Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

கரைசல்கள் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 9 : Solutions

   Posted On :  02.08.2022 08:12 am

10வது அறிவியல் : அலகு 9 : கரைசல்கள்

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. IV. பொருத்துக: V. குறு வினாக்கள்: VII. நெடு வினாக்கள் : VII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)

கரைசல்கள் (அறிவியல்)

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது __________ கலவை,

அ) ஒரு படித்தான

ஆ) பல படித்தான

இ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை

ஈ) ஒருபடித்தானவை அல்லாதவை

 

2. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை __________

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

 

3. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது __________

அ) அசிட்டோன்

ஆ) பென்சீன்

இ) நீர்

ஈ) ஆல்கஹால்

 

4. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் __________ எனப்படும்.

அ) தெவிட்டிய கரைசல்

ஆ) தெவிட்டாத கரைசல்

இ) அதி தெவிட்டிய கரைசல்

ஈ) நீர்த்த கரைசல்

 

5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.

அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு

ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

ஈ) கார்பன் - டை - சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

 

6. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் __________ .

அ) மாற்றமில்லை

ஆ) அதிகரிக்கிறது

இ) குறைகிறது

ஈ) வினை இல்லை

 

7. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி, 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்.

அ) 12 கி

ஆ) 11 கி

இ) 16 கி

ஈ) 20 கி

 

8. 25% ஆல்கஹால் கரைசல் என்பது __________ .

அ) 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

ஆ) 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

இ) 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

ஈ) 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

 

9. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் __________ .

அ) ஈரம் மீது அதிக நாட்டம்

ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்

இ) ஈரம் மீது நாட்டம் இன்மை

ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை

 

10. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது __________ .

அ) பெரிக் குளோரைடு

ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

இ) சிலிக்கா ஜெல்

ஈ) இவற்றுள் எதுமில்லை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை கரைபொருள் என அழைக்கிறோம்.

2. திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு இரசக் கலவைகள்

3. கரைதிறன் என்பது 100 கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.

4. முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரைகிறது.

5. வெப்பநிலை அதிகரிக்கும் போது கன அளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில் திரவப் பெருக்கம் ஏற்படுகிறது

 

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

 

1. இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.

விடை: தவறு

இருமடிக் கரைசல் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது.

2. ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்.

விடை: தவறு

ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.

3. சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும்.

விடை: தவறு

சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீர்க்கரைசல் ஆகும்.

4. பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4.7H2O.

விடை: தவறு

பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு FeSO4.7H2O

5. சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.

விடை: சரி

 

IV. பொருத்துக:

1. நீல விட்ரியால் – CuSO4.2H2O

2. ஜிப்சம் - CaO

3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை - CuSO4.5H2O

4. ஈரம் உறிஞ்சி – NaOH

விடை:

1. நீல விட்ரியால் - CuSO4.5H2O

2. ஜிப்சம் – CuSO4.2H2O

3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை - NaOH

4. ஈரம் உறிஞ்சி - CaO

 

VI. குறு வினாக்கள்:

 

1. கரைசல் - வரையறு.

கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை ஆகும்.

 

2. இருமடிக்கரைசல் என்றால் என்ன?

ஒரு கரைசல் குறைந்த பட்சம் இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு கரைபொருள் மற்றும் ஒரு கரைப்பான். ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக் கரைசல் எனப்படும்.

 

3. கீழ்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.

i) திரவத்தில் வாயு, ii) திரவத்தில் திண்மம், iii) திண்மத்தில் திண்மம், iv) வாயுவில் வாயு,  

(i) திரவத்தில் வாயு - நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு

(ii) திரவத்தில் திண்மம் - நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு

(iii) திண்மத்தில் திண்மம் - தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர்

(iv) வாயுவில் வாயு - ஆக்ஸிஜன் - ஹீலியம் வாயுக்கலவை

 

4. நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

நீர்க்கரைசல்:

எந்த ஒரு கரைசலில் கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க்கரைசல் எனப்படும்.

