அன்றாட வாழ்வில்
கரைசல்கள்
கடல் நீரானது
இயற்கையில் காணப்படும் கரைசல்களில் ஒன்று. கடல் நீர்
இல்லாமல் இப்புவியில் நாம் வாழ்வதை கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. கடல் நீர் பல
உப்புகள் கலந்த ஒருபடித்தான கலவையாகும். அதேபோல் காற்றும் ஒரு கரைசலாகும். காற்றானது
நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்கள் கலந்த ஒருபடித்தான கலவையாகும்.
இப்புவியில் வாழும் அனைத்து
உயிரினங்களும் கரைசல்களோடு தொடர்பு கொண்டவை. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான
ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து கரைசல் நிலையிலேயே எடுத்துக்கொள்கின்றன. மனித
உடலில் உள்ள இரத்தம், நிணநீர், சிறுநீர் போன்ற பெரும்பான்மையானவை
கரைசல்களே ஆகும். நம் அன்றாட வாழ்வில் துவைத்தல், சமைத்தல்,
தூய்மைப்படுத்தல் மற்றும் பல செயல்பாடுகள் நீரோடு இணைந்து கரைசல்களை
உருவாக்குகிறது. அதேபோல் நாம் அருந்தும் பழச்சாறு, காற்று
நிரப்பப்பட்ட பானங்கள், தேநீர், காபி
போன்றவைகளும் கரைசல்களே ஆகும்.