உலகமயமாக்கல்: கருத்தியல், காரணங்கள், பின் விளைவுகள்
பொருள்
நாடுகளுக்கு இடையிலான ஒரு ஊடாட்ட அமைப்பை வலியுறுத்தும் உலகமயமாக்கல் ஒரு ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. இந்த ஊடாட்டம் பல வகை வெளிப்பாடுகளில் செயல்படுகிறது; சமூகம் முதல் அரசியல் வரை; பண்பாடு முதல் பொருளாதாரம் வரை; தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு ஒருங்கிணைந்த உலக பொருளாதாரத்தினை உருவாக்குவதில் பன்னாட்டு வர்த்தகமும் எல்லை கடந்த முதலீடுகளும் முக்கிய விழுமியங்களாக ஏற்கப்பட்டுள்ளன. அதன் உள்ளார்ந்த கூட்டுத்தன்மையை எடுத்துக்கொண்டால் ஒருங்கிணைந்த ஊடாட்டங்கள் குறித்து கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. கோட்பாட்டளவில், அது எதிர்மறை ஊடாட்டம், நேர்மறை ஊடாட்டம் என இரு துணை உறுப்புகளைக் கொண்டுள்ளது. முன் வர்த்தகத் தடைகள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அகற்றக்கோரும் சுதந்திரம் வர்த்தகக் கொள்கையாகும். பின்னது, உலகளாவிய பொருளாதாரச் சட்டங்கள், கொள்கைகளைத் தரப்படுவதில் கவனம் செலுத்துகிறது.
எந்தவொரு கொடுக்கப்பட்ட வரையறையிலும் உலகமயமாக்கல் என்பது அதன் உண்மை அர்த்தத்தில் பொருளாதார, சமூக அடிப்படையிலான ஒரு பன்னாட்டு வலைப்பின்னலை உருவாக்குவது ஆகும். உலகமயமாக்கல் என்ற சொல்லாடல் முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது என்று பார்த்தால் 1930இல் கல்வியில் மனித அனுபவம் குறித்து சீராய்வு செய்யும் நூலான 'புதிய கல்வியை நோக்கி' எனும் புத்தகத்தில் கையாளப்பட்டுள்ளது. 1897இல் 'பன்னாட்டு பெருநிறுவனங்கள்' எனும் சொல்லாடல் சார்லஸ் ரஸ்ஸல் டாஜெல் என்பவரால் எழுதப்பட்ட பொருளாதார இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள், பெரும் அறக்கட்டளைகளை அழைக்க இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு சொல்லாடல்களும் 1960 முதல் 1980 வரை பொருளாதாரம் மற்றும் பிற சமூக அறிவியல் துறைகளின் வல்லுனர்களால் மாற்றி, மாற்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.
உலக வங்கி, 'உலகில் பொருளாதாரங்கள் மற்றும் சமுதாயங்கள் இடையே அதிகரிக்கும் ஒருங்கிணைப்பு' என்று உலகமயமாக்கலை வரையறை செய்கிறது. உலகமயமாக்கல் என்ற சொல் கருத்தியல் சட்டகத்துக்குள் மாற்றம் பெற்று புதிய சிந்தனைகளை முடுக்கி விட்டுள்ளது. இது உலக பொருளாதார உரையாடல்களில் புதிய வியாக்கியானங்களையும் விவாதங்களையும் தூண்டியுள்ளது. பனிப்போர் முடியும் தருவாயில், பொருளாதாரம் மற்றும் தகவல் பரிமானத்தில் மேலும் மேலும் உள் இணைக்கப்படும் ஒரு உலகை பிரதிநிதித்துவப்படுத்த இக்கருத்தாக்கச் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. ஒரு தனி - உலகளாவிய செயல்முறை மாற்றங்களின் ஒரு மாதிரியாகச் செயல்பட்டு, உலகமயமாக்கல், இதுவரையான பன்னாட்டு பொருளாதார வடிவங்களை மாற்றி எழுதும் ஒரு அடிப்படை வளர்சிதைமாற்றத்தை அவிழ்க்கிறது.
உலக வர்த்தக அமைப்பின் (IVTO) படி, "உலகமயமாக்கல் அல்லது மக்கள் மற்றும் நாடுகளின் உள் இணைப்புகள், பரஸ்பர சார்பு நிலைகள் அதிகரிப்பு, பொதுவாக ஒரு ஒன்றுக்கொன்று சார்ந்த அங்கங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது: பொருட்கள், சேவைகள், நிதி, மக்கள் மற்றும் கருத்தாக்கங்கள் எல்லை கடந்து சுதந்தரமாகச் செல்வதை அதிகரிக்க அனுமதித்தல்; இவ்வாறு சுதந்தரமாகச் செல்வதை ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் நிறுவனமாற்றங்களை தேசிய, பன்னாட்டு அளவில் ஊக்குவிப்பது. உலகமயமாக்கலால் நேர்மறை விளைவுகள் மட்டுமல்லாமல் எதிர்மறை விளைவுகளும் ஏற்படுகின்றன என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது." சமூக - பொருளாதார மற்றும் அரசியல்-தொழில்நுட்ப அடிப்படைகளில் உலகமயமாக்கல் கருத்தியலுக்கு விளக்கம் அளிப்பதில் உலக சுகாதார நிறுவனம் (IVHO) ஒரு சிறந்த பார்வையை வழங்குகிறது.