எ.கா - நீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை

நீரற்ற கரைசல்:

எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர பிற திரவங்கள் கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்றக் கரைசல் எனப்படுகிறது.

எ.கா - கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

 

5. கன அளவு சதவீதம் - வரையறு.

கன அளவு சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் கன அளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலில் கன அளவு சதவீதம் என வரையறுக்கப்படுகிறது.

கனஅளவு சதவீதம் = கரைபொருளின் கனஅளவு / (கரைபொருளின் கன அளவு + கரைப்பானின் கன அளவு × 100

 

6. குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?

நீர் வாழ் உயிரினங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வாழ்கின்றன. குளிர் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு ஆக்சிஜன் கரைந்துள்ளது. ஏனெனில் வெப்பநிலை குறையும் போது ஆக்சிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது. எனவே குளிர் பிரதேசங்களில் அதிக நீர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

 

7. நீரேறிய உப்பு - வரையறு.

அயனிச் சேர்மங்கள் அவற்றின் தெவிட்டிய கரைசலில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீர் மூலக்கூறுகள் சேர்ந்து படிகமாகிறது. இந்தப் படிகங்களுடன் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்க நீர் எனப்படும். அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புக்கள் எனப்படும்.

 

8. சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?

நீரற்ற காப்பர் சல்பேட் உப்பில் சில துளி நீரினைச் சேர்க்கும் போது அல்லது குளிர்விக்கும் போது உப்பானது நீலநிற நீரேறிய உப்பாக மாறுகிறது. ஏனெனில் ஐந்து நீர் மூலக்கூறுகள் காப்பர் சல்பேட்டுடன் சேர்க்கப்படும் போது இவை படிகமாக மாறி நீரேறிய உப்பாக காட்சியளிக்கிறது.

 

9. ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க. அ) அடர் சல்பியூரிக் அமிலம், ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட், இ) சிலிக்கா ஜெல், ஈ) கால்சியம் குளோரைடு, உ) எப்சம் உப்பு.

ஈரம் உறிஞ்சுகள் : அடர் சல்பியூரிக் அமிலம், சிலிக்கா ஜெல், கால்சியம் குளோரைடு

ஈரம் உறிஞ்சிக் கரைபவை : எப்சம் உப்பு, காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்

 

VII. நெடு வினாக்கள் :

 

1. குறிப்பு வரைக: அ தெவிட்டிய கரைசல், ஆ) தெவிட்டாத கரைசல்

) தெவிட்டிய கரைசல்:

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. மேலும் கரைபொருளைச் சேர்க்கும் போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது.

ஆ) தெவிட்டாத கரைசல்:

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.

 

2. கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.

கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவைகளாவன,

(1) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை

(2) வெப்பநிலை

(3) அழுத்தம்

) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை:

கரைதிறனில், கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருள்கள் நீரில் கரைவதில்லை. இதனையே வேதியியலாளர்கள் கரைதிறனை பற்றிக் குறிப்பிடும் போது ''ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது" (Like dissolves like) என்கின்றனர், கரைபொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போது தான் கரைதல் நிகழ்கிறது. உதாரணமாக, சமையல் உப்பு முனைவுறும் சேர்மம். எனவே இது முனைவுறும் கரைப்பானான நீரில் எளிதில் கரைகிறது.

அதுபோலவே முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் எளிதில் கரைகிறது. உதாரணமாக, ஈதரில் கரைக்கப்பட்ட கொழுப்பு. ஆனால், முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரைவதில்லை. அதுபோல முனைவுறும் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் கரைவதில்லை.

ஆ) வெப்பநிலை:  

(i) திரவத்தில் திண்மங்களின் கரைதிறன்:

பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது. உதாரணமாக, குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை, சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது. வெப்பக்கொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் அதிகரிக்கிறது.

வெப்பஉமிழ் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.

(ii) திரவத்தில் வாயுக்களின் கரைதிறன்:

நீரை வெப்பப்படுத்தும் போது குமிழிகள் வருகின்றன; ஏன்? திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது. ஆகையால் ஆக்ஸிஜன் குமிழிகளாக வெளியேறுகிறது.

