.
(iii) அதிதெவிட்டிய கரைசல்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில்
உள்ள கரைபொருளின் அளவைக் காட்டிலும் அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல்
அதிதெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25°C வெப்பநிலையில்
100 கி நீரில், 40 கி சோடியம் குளோரைடு
உப்பினை கரைத்து அதிதெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. வெப்பநிலை, அழுத்தம் போன்ற சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் கரைதிறனை மாற்ற இயலும்.
அதிதெவிட்டிய கரைசலானது நிலையற்றது. கரைசல் உள்ள முகவையைச் சிறிதளவு அசைத்தாலும் மீண்டும்
படிகங்கள் தோன்றுகிறது.
4. செறிவுமிக்க
மற்றும் நீர்த்த கரைசல்கள்
இது தெவிட்டாத கரைசல்களின் ஒரு
வகைப்பாடாகும். இவ்வகைப்பாடு ஒரே அளவு கரைப்பானில் வெவ்வேறு அளவு கரைபொருளை கொண்ட
இரு கரைசல்களின் ஒப்பீட்டு செறிவைக் குறிக்கிறது. உதாரணமாக, உன்னிடம் இரண்டு
குவளைகள் தேநீர் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு குவளை தேநீரையும் நீ அருந்துகிறாய்;
அதில் ஒன்று மற்றொன்றை விட அதிக இனிப்பாக இருப்பதை உணர்கிறாய் எனில்,
இதிலிருந்து நீ என்ன அறிகிறாய்? எந்தக் குவளை
தேநீர், அதிகமாக இனிக்கிறதோ அது மற்றொன்றை விட சர்க்கரை அதிமாகக்
கலந்துள்ளது என்பதை அறிவாய். உனது உற்று நோக்கலை எவ்வாறு வெளிப்படுத்துவாய்?
சர்க்கரை அதிகமாக உள்ள தேநீரானது திடமானது என்று கூறுவோம். ஆனால்,
ஒரு வேதியியலாளர் இதனைச் ‘செறிவு மிகுந்தது’ என்று கூறுவர்.
ஒரே மாதிரியான கரைபொருளையும், கரைப்பானையும்
கொண்ட இரு கரைசல்களை ஒப்பிடும் போது, எதில் அதிக அளவு
கரைபொருள் உள்ளதோ (குறிப்பிட்ட அளவு கரைப்பானில்) அதனை செறிவுமிக்க கரைசல் என்றும்,
எதில் குறைந்த அளவு கரைபொருள் உள்ளதோ அதனை நீர்த்த கரைசல் என்றும்
கூறலாம். இதனை படம் 9.5 இன் மூலம் அறியலாம்.
கரைசல்களை, நீர்த்த மற்றும்
செறிவுமிக்க கரைசல்கள் என வேறுபடுத்துவது ஒரு பண்பு சார்ந்த குறியீடாகும். இது
கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் துல்லியமான அளவைக் குறிப்பதில்லை. இந்த
வேறுபாடானது நிறம், அடர்த்தி போன்ற இயற்பியல் பண்புகள் மூலம்
அறியப்படுகின்றன.
செயல்பாடு 1
கீழ்க்கண்ட
படங்களை கவனி. அவற்றுள் எவை நீர்த்த, செறிவுமிக்க கரைசல் என்பதை
குறிக்கவும். மேலும் உனது கருத்தை நியாயப்படுத்துக.