Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்தியாவும் உலகமயமாக்கலும்
   Posted On :  04.04.2022 04:54 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்

இந்தியாவும் உலகமயமாக்கலும்

இந்தியாவைப் பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது இந்தியப் பொருளாதாரத்தினை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்தியாவும் உலகமயமாக்கலும் 

இந்தியாவைப் பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது இந்தியப் பொருளாதாரத்தினை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே, இந்தியாவின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் அன்னிய நேரடி மூலதனத்தினை (எப்.டி.ஐ) அனுமதிப்பதை அடிநாதமாகக் கொண்ட ஒரு சூழலை உருவாக்கக்கூடிய வகையில் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட வேண்டும் என்பதை இக்கருத்து வலியுறுத்துகிறது. இதனால் உள் நாட்டுச் சந்தையில் பன்னாட்டு குழும நிறுவனங்கள் நுழைவதற்குத் தடையாக இருக்கும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் அகற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

செயல்பாடு

இந்தியாவின் முன்னணி 10 பன்னாட்டு  குழும நிறுவனங்களைப் பட்டியலிடவும்.

பொருளாதார திசைவழியில் இந்தியா அண்மைக்காலமாக காணும் ஏற்றம், 1991இல் பொருளாதார மந்தத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய அளவில் நிதிநிலை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட புதிய பொருளாதாரக் கொள்கையினால் (நியு எக்கனாமிக் பாலிசி) விளைந்த ஏற்றம் ஆகும். அது, பொதுவுடமை மாதிரித் தடைகளில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை விடுவித்து, இந்திய பொருளாதாத்தின் அடித்தளக்கட்டமைப்பை மாற்றி அமைத்தது. இதனால் ஏழைகள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அன்னிய மூலதனத்துக்கு இடமளித்து ஒரு ஏற்றுமதிசார் சூழலை ஆதரிக்கும் கொள்கைகள் கொண்ட ஒரு நாட்டில் வரவு செலவு சமநிலை (பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்ஸ் ) புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். பணவீக்கம் ஆண்டுக்கு 17 விழுக்காடு அளவுக்கு உயரும்போதும் செலாவணி கையிருப்பு சுமார் பில்லியன் அளவை எட்டும்போதும் நெருக்கடி உருவாகிறது. மேலும், நிதிப் பற்றாக்குறை உருவாகி, பொருளாதாரம் நிலை குலையும்.

இந்தியா 1991 முதல் பின்பற்றும் புதிய பொருளாதாரக் கொள்கை தாராளவாதம், தனியார்மயம், உலகமயமாக்கல் (எல்.பி.ஜி) என்றும் அழைக்கப்படுகிறது. தேசியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய போட்டிக்கு ஏற்றவாறு மாற்றுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் அபரிமிதமான மாற்றத்துக்குத் தொழிற்துறை, வர்த்தகம், நிதி மூன்றும் உள்ளாகிறது. உள்நாட்டிலும் வெளி உலகிலும் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தங்கள் காரணமாக உலகச் சந்தையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமான மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது. எல்.பி.ஜியின்விளைவாக 1990-களில்மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:


பொதுத்துறையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பிரிவுகள் