Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | மிகை மேம்பாட்டு அரசு என்ற கருத்தாக்கம்

அரசியல் அறிவியல் - மிகை மேம்பாட்டு அரசு என்ற கருத்தாக்கம் | 11th Political Science : Chapter 2 : State

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : அரசு

மிகை மேம்பாட்டு அரசு என்ற கருத்தாக்கம்

தெற்காசிய அரசுகள் பெரும்பாலும் நவீன மக்களாட்சி தத்துவத்தின் படி இயங்கும் அரசுகளாகும்.

மிகை மேம்பாட்டு அரசு என்ற கருத்தாக்கம் (Concept of Over Developed State)

தெற்காசிய அரசுகள் பெரும்பாலும் நவீன மக்களாட்சி தத்துவத்தின் படி இயங்கும் அரசுகளாகும். ஆனால், அவை வளர்ச்சியில் மேற்கத்திய நாடுகளை விட பின் தங்கி இருப்பதன் காரணம் யாது? இந்நாடுகளின் ஆளுகை அமைப்புகளான நாடாளுமன்றம், அதிகாரவர்க்கம், திட்டமிடும் துறைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டு நிலவியல் சூழலுக்கேற்ப காலனியாதிக்க காலத்திலேயே மாற்றப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வளர்ச்சி என்பது மிக மந்தமாகவே இருப்பதை காண முடிகிறது. வளர்ச்சி வேகம் மிக மெதுவாகவே இந்நாடுகளில் இருப்பதற்கான காரணம் என்ன? இதனை எடுத்துக்காட்டி ஹம்சா ஆலாவி (Hamza Alari) பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஆளுகைத்தன்மை நெருக்கடியினை விளக்குகிறார். காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய நாடுகளின் செயல்படாத தன்மையினை விளக்கும் பொருட்டு மிகை மேம்பாட்டு அரசு எனும் கருத்தாக்கம் பயன்படுகிறது. காலனியாதிக்கக் காலத்தின் போதும், அதற்கு பின்னரும் தொடரும் அதிகாரவர்க்க ஆளுகைக்கட்டமைப்பு மூலமாக 'மிகை மேம்பாட்டு அரசு’ புரிந்துகொள்ளப்படுகிறது. 

காலனியாதிக்க கால அடிமைத்தளையில் இருந்து இந்நாடுகள் விடுபட்டாலும், புதிதாக பெறப்பட்ட அரசியல் சுதந்திரத்தின் தாக்கத்தினை அந்நாடுகளில் உள்ள நிர்வாகக்கட்டமைப்புகள் எந்த வகையிலும் உள்வாங்கவில்லை. ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் இரட்டை வேடமிட்டு, தங்கள் நாட்டு ஆரோக்கிய அரசியலினை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள காலனியாதிக்க நாடுகளுக்கு வழங்கவில்லை. அவர்களின் நாடுகளில் அரசுகள் என்பவை குடிமக்களின் அரசியல் வாழ்வு, சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரம் போன்ற உரிமைகளை நிலை நாட்டி மக்களுக்கு அதீத சுதந்திரம் வழங்கிய அமைப்பாகக் கருதப்பட்டன. மக்கள் அரசினை தங்கள் 'செல்ல பிராணி' போன்று கருதினர். ஆனால், அதே ஐரோப்பியர்கள் அதற்கு நேர் எதிராக, தங்களின் காலனியாதிக்க நாடுகளில் அரசமைப்புகள் கொடூரமானதாக இருக்குமாறு வடிவமைத்தனர். அதிகாரக் குவிப்பு என்பது பெரும் அளவில் காலனியாதிக்க அரசின் வசம் இருந்தது. இதனால் காலனியாதிக்கம் செய்யப்பட்ட நாடுகளில் இருந்து மிக எளிதாக செல்வங்களை சுரண்டி அவர்கள் தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல முடிந்தது. காலனியாதிக்க நாடுகளில் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த அதிகாரவர்க்கம் இதற்கு மிக சிறப்பாக உதவி புரிந்தது. நாட்டைச் சுரண்ட உதவிய இவ்வகை அமைப்புகளை நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், பெரும் மரபாகவே கருதி பிந்தைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தனர். அதிகாரவர்க்கமும் தன்னை பெரிய அளவில் உருமாற்றமும் செய்துகொள்ளவில்லை.

சமுதாயம் மற்றும் அதன் பொருளாதாரம் நவீனமயமாக்கப்படாத நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் மாட்சிமை பெற்ற அமைப்பான அரசு மட்டும் நவீனமாக்கப்பட்டால், அது அரசையும் அதன் அங்கமான சமுதாயத்தினையும் ஒன்றோடொன்று தொடர்பில்லாத இரு வேறு கூறுகளாக ஆக்கி விடும். இது அரசு இயந்திரத்திற்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இடைவெளியினை ஏற்படுத்திவிடும். இவ்வகையான பிரதிநிதித்துவ மக்களாட்சியில், மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பது மக்களால் தீர்மானிக்கப்படமாட்டாது. அதற்குமாறாக செல்வாக்கு மிக்க ஒரு சிலரால் மட்டுமே தீர்மானிக்கப்படும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவும் இத்தகைய தன்மையினை 'இராணுவ அதிகாரவர்க்க சிறுகுழுவாட்சி' எனும் சொற்றொடர் மூலம் ஹம்சா ஆலாவி விளக்குகிறார். 'இராணுவ அதிகாரவர்க்கத்தின் சிறுகுழுவாட்சி' என்பது இந்தியாவின் உரிமங்கள் ஆட்சியை (Licence Raj) ஒத்துள்ளதாகும். காலனியாதிக்க கால அனுபவத்தில் இருந்து இந்தியாவில் தொடரும் அதிகாரக்குவிப்பு குறித்த கவலைகள் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு வருவதைக் காணலாம்.



Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 2 : State : Concept of Over Developed State Political Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : அரசு : மிகை மேம்பாட்டு அரசு என்ற கருத்தாக்கம் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : அரசு