சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation
அருஞ்சொற்பொருள்
❖ தணிப்பு: மாசு அளவு அல்லது அடர்த்தியைக் குறைத்தல் அல்லது அகற்றுதல்.
❖ காற்று தரம் : காற்றில் கலந்துள்ள மாசுவின் அளவை அளவிடும் அலகு.
❖ பல்லுயிர் பெருக்கம் : இப்புவியில் வாழும் எண்ணற்ற உயிர்கள் எவ்வாறு தங்கள் வாழிடங்களுக்குள்ளும் உயிர் மண்டலங்களிலும் ஊடாட்டல் கொள்கின்றன என்பதை இது குறிக்கிறது. பல்லுயிர்ப்பெருக்கம் என்பது நிலம் மற்றும் நீரில் வாழும் தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அனைத்தையும் குறிக்கும்.
❖ உயிரி : ஒரு குறித்த பகுதியில் உள்ள அனைத்து உயிர்ப்பொருட்களும் உயிரி என்று அழைக்கப்படுகிறது. தாவரங்களைக் குறிக்கவும் அவ்வப்போது பயன் படுத்தப்படுகிறது.
❖ கார்பன் பற்று : பசுமைக் குடில் வாயுக்களைக் குறைக்கும் வகையில் கட்டுப்படுத்தப்படும் கார்பன்-டை ஆக்சைடின் ஒருஅலகு.
❖ சூல் அமைப்பு : உயிரியல் சமுதாயங்கள் மற்றும், அதனைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருட்கள் இடையே நிகழும் ஊடாட்டங்களைக் குறிக்கிறது.
❖ சுற்றுச்சூழல் : ஒரு அங்கக உயிர், வளர்ச்சி, வாழ்தலைப் பாதிக்கும் வெளி சூழல்களின் தொகுப்பு.
❖ சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை : புதிய சாலைத்திட்டங்கள் அல்லது நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் அல்லது சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டம் குறித்தும் எதிர்பார்க்கப்படும் சுற்றுச்சூழல் கேடுகளை மதிப்பிட்டு அளிக்கும் அறிக்கை ஆகும்.
❖ பசுமைக்குடில் விளைவு : கார்பன்- டை ஆக்சைடு அல்லது பிற வாயுக்களால் புவியின் காற்று மண்டலத்தில் உருவாக்கப்படும் வெப்பம் பசுமைக்குடில் விளைவு என அழைக்கப்படுகிரது. இதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் பூமியை அதிகமாகத் தாக்கி, வெப்ப இழப்பு சமநிலையைக் குலைக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
❖ கதிரியக்க பொருள் : கதிரியக்கம் வெளியிடும் பொருள்.
❖ வன மறு உருவாக்கம் : வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக வனப்பகுதிகளில் புதிய மரங்கள் வளர்த்தல்.
❖ வளம் குன்றா வளர்ச்சி : இன்றைய மக்களின் தேவைகளுக்காக நிலம் மற்றும் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தும் போது எதிர்கால தலைமுறைகளுக்கும் பயன்படும் வகையில் கட்டுப்பாட்டுடன் அவ்வளங்களைப் பயன்படுத்துதல் ஆகும்.
❖ அனல் மாசு : தொழிற்சாலைச் செயல்பாடுகளால் உருவாகும் வெப்பநீரை வெளியிடுவதால் நீர் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது அனல் மாசு ஆகும்.
❖ கழிவுஅற்ற நிலை (ஜீரோ எமிசன்) : ஒரு பொறி அல்லது மோட்டார் அல்லது இதர ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தும் போது வெளியேறும் வாயுக்கள் அல்லது வேதிப்பொருள்களால் அச்சுற்றுச்சூழலில் வாழும் எந்த உயிரினத்துக்கும் பாதிப்பு உருவாகவில்லையான அந்நிலை இவ்வாறு அழைக்கப்படுகிறது.