அரசியல் அறிவியல் - சமுதாயம், அரசு மற்றும் அரசாங்கம் | 11th Political Science : Chapter 2 : State
சமுதாயம், அரசு, அரசாங்கம் - இவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளன?
மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த வரலாற்று ரீதியிலான பண்டைய நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஒரு இடத்தில் நிலையாய் குடி கொண்டு வாழும் நிலைக்கு வந்த பின்பு, ஒவ்வொருவரும் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினர். குடும்பங்களின் செறிவு சமூகம் எனவும், சமூகங்களின் செறிவு நாம் இன்று காணும் சமுதாயமாகவும் ஆனது. தனிநபர்கள், தங்கள் உளவியல் தேவைக்காக மற்றவரை சார்ந்து இருந்ததினால் குடும்பம் எனும் அமைப்பில் வாழ்ந்து வந்தனர்.
குடும்பங்கள், தங்கள் பாதுகாப்பிற்காகவே சமூகம் எனும் கட்டமைப்பின் கீழ் வந்தன. இவ்வாறு அமையப்பெற்ற சமூகங்கள், தங்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக சமுதாயம் எனும் அமைப்பினைத் தோற்றுவித்தன.
சமுதாயம் சீரழிந்து போகும் போது, அதன் தாக்கம் சமூகக்குழுக்களின் மீதும் ஏற்படும். சமூகங்கள் சிதைவு பெறும்போது குடும்பங்களும் சிதையத்தொடங்கும். குடும்பங்கள் சிதையத்துவங்கினால், ஒவ்வொருவரும் துன்புற நேரிடும். இவ்வாறு ஒரு சரி செய்ய இயலாத சீரழிவைத் தடுக்கும் பொருட்டே, மனிதர்கள் ஒன்றுபட்டு, பகுத்தறிவின் வழிகாட்டுதலின் பேரில் அரசு எனும் மாட்சிமை பொருந்திய வலிமையோடு இருக்கக்கூடிய அமைப்பின் அவசியத்தினை உணர்ந்தனர்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் தம்மை அழித்துக்கொள்வதிலிருந்து அவர்களை காக்கும் நோக்கிலேயே அதிகாரங்கள் குவிக்கப்பட்டு அவ்வதிகாரங்களை நிர்பந்திக்கும் அதிகாரமும் கொண்ட 'அரசு’ எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. நவீன அரசுகளில் மனிதர்கள் மீதான இக்கட்டுப்பாடுகள், சட்டத்தின் வழியாக உரிய விதிமுறைகள் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன. மக்களாட்சியில் இச்சட்டங்கள் சட்டமன்றத்தால் இயற்றப்படும்.
இயற்றப்பட்ட சட்டங்கள், செயலாட்சி துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டும், நீதிமன்றத்தால் இச்சட்டங்களின் சட்டபூர்வத்தன்மை மற்றும் நீதிபரிபாலனத்தன்மை ஆகியன ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன. சட்டமியற்றுதல், இயற்றிய சட்டத்தை அமலாக்குதல் மற்றும் அதற்கு விளக்கமளித்தல் ஆகியன அரசாங்கத்தின் பணிகளாகும்.
அரசு மற்றும் சமுதாயத்தின் உறுப்பினராகும் தன்மை என்பது ஒன்றேயாகும். ஆனால் அவை இரண்டும் தத்தமது நோக்கங்களில் மாறுபடுகின்றன. அரசு என்பது ஒரு மிகப்பெரிய ஆனால் ஒரே ஒரு நோக்கத்திற்காக உள்ளது. ஆனால் சமுதாயம், எண்ணிலடங்காத நோக்கங்களுக்கானதாகும். அவற்றில் சில பெரிய நோக்கங்கள் மற்றும் சில சமயம் சிறிய நோக்கங்கள் உள்ளன. சமுதாயத்தின் நோக்கங்கள் ஆழ்ந்ததாகவும், பரந்ததாகவும் காணப்படுகின்றன.