கோட்பாடு மற்றும் நடைமுறைக்கான முக்கிய அங்கம் என்ற அளவில் உலகமயமாக்கல் பல்வேறு களங்களுக்கு இடையிலான ஒரு இணைப்பு கட்டமைக்கப்படுவதை முன்னிறுத்துகிறது. பன்னாட்டு நிதியம் அமைப்பு 2002இல் உலகமயமாக்கலின் அடிப்படையான நான்கு கோட்பாடுகளை அடையாளப்படுத்தி யுள்ளது. இதன் மூலம் உலகமயமாக்கல் சொல்லாடல் குறித்த ஐயங்கள் பெருமளவு தெளிவுக்குள்ளாகின்றன. அவை பின்வருமாறு: வர்த்தகமும், பரிவர்த்தனைகளும், மூலதன நகர்வுகளும், முதலீடுகளும், இடம்பெயர்தலும் மக்கள் நகர்வுகளும், அறிவுப் பரவலாக்கம் ஆகியன ஆகும்.
உலகமயமாக்கல் செயல்முறை பல்வேறு மட்டங்களிலான அமைப்புகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது.
பொருளாதார பரிமாணம்
சுதந்தரமான வர்த்தகம் என்பதே உலகமயமாக்கலின் அச்சாணி ஆகும். இதில் மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லை . உலகமயமாக்கலின் உயர்மட்டச் செயலாக்கம் இதுதான். கடந்த அண்மைக்காலங்களில் உலகமயமாக்கல் பொருளியல் செயல்முறைகளில் ஐக்கிய மாநிலங்கள், ஜப்பான், சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் குழுவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது கண்கூடு. பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், மெக்டொனால்ட் போன்றவையும் பன்னாட்டு அமைப்புகளான பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்றவையுமே உலகச் சந்தையை நிர்ணயம் செய்பவதில் முன்னணி அமைப்புகளாக உள்ளன. பாட்டரி கூற்றுப்படி, பொருளியல் உலகமயமாக்கல் என்பதை மூன்று மாறுபட்ட அம்சங்களின் கூட்டிணைப்பாகக் கொள்ளமுடியும். அவை பின்வருமாறு:
1) தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் உலகம் முழுவதும் மூலதன நகர்வு அதிகரிப்பு.
2) உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற மீ-தேசிய அமைப்புகள் பரவலாக்கம்.
3) நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரிப்பு.
பண்பாட்டுப் பரிமாணம்
பண்பாடுகள், கருத்தியல்களின் உலகப் பரிமாற்றங்களுக்கான முகவராக உலகமயமாக்கல் செயல்படுகிறது. உலகமயமாக்கல் எனும் சொல் பெரும்பாலும் நவீனத் தன்மை எனும் சொல்லாடலுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இம்மாதிரியான செயல்முறைகள் ஒரு ஒற்றைத் தரப்படுத்தப்பட்ட "நடவடிக்கைகள், கருத்தியல்கள், மதிப்பீடுகளைத் திணித்தல், ஒரு ஒற்றைப் பண்பாட்டு உலகை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கி முடுக்கிவிடப் படுவனவாகவே இருக்கும். உலக வர்த்தகம் உருவான காலத்தில் இருந்தே இதன் தடயங்களைக் காணலாம். ஒவ்வொரு நுகர்பொருளும் ஒரு பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, உள்நாட்டு சந்தையில் மேற்கத்திய ஜவுளி துறை பன்னாட்டு நிறுவனங்கள் வருகையைத் தொடர்ந்துதான் இந்திய ஆடை வடிவமைப்புத் துறை டெனிம்' ரக துணியை ஏற்றுக்கொண்டது. மேலும், தொடர்பு தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பல பகுதிகள் மற்றும் மாறுபட்ட பண்பாடுகளைச் சேர்ந்த தனிநபர்களை ஒருங்கிணைப்பதால் இந்த பரிமாற்றம் எளிதாக நிகழ்கிறது. இவ்வாறு ரத்தமும் சதையுமாக நிகழ்ந்த ஊடாட்டங்கள் தற்போது புதிய செயற்கை மற்றும் மீ வெளி ஊடாட்டங்களில் நிகழ்கின்றன.
இது உலக துணைப் பண்பாடுகளின் புதிய ஒழுங்கை மாற்றி அமைப்பதில் பெரிதும் உதவுகிறது. இதன் பொருளில், சிலர் விமர்சிப்பதைப் போன்று உலகமயமாக்கல் என்பது அமெரிக்கமயமாக்கல் அல்லது மேற்கத்திய மயமாக்கல் என்பதாகக் கொள்ள முடியாது. பண்பாட்டுச் சொல்லாடலில் அது பரஸ்பர கொடுத்து வாங்கலுக்கான ஒரு சட்டகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, மேற்கத்தியம் அல்லாத சமுதாயங்கள் எவ்வாறு மேற்கத்திய பண்பாட்டு அம்சங்களை எவ்வாறுதகவமைக்கிறது என்பதோடல்லாமல் மேற்கத்திய அமைப்புகள் அன்னிய மதிப்பீடுகளை அனுபவப்பூரமாகவோ இல்லாமலோ எவ்வாறு உள்ளீர்த்துக் கொள்கிறது என்பதையும் பொருத்து அமைகிறது.
அரசியல் பரிமாணம்
1945இல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து குடிமக்கள் நலன்கள் மீதான அரசுக் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இக் காலகட்டம், மனித உறவுகள் புலத்தில் அரசு சாரா அமைப்புகள், மீ-தேசிய அமைப்புகள் போன்ற அரசு சாரா நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவது அதிகரித்து வந்துள்ளதைக் குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னோக்கு அமைப்புகளின் உறுப்பினர்கள் அதிகரிக்கத் தொடங்கியது, சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி, மண்டல நிறுவனங்களின் அதிகரிப்பு போன்றவை இக்காலகட்டத்தில்தான் உருவானது என்பதை ஒருவர் கவனிக்கலாம். கருத்தியல்ரீதியாக, தேசிய உணர்வுகளுக்குப் பதில் ஒரு பன்னாட்டுப் பண்பாடு அல்லது பெரு நகரப் பண்பாட்டை உலகமயமாக்கல் முன்வைக்கிறது. ஒரு ஒற்றை உலக அரசு சாத்தியமில்லை எனினும் , யதார்த்தத்தில், நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பு கணிசமான அளவு அதிகரிப்பது சாத்தியமே ஆகும். அரசு - சாரா பிரிவினரின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான தனது கட்டுப்பாடுகள் தளர்வதால் அரசு அமைப்புகள் தமது இறையாண்மையை இழக்க நேரிடும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலகமயமாக்கலின் நிறைகள்
அ) பொருளாதாரம், சமூகம், அரசியல், பண்பாடு அடிப்படையில் உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்து ஒத்துழைக்க வேண்டிய நிலை உருவாகும்.
ஆ) சுதந்திர வர்த்தகத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; போட்டி உயரும்; உழைப்பு இடம்பெயரும்; பொருளாதார வளம்; பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடு குறையும்.
இ) தொழில்நுட்பம் மற்றும் அன்னிய மூலதனம் ஊடுருவலால் ஏழை நாடுகளில் பொருளாதார சமநிலை உருவாகும்.
ஈ) வறுமையை ஒழிக்கவும் பொருளாதார வளம் பெருகவும் உதவும்.
உ) பண்பாடுகளுக்கு இடையில் பரிமாற்றமும், பல் பண்பாட்டுச் சூழலும் ஊக்கம் பெறும்.
அ) உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனம் "உலகமயமாக்கலால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆவர்; ஏழைகள் மேலும் ஏழ்மைநிலைக்குத்தள்ளப்படுவர்." என்பதாகும்.
ஆ) அறிவுசார் சொத்துரிமைத் திருட்டு அதிகரிக்கும் அபாயம்.
இ) மூல வளங்களின் சமத்துவமற்ற பகிர்வு.
ஈ) பன்னாட்டு குழும நிறுவனங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நிலைக்கு அரசுகள் தள்ளப்படும்.
"முதல் இடத்துக்கான போட்டி: உலகமயமாக்கலின் உண்மைக் கதை" எனும் புத்தகத்தில், உலகமயமாக்கல் என்பது "உலகைச் சுருக்கி, தொலைவுகளைக் குறைத்து மூடிய ஒரு நிலையை உருவாக்குகிறது. பயன்கள் அடிப்படையில் மட்டும் உலகின் எந்த ஒரு மூலையில் உள்ள ஒருவரும் மறு மூலையில் உள்ள ஒருவருடன் தொடர்புகொள்வதை அனுமதிக்கிறது" என்று தாமஸ் லார்ஸன் கூறியுள்ளார்.
"மிக அண்மைக்காலமான 1960 முதல் 1998 வரையான காலக்கட்டத்தில் ஏற்பட்ட உலக வர்த்தக, முதலீடுகளின் துரித வளர்ச்சி நாடுகளுக்கு உள்ளும் நாடுகளுக்கு இடையிலும் என இரு பக்கங்களிலும் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. உலக மக்கள் தொகையில் வெறும் 20 விழுக்காடாக உள்ள பணக்காரர்கள் உலகின் மொத்த செல்வத்தில் 86 விழுக்காட்டினை அனுபவிக்கின்றனர். ஆனால் 80 விழுக்காடு ஏழைகள் உலக செல்வத்தில் வெறும் 16 விழுக்காட்டினை மட்டுமே அடைகிறார்கள்" என்று யு.என்.டி.பி அறிக்கை கூறுகிறது.