இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் விடைகள் | 11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement
இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் | இயற்பியல்
கருத்துரு வினாக்கள்
1) விண்மீன்களின் தொலைவை km-இல் அளவிடாமல் ஒளியாண்டு அல்லது பர்செக் அலகில் குறிப்பிடுவது சிறந்தது. ஏன்?
விடை:
● நமக்கும் விண்மீன்களுக்கு மிடையேயான தொலைவு மிக அதிகம். ஒளியாண்டு அல்லது பர்செக் அலகில் குறிப்பிடும்போது எண்களைக் கையாளுவது சிறியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். எனவே மிக நீண்ட தொலைவுகளை கணக்கிடுவது எளிது.
● km அல்லது m அலகுகளைக் கொண்டு கணக்கிடுவது மிகக் கடினமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் அளவிடும்போது பிழைகள் ஏற்படலாம்.
● உதாரணமாக, அருகிலுள்ள விண்மீன் களின் தொலைவு 4 ஒளி ஆண்டுகளாகும். km-ல் குறிப்பிடுவோமானால்
4 × 9,460,730,472,580.8 km.
● எனவே, விண்மீன்களின் தொலைவை ஒளி ஆண்டு அல்லது பர்செக் அளவுகளில் குறிப்பிடுவது சுலபமானது.
2) 20 பிரிவுகள் கொண்ட நகரும் அளவுகோலைக் கொண்ட வெர்னியர் அளவியை விட 1mm புரிக்கோலும், 100 பிரிவுகளும் கொண்ட திருகு அளவி சிறந்தது என நிரூபி.
விடை:
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு =
1. மு. கோ. பிரிவு / வெர்னியர் கோல் பிரிவுகளின் எண்ணிக்கை
= 1mm / 20 = 0.05 mm
திருகு அளவியின் மீச்சிற்றளவு
புரியிடைத் தொலைவு / தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை = 1mm / 100 = 0.01mm
திருகு அளவியின் மீச்சிற்றளவு, வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவை விடக் குறைவாக இருப்பதால், திருகு அளவியே துல்லியமானது.
3) வேறு கோளில் மனிதன் உள்ளபோது எந்த அடிப்படை அளவுகளில் மாற்றம் நிகழும்? ஏன்?
விடை:
● அடிப்படை அளவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில் அனைத்து அளவுகளும் அணுவை படித்தரமாகக் கொண்டு வரையறுக்கப் பட்டவை.
● ஆனால் வழிவந்த அளவுகளில், குறிப்பாக எடை (விசை)யைக் குறிப்பிடும் போது, அவ்விடத்திலுள்ள ஈர்ப்பு முடுக்கத்தன் g மதிப்பைப் பொறுத்து மாறுபடும். ஆனால் நிறை மாறாதது. ஏனெனில் நிறை என்பது அப்பொருளில் எவ்வளவு துகள்கள் நிறைந்துள்ளன எனும் அடிப்படையில் அமைவது.
● உதாரணமாக, புவியில் ஒரு மனிதனின் நிறை 60kg. இம்மதிப்பு நிலவு மற்றும் பிற கோள்களிலும் மாறாத ஒன்று. புவியில் அம்மனிதனின் எடை 60 × 9.8 = 588N நிலவில் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு, புவியின் மதிப்போடு ஒப்பிடும் போது 1/6 ஆகும். எனவே நிலவில் மனிதனின் எடை 60 × 1.6 = 96N.
4) அனைத்து அலகுகளின் அணுப்படித்தரம் மிகவும் பயனுள்ளதா விவரி.
விடை:
● அனைத்து அலகுகளின் அணுப்படித்தரம் மிகவும் பயனுள்ளது. ஏனென்றால் அவை வெப்ப நிலை, அழுத்தம், ஈரப்பதம் போன்ற இயற் காரணிகளால் மாறுபடாது.
● அது காலம் மற்றும் இடத்தைச் சார்ந்திருக்காது. இது மிகவும் எளிதில் கிடைப்பதால், எல்லா ஆய்வகங்களிலும் தேவைக்கேற்றவாறு அது ஒத்திசைவான ஒன்று சோதனை செய்து பார்க்கலாம்.
5) பரிமாண முறையானது மூன்றுக்கு உட்பட்ட இயற்பியல் அளவுகள் உள்ள சமன் பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் ஏன்?
விடை:
● பரிமாண முறையானது மூன்றுக்கு மேற்பட்ட இயற்பியல் அளவுகளின் மிகச் சரியான தொடர்பைப் பெறுவதில் தவறிவிடுகிறது.
● ஏனென்றால் M, L மற்றும் T-ன் அடுக்குகளின் மதிப்பைக் கொண்டு மூன்று சமன்பாடுகளை மட்டுமே பெற முடியும்.
● மூன்று சமன்பாடுகளைக் கொண்டு மூன்றுக்கு மேற்பட்ட தெரியாத இயற்பியல் அளவுகளைக் கணக்கிட இயலாது.