அரசு என்பது சட்டம் சார்ந்த ஒற்றை அமைப்பாகும். ஆனால் சமுதாயம் என்பது பல அமைப்புகளை உள்ளடக்கியதாகும். அரசு மக்களின் மீது தன் அதிகார வலிமையை பயன்படுத்தி அவர்களை கீழ்ப்படிய வைக்கிறது. ஆனால் சமுதாயமோ மக்களின் மனமுவந்த செயல்பாட்டையே ஊக்குவிக்கிறது. சமுதாயத்தின் பல்வேறு தேவைகளே அது இசைவான வழியில் செயல்படும் முறையை தேவையானதாக்குகிறது. சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகள் இருப்பதால், ஒருவர் தான் கட்டாயப்படுத்தப்படுவதாக கருதினால் அதிலிருந்து விடுபட்டு வேறு அமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. நிர்ப்பந்தத்தின் மூலமாக அமைப்புகள் செயல்பட முடியாது. இதன் வாயிலாக, வலியுறுத்தும் அதிகாரமற்ற அரசும், மக்களை அவர்களின் சுய விருப்பத்துடன் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் தூண்டல் இல்லாத சமுதாயமும் வீழ்ச்சியடையும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
பேச்சு வழக்கில் அரசும், அரசாங்கமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவை ஆகும். பின்வரும் அட்டவணையிலிருந்து அரசிற்கும், அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறியலாம்.
நவீன அரசைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் உங்களுக்கு நவீனத்துவம் பற்றிய புரிதல் வேண்டும். நவீனத்துவம் என்றால் என்ன? நவீன அரசு என்றால் என்ன?
நவீனத்துவம் என்பதனை வரலாற்று அடிப்படையில் பார்த்தால் மரபுகளை கேள்விக்குட்படுத்தி அதன் மூலம் காலம் தொட்டு வந்த நம்பிக்கைகளை, பழக்கங்களை, சமூக பண்பாட்டு நெறிமுறைகளை நிராகரிக்கும் காலகட்டம் நவீனத்துவமாகும். தனி மனிதத்துவத்திற்கு முன்னுரிமை, சமத்துவம், சுதந்திரம், வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அறிவியல் மனப்பாங்கினை வளர்த்தல் போன்றவற்றிற்கு நவீனத்துவம் அடித்தளமிட்டது. நவீனத்துவம் மக்களை விவசாயம் சார்ந்த நிலையிலிருந்து தொழில்மயம், நகரமயம், மதச்சார்பின்மை நோக்கி வழி நடத்தியது. இந்த அறிவார்ந்த நகர்வானது சமுதாயம், அரசு மற்றும் அரசாங்கம் போன்றவற்றை பற்றிய புரிதல் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, இந்திய சமுதாயத்தை சீர்திருத்த இராஜாராம் மோகன்ராய் மேற்கொண்ட முயற்சிகள் போன்றவை இந்திய சிந்தனையாளர்கள் மீது மேற்கத்திய நவீனத்துவத்தின் தாக்கம் நேரடியாக இருந்ததற்கு சான்றாகும்.
அரசியல் அறிவியல் பாடத்தில் நவீனத்துவமானது அரசு, சுதந்திரம், சமத்துவம், நீதி முதலிய கருத்தாக்கங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. நவீன அரசின் அறிவுப் பூர்வமான அடித்தளம் பெரும்பாலும் 1648-ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட "வெஸ்ட் பாலியா உடன்படிக்கை " (Treaty of Westphalia)யின் விளைவு என்றே கூறப்படுகிறது.
நவீன அரசின் சிந்தனை 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனிமயமாக்கம் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின் சுதந்திரம் பெற்ற காலனி நாடுகள் இன்றளவும் காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய (Post- Colonial States) அரசுகள் என அறியப்படுகின்றன. இவ்வாறு சுதந்திரம் பெற்ற தெற்காசிய நாடுகள் காலனியாதிக்க காலத்திற்குப் பிந்தைய அரசுகள் என்னும் குடையின் கீழ் வருகின்றன. இவ்வாறு உலகெங்கிலும் உள்ள காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய அரசுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பீடு செய்யலாம். இவ்வாறான ஒப்பீடுகள் அவ்வரசுகளின் ஆட்சி முறைமைகளின் சாதக பாதகங்களை அறிந்து கொள்ள உதவும். அதன் மூலம் அவ்வரசுகளின் ஆட்சி முறைமைகளை மேம்படுத்த இயலும்.