சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் - சமகால வளர்ச்சித் திட்டங்களும் வளர்ச்சிக்கான உரிமையின் அவசியமும் | 12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation
சமகால வளர்ச்சித் திட்டங்களும் வளர்ச்சிக்கான உரிமையின் அவசியமும்
தற்போது நிலவும் உலகளாவிய சவால்கள் குறித்து முன்னர் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கான உரிமைகளைப் பெறுவதில் வர்த்தகம், முதலீடு, நிதி, உதவி (நல்கை), கடன், தொழில்நுட்பம், படைப்பாக்க உணர்வு, உலகளாவிய ஆளுகை என அனைத்திலும் தொடர் விளைவுகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிக்கலான, பன்முகப்பட்ட பிரச்சனைகள் அச்சத்திலிருந்தும் தனிநபர் விருப்பு வெறுப்புகளிலிருந்தும் சுதந்தரத்தையும் பாதுகாப்பினையும் அளிக்கும் உச்சக் கொள்கை இலக்குகளைக் கொண்ட ஒருங்கிணைந்த, ஒத்திசைவான அணுகுமுறைகளுடன் கையாளப்பட வேண்டும். இந்த உச்ச நோக்கப் பார்வைகள் அனைத்து கொள்கை உருவாக்கங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.
உதாரணமாக, மர்ரகேஷ் உடன்படிக்கை உருவாக்கிய உலக வர்த்தக ஒப்பந்தம் இவ்வாறு கூறுகிறது. "வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் வளம் குன்றா வளர்ச்சி எனும் இலக்குக்கு ஏற்ப உலகின் மூல வளங்களை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை அனுமதிப்பதுடன் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் நோக்கிலும், முழு வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்." இதேபோன்று, ஐக்கிய நாடுகள் பொது அவையும் தமது வளர்ச்சிக்கான உரிமை ஆண்டுத் தீர்மானத்தில், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன் பன்னோக்கு வர்த்தக பேச்சுவார்த்தைகளின் வழிகாட்டுதல்களின் படி மானுட மேம்பாட்டினையும் உறுதிப்படுத்தும்படியும், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பங்குதாரர்களை வலுப்படுத்தும்படியும் வலியுறுத்துகிறது.
மேலும் தமது உறுப்பு நாடுகள் வளர்ச்சிக்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தங்கள் கூட்டுத்தகுதிகளை மேம்படுத்தும் வண்ணம் உலக வர்த்தக அமைப்பு, பன்னோக்கு பன்னாட்டு வங்கிகள், உலகளாவிய வர்த்தகம், முதலீட்டு, நிதி அமைப்புகள் போன்ற அமைப்புகளுக்கான ஒரு செயல்திட்ட வரையறைகளை இத் தீர்மானம் வழங்குகிறது.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பரவலாக நடைபெற்றுவரும் இச்சூழலிலும் வர்த்தக - முதலீட்டு உடன்படிக்கைகளால் மனித உரிமைகள் பாதிப்புக்குள்ளாகும். புரிதல் அதிகரித்துள்ள நிலையில் அரசுகள் புதிய வர்த்தக, முதலீட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திடும் போது தமது மனித உரிமைகள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் அவற்றின் வளர்ச்சிக்கான உரிமைகளை உள்ளடக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். இதேபோல், இப்பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகள் உள்நாட்டு வளங்களைத் திரட்டுவதில் கூட பலவீனமாக உள்ள நாடுகளுக்குள் மிகவும் தேவைப்படும் குழுக்கள், மக்கள் மற்றும் நாடுகளை இலக்காகக் கொண்டு, தேவையான அதிகாரப்பூர்வ உதவிகள் மற்றும் நிதி நல்கைகளுடன் பன்னாட்டு உதவிகளும் தேவையான அளவுக்கும் வெளிப்படையாகவும், பதில் சொல்லும் பொறுப்புகளுடனும் வழங்குவதையும் கோருகிறது.