அழுத்தம்:

வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.

வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் குளிர்பானங்கள், வீட்டு உபயோக அம்மோனியா, பார்மலின் போன்றவைகள்.

 

3. i) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?

ii) கரைதிறன் வரையறு.

i) எப்சம் உப்பின் படிகமாக்கல் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை ஏழு. மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் படிகத்தை மெதுவாக வெப்பப்படுத்தும் போது ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.


ii) கரைதிறன்:

கரைதிறன் என்பது எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதின் அளவீடு ஆகும்.

கரைபொருளின் நிறை  / கரைப்பானின் நிறை × 100

 

4. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?

விடை:

ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள்

1. சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சுகிறது. ஆனால் கரைவதில்லை.

2. வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழப்பதில்லை.

3. இவை படிக திண்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன,

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்

1. சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கரைகிறது.

2. வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய இயற்பியல் நிலையை இழக்கிறது.

3. படிக உருவற்ற திண்மங்களாகவோ, திரவங்களாகவோ காணப்படுகின்றன.

 

5. 180 கி நீரில், 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.

கொடுக்கப்பட்டது:

கரைப்பானின் நிறை = 180 கி

கரைபொருளின் நிறை = 45 கி

கரைபொருளின் நிறை சதவீதம் = ?

நிறை சதவீதம் = கரைபொருளின் நிறை / (கரைபொருளின் நிறை + கரைப்பானின் நிறை) × 100

= 45 / (45 + 180) × 100

= 45 / 225 × 100 = 4500 / 225

நிறை சதவீதம் = 20%

 

6. 15 லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5 லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கன அளவு சதவீதத்தை கண்டறிக.

விடை:

கொடுக்கப்பட்டது:

எத்தனாலின் கன அளவு = 3.5 லி

எத்தனால் நீர்க்கரைசலின் கன அளவு = 15 லி

எத்தனால் கரைசலின் கன அளவு = ?

கன அளவு சதவீதம் = கரைபொருளின் கன அளவு / (கரைபொருளின் கனஅளவு + (கரைசலின் கன அளவு) × 100

= 3.5 / 15 × 100 = 350 / 15

எத்தனால் கரைசலின் கன அளவு சதவீதம் = 23.33%

 

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)

 

1. விணு 50 கி சர்க்கரையை 250 மிலி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதே வகை சர்க்கரையை 250 மிலி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?

விணு எளிதில் சர்க்கரையை கரைப்பார். ஏனெனில் விணு சுடுநீரில் கரைப்பதால் எளிதில் கரைப்பார். வெப்பநிலை கரைதிறனை பாதிக்கும் முக்கிய காரணமாகும். வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது. எனவே விணு எளிதில் சர்க்கரையை கரைப்பார்.

 

2. 'A' என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B' ஆக மாறுகிறது. B - இல் நீரைச் சேர்க்கப்படும் போது 'B' மீண்டும் 'A' ஆக மாறுகிறது. ‘A' மற்றும் 'B' யினை அடையாளம் காண்க.

A என்பது காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட் (CuSO4. 5H2O)

B என்பது நீரற்ற காப்பர் சல்பேட் (CuSO4)


 

3. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.

குளிர் பானங்கள் மலை அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்கும் தன்மையுடையவை. ஏனெனில் மலை உச்சியில் வளிமண்டல அழுத்தம் குறைவாகவும் மலை அடிவாரத்தில் வளிமண்டல அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். எனவே வளிமண்டல அழுத்தம் அதிகமுள்ள இடத்தில் நுரைத்துப் பொங்கும் தன்மை அதிகமாக இருக்கும்.



Tags : Solutions | Science கரைசல்கள் | அறிவியல்.
10th Science : Chapter 9 : Solutions : Book Back Questions with Answers Solutions | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 9 : கரைசல்கள் : புத்தக வினாக்கள் விடைகள் - கரைசல்கள் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 9 : கரைசல்கள்