அலகு 2
அரசு
கற்றலின் நோக்கங்கள்
❖ 'அரசு' குறித்து விளக்கமான புரிதலை தரும் இவ்வத்தியாயம் கீழ்காணும் தலைப்புகளைக் கொண்டது.
❖ அரசியல் அறிவியல் ஆய்வுகளின் முக்கிய பொருள், குறிப்பாக அரசு மற்றும் அதன் செயல்பாடுகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுதல்
❖ அரசு குறித்து பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்துகளை அறிதல்
❖ அரசின் கூறுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துதல்
❖ சமூகம், அரசு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை அடையாளம் காணுதல்
❖ நவீன அரசு, மக்கள் நல அரசு மற்றும் மென்மை அரசு குறித்த கருத்துகளை அறிதல்
அன்பு மாணவர்களே, முந்தைய பாடத்தில் அரசியல் அறிவியல் பாடத்தை பற்றிய ஓர் அறிமுகத்தை பெற்றிருப்பீர்கள். அரசியல் அறிவியல் எதனுடன் தொடர்புடையது என்று சிந்தித்தீர்களா?
தாவரவியல் பாடத்தின் மூலம் தாவரங்களைப் பற்றியும், சமூகவியல் பாடத்தின் மூலம் சமூகத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் போது அரசியல் அறிவியல் பாடம் மூலமாக எதனை நாம் அறிந்து கொள்கிறோம்? குறிப்பாக அரசியல் அறிவியல் படிப்பானது எதைப் பற்றியது?
அரசியல் அறிவியல் என்பது அரசைப் பற்றிய படிப்பாகும். நாம் அனைவரும் ஓர் அரசின் கீழ் வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் என்பது பல்வேறு அரசுகள் அடங்கிய ஓர் வடிவமாகும். அரசு என்ற எண்ணம் அல்லது கருத்தாக்கமானது வரலாற்று ரீதியாக பார்த்தோமேயானால் ஒவ்வொரு பகுதியிலும் அதன் அரசியல், பண்பாடு, மதம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் உருவானதேயாகும். இன்று அரசு என்ற சொல் நவீன அரசையே குறிக்கிறது. நவீன அரசானது, ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோரை மட்டும் உள்ளடக்கிய நவீன காலத்துக்கு முன்பிருந்த அரசுகளை விட முற்றிலும் மாறுபட்டதாகும். எனவே, எது அரசு? எது அரசு அல்ல? என்பதைப் பற்றிய ஒரு சரியான புரிதல் அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு அவசியம் ஆகிறது.