அரசியல் அறிவியல் - நவீன அரசுகளின் பணிகள் | 11th Political Science : Chapter 2 : State
நவீன அரசுகளின் பணிகள்
நவீன அரசு என்பது வளர்ச்சியடைந்த அரசு ஆகும். அது தனது மக்களை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்துக் கொள்ள முயல வேண்டும். அரசு தனது எல்லைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். தனது எல்லைகளுக்குள் வெளிநாட்டவர் எவரும் உட்புகாத வண்ணம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தையின் தேவைகளனைத்தும் நன்கு கட்டமைக்கப்பட்ட பேரியல் பொருளாதார கட்டமைப்பு மூலம் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். 'முதலில் மக்கள் நன்மை ' என்பதே அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும்.
நவீன அரசின் ஆளுகை கொள்கை என்பது அதன் செயல்கள் மக்களின் நலனை பேணுவதாக இருக்கிறதா என்பதாகும். இவ்வாறு அத்தியாவசிய சேவைகளை செய்துதரும் அமைப்பாக நவீன அரசு இயங்குகிறது. நவீன அரசு கீழ்காணும் மூன்று முக்கிய செல்பாடுகளை மையமாக கொண்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அரசுகள் இன்றைய உலகளாவிய சூழலில் 'இடர்காப்பு' என்பதனை பன்மடங்கான நிலைப்பாடுகளில் பொருள் கொள்கின்றன. மனித இடர்காப்பு போன்ற சொற்கள் குடிமக்களின் நலனே முதன்மையானது என்பதையே குறிக்கிறது. தத்துவஞானி இம்மானுவேல் காண்ட் அவர்களின் "நிரந்தர அமைதி" எனும் சிந்தனையின் படி உலக நாடுகள் ஒன்றிணைந்து 'பன்னாட்டு சங்கம்' எனவும் பின்னாளில் 'ஐக்கிய நாடுகள் சபை எனவும் ஒன்றிணைந்து இடர்காப்பு மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை விவாதித்து உலக அமைதியை பேணுகின்றன.
'கருவறையிருந்து கல்லறை வரை' நவீன அரசு அதன் குடிமக்களை கவனித்துக் கொள்ள வேண்டும். உணவு, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியன அரசின் முதன்மையான பொறுப்புகளாகும். இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கங்களின் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த திசையில் இருப்பதை நீங்கள் காணலாம். தமிழக அரசாங்கத்தின் மதிய உணவு திட்டம் மற்றும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் ஆகியவை நாட்டின் பிற பகுதிகளில் பின்பற்றப்படுவது இதற்கு தக்கதொரு சான்றாகும். நவீன அரசு மக்களின் நலனைப் பேணுவதால் "மக்கள் நல அரசு" எனும் மற்றுமொரு கருத்தாக்கம் தோன்றியது
அரசியல் முறைமையின் பொருளாதார செயல்பாடுகளில் தலையிடவேண்டிய கடமையில் நவீன அரசுகள் உள்ளன. மக்கள் தங்களின் திறனை உணர்ந்து மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். நலிவுற்ற பிரிவினர் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாத்தல், லாபம் ஈட்ட இயலாத துறைகளில் முதலீடு செய்வது போன்றவை நவீன அரசின் பொருளாதார பணிகளாக கருதப்படுகிறது.