அரசியல் அறிவியல் - அரசின் முக்கிய கூறுகள் | 11th Political Science : Chapter 2 : State
அரசு என்பது மக்கள் மீது அளப்பரிய ஆதிக்கம் செலுத்தவல்ல அதிகாரத்துவம் கொண்ட அமைப்புகளின் தொகுப்பாகும். எனவே, அனைத்து நவீன அரசுகளும் ஒருபுறம் அரசின் அளப்பரிய கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தினையும், மறுபுறம் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் சலுகைகளையும் தமது அரசமைப்பு சட்டத்தின் வாயிலாக சமன்படுத்துவதைக் காணலாம். எனவே அரசமைப்பு சட்டம் என்பது அரசின் அளப்பரிய அதிகாரத்துவம் செலுத்தும் தன்மையினை கட்டுப்படுத்தும் ஒரு முகமையாக கருதப்படுகிறது.
மான்டிவீடியோ மாநாட்டில் 1933-ல் நடைபெற்ற அரசுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளின் மீதான மாநாடு, அரசு என்பதனைப்பற்றிய ஓர் அடிப்படை புரிதலை அளித்தது. அரசு என்பது ஓர் நிரந்தர மக்கள்தொகை, ஓர் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் அந்நிலப்பரப்பின் மீது ஆளுமை செலுத்தும் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்; அரசு அதன் மக்களை கட்டுப்படுத்தக்கூடியது; பிற நாடுகளுடன் பன்னாட்டு உறவுகளையும் நடத்த வல்லதாகும். இதன் விளைவாக, ஓர் அரசினை பிற அரசுகள் அங்கீகரித்தல் என்பது ஒரு அரசின் சட்டப்பூர்வ தன்மைக்கு மிக முக்கியமாகும்.
மக்கள்தான் அரசை உருவாக்குகிறார்கள். அரசுக்கு மக்கள் தொகை அவசியமாகும். தத்துவ ஞானி பிளாட்டோவின் கூற்றுப்படி ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று அறுதியிட்டார். அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி மக்கள் தொகையினை துல்லியமாகக் கூறாமல், மிகக்குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கக்கூடாது என்று மட்டும் அறிவுறுத்தினார். அதாவது ஓர் அரசு தன்னிறைவு பெறுவதற்கு ஏற்றவகையிலும், அதே நேரத்தில் திறம்பட ஆட்சி செய்வதற்குத் தகுந்த வகையிலும் மக்கள் தொகை இருக்க
• அரசு எனப்படுவது "குடும்பங்கள் மற்றும் கிராமங்கள் ஒன்றிணைந்து அவற்றின் நோக்கத்திற்காகவும், அவைகளின் மகிழ்ச்சியான, மரியாதைக்குரியதுமான வாழ்க்கை மற்றும் முழுமையான சுய சார்பு கொண்ட வாழ்க்கை முறையினை வாழ உதவும் ஓர் அமைப்பு அரசாகும்” என வரையறுத்தார். -அரிஸ்டாட்டில்
• அரசு என்பது "பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பினை ஆக்கிரமித்து வாழும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களின் பெருந்திரள், தம்மிலும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதலை நியாயப்படுத்தும் அமைப்பாகும்". - ஹாலந்து (Holland)
• அரசினை வரையறுக்கும் போது ‘மனித வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கினர் ஒரு அமைப்பாக இருந்து செயல்படுவதே அரசு’ என்கிறார். - பர்ஜெஸ் (Burgess)
• ‘அரசு என்பது அரசாங்க வடிவில் தனிமனிதன் அல்லது சங்கங்கள் இணைவதாகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின்மீது அவர்கள் ஒன்றிணைந்து தங்களை அரசியல் ரீதியாக அமைத்துக்கொள்வது அரசு ஆகும்’. - சிட்ஜ்விக் (Sidgwick)
• அரசு என்பது "ஓர் மக்கள் கூட்டமானது வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசித்துக் கொண்டு, அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல் ஒரு முறையான அரசாங்கத்தைப் பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துதல்" என விளக்குகிறார். - கார்னர் (Garner)
• “அரசு என்பது ஓர் நிலப்பரப்பில் அமைந்த சமுதாயமாகும். அது அரசாங்கம் மற்றும் குடிமக்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு இடையேயான உறவுகள் மேன்மையான அதிகாரத்தை வலுக்கட்டாயமாக பயன்படுத்துவதன் மூலமாகத் தீர்மானிக்கப்படுகிறது” என்கிறார். - லாஸ்கி (Prof. Laski)
வேண்டும் என அரிஸ்டாட்டில் கருதினார். ரூசோ ஓர் இலட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடையதாக இருத்தல் வேண்டும் என்று கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா?
பிளாட்டோவின் கருத்துப்படி ஒரு இலட்சிய அரசின் மக்கள்தொகை என்பது 5040 ஆகும். இந்த 5040 என்ற எண்ணிக்கையினை ஏன் அவர் தெரிவு செய்தார் தெரியுமா? இதற்கு முக்கியக் காரணம் இந்த 5040 என்ற எண்ணை 1 முதல் 12 வரையிலான எந்த எண்ணாலும் வகுக்கலாம். உதாரணமாக, இந்த எண்ணினை 12-ஆல் வகுத்தால் மீதம் உள்ளது 2 என்ற எண் மட்டுமே! நெருக்கடியான காலங்களில் மக்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குரிய தனித்தனி அறிவிப்புகள் தருவதற்கு வசதியாகவே இந்த 5040 என்ற இந்த மக்கள் தொகை எண்ணிக்கை பிளாட்டோவினால் தேர்வு செய்யப்பட்டது.
பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற முற்கால சிந்தனையாளர்கள் சிறிய கிரேக்க நகர அரசுகளான ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டு மக்கள் தொகை எண்ணிக்கையினை முடிவு செய்தனர். நவீன கால அரசுகள் மக்கள் தொகை எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. இந்தியாவின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 121.02 கோடி மக்களைக் கொண்டுள்ளது.
நிலப்பரப்பு
மக்கள் வசிக்க இருப்பிடம் அதாவது நிலப்பகுதி அவசியமாகிறது. மேலும் மக்கள் தங்களை சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் தயார்படுத்திக்கொள்ள நிலப்பகுதி தேவையாகிறது. நிலப்பகுதி என்பது அந்நாட்டின் நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நவீன அரசுகள் அவற்றின் நிலப்பகுதி அளவில் வேறுபடுகின்றன. குடியுரிமைக்கு நிலப்பகுதி முக்கியமானதாகும். மக்கள் தொகை என்ற கூற்றினைப் போல் நிலப்பகுதி என்பதற்கு குறிப்பிட்ட அளவு என்பது கிடையாது. சிறிய மற்றும் பெரிய நிலப்பகுதிகள் கொண்ட அரசுகள் உள்ளன. 'நிலப்பரப்பின் மீதான இறையாண்மை அல்லது அரசின் மேலான தன்மை' என்பது அந்தந்த அரசின் எல்லைப் பகுதிக்குள் சுதந்திரமாகவும், வெளியிலிருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதும் தான். இதுவே நவீன அரசுமுறை வாழ்வின் அடிப்படைக்கொள்கையாகும் என பேராசிரியர் எலியட் கூறுகிறார்.
இந்திய அரசின் நிலப்பகுதி 32,87,263 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது உலக அளவில் கிட்டத்தட்ட 2.4% நிலப்பரப்பு ஆகும். இந்திய அரசமைப்பின் முதல் உறுப்பு இந்தியாவின் நிலப்பரப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
நிலப்பரப்பின் மீதான இறையாண்மையின் பெயரால் மக்கள் ஒரு அரசின் நிலப்பரப்பிலிருந்து மற்றொரு அரசின் நிலப்பரப்பிற்கு செல்வது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
ஆனால் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தி மற்றொரு நாட்டில் உள்ளவருடன் தொடர்பு கொள்ள முடியும். அரசின் பிரதான உரிமையான இறையாண்மையின் பார்வையில், இதனை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? முகநூல் (Facebook), கீச்சகம் (Twitter) மற்றும் வலையொளி (You Tube) போன்ற சமூக வலைதளங்கள் சில நாடுகளில் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பதை ஆராயவும்.
அரசாங்கம்
அரசாங்கம் என்பது அரசின் செயல்படக்கூடிய ஓர் முகமையாகும்.
செயல்பாடு
* இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள் விளம்பரங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
* 'அரசு' என்ற சொல்லை நீ எவ்வாறு புரிந்து கொள்கிறாய்?
* உங்களுடைய தினசரி வாழ்க்கையில் அரசாங்கத்தினால் ஏற்படும் ஏதேனும் ஐந்து தாக்கங்களைப் பட்டியலிடுக.
* ஒவ்வொருவருக்குமான விதிகளை அரசானது சட்டத்தின் வடிவில் இயற்ற வேண்டியது ஏன் அவசியமாகிறது என்று நீ கருதுகிறாய்?
அரசாங்கம் என்பது அரசின் அரசியல் அடிப்படையிலான ஒருங்கிணைப்பாகும். பேராசிரியர் அப்பாதுரை (A.Appadurai) "அரசின் விருப்பங்களை உருவாக்கி வெளிப்படுத்தி உடன் நிறைவேற்றும் ஓர் முகமையாக அரசாங்கம் விளங்குகிறது" என குறிப்பிடுகிறார். சி.எப்.ஸ்ட்ராங் (C.F. Strong) என்பவர், "சட்டத்தை இயற்றி அதனை அமல்படுத்த அரசுக்கு மேலான அதிகாரம் தேவைப்படுகிறது" என்று கூறுகிறார்.
இறையாண்மை
இறையாண்மை என்பது ஓர் அரசின் நான்காவது அடிப்படை கூறாகும். இறையாண்மை என்பதன் பொருள் மேலான மற்றும் இறுதியான சட்ட அதிகாரம் என்பதாகும். எந்த சட்ட அதிகாரமும் இறையாண்மையை விட உயர்ந்ததாக இருக்க முடியாது. நவீன அரசுகள் தோன்றும்போது அதனுடன் இறையாண்மை என்ற கருத்தும் உருவாக்கப்பட்டது. இறையாண்மை எனும் சொல் இலத்தீன் மொழிச்சொல்லான 'சூப்பரானஸ்' (Superanas) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதற்கு உயர்ந்த அதிகாரம் என்று பொருளாகும். தொன்றுதொட்டு வரும் புரிதலின்படி இறையாண்மை என்பது முழுமையானது, நிரந்தரமானது, அனைவருக்குமானது, பிரிக்க முடியாதது, தனித்துவமானது மற்றும் மாற்றித்தர இயலாதது என்பன போன்ற பண்புகளை உள்ளடக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் போடின் (Jean Bodin) (1530 -1597) என்பவர் நவீன இறையாண்மைக் கோட்பாட்டின் தந்தையாவார். ஹெரால்டு லாஸ்கியின் (Harold Laski) கருத்துப்படி 'அரசு இறையாண்மை உடையதாக இருப்பதால்தான் பிற மனிதக் கூட்டமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது'.