அரசியல் அறிவியல் - அரசு என்பதன் பொருள் மற்றும் வரையறை | 11th Political Science : Chapter 2 : State
அரசு என்பதன் பொருள் மற்றும் வரையறை
அரசு என்பது உலகளாவிய ஏனைய சமூக அமைப்புகளைவிட, மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அரசு இயற்கையாக தோன்றிய அமைப்பாகும். 'மனிதன் (மானிடர்) ஓர் சமூக விலங்கு என்பதுடன் மனிதர்கள், அரசியல் சார்ந்து இருப்பது அவர்களின் இயல்பான தன்மை என அரிஸ்டாட்டில் கூறுகிறார்.
மேலும், 'ஒரு மனிதன் அரசு எனும் அமைப்பிற்குள் வாழ்வது, அவன் மனிதத்தன்மையுடன் வாழ்வது, இவை இரண்டும் ஒன்றே' என அரிஸ்டாட்டில் கருதினார். நவீன சொல்லான அரசு (State) என்பது 'ஸ்டேட்டஸ்' (Status) எனும் சொல்லில் இருந்து உருவானதாகும். நிக்கோலோ மாக்கியவல்லி (1469 - 1527) எனும் அறிஞர் முதன் முதலில் அரசு எனும் சொற்பிரயோகத்தைத் தமது படைப்புக்களில் பயன்படுத்தினார். மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படையினை கொண்டுள்ளதனாலேயே அரசு ஒரு இன்றியமையாத அமைப்பாகக் கருதப்படுகிறது. அரசு என்பது மனித சமுதாயத்திற்கு நல்வாழ்வினை ஏற்படுத்தித் தருவதற்காக நீடிக்கிறது. மனிதர்களின் நோக்கங்கள், ஆசைகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவை அரசு எனும் அமைப்பின் மூலமே செயல் வடிவம் பெறுகின்றன. மனிதர்களுக்கு அத்தியாவசியமான அமைப்பாக அரசு கருதப்பட்டாலும், அரசு என்பதற்கான வரையறை இதுதான் என எந்த இருவேறு சிந்தனையாளர்களும் கருத்தின் அடிப்படையில் ஒத்துப்போவது கிடையாது.
இந்த கருத்து வேறுபாடு அரசு குறித்த ஆய்வினை மிகவும் ஆக்கப்பூர்வமானதாகவும், ஆர்வமிக்கதாகவும் ஆக்குகிறது. உதாரணமாக, அரசியல் அறிவியலில் சமூக ஒப்பந்தக் கோட்பாடு உள்ளது. தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக் மற்றும் ஜீன் ஜாக்குவஸ் ரூசோ ஆகிய மூவரும் சமூக ஒப்பந்த சிந்தனையாளர்கள் என அறியப்படுகின்றனர். மனிதர்களை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பது இவர்களின் உள்ளார்ந்த கருத்தாகும். ஆனால் அக்கட்டுப்பாட்டின் எல்லையினைக் குறித்து அம்மூவருக்கு இடையே ஒருமித்த கருத்து என்பது காணப்படவில்லை.
எம்மைக் கண்டுகொள்...
அரசின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டினை மூன்று முக்கிய ஒப்பந்தவியலாளர்கள் உருவாக்கினார்கள். அம்மூவருமே மனிதர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் ஒப்புக் கொண்டனர். ஆனால் அக்கட்டுப்பாடு எந்த அளவில் இருக்கவேண்டும் என ஒவ்வொருவரும் தத்தமது வழியில் தீர்மானித்தனர். அம்மூவர் யாவர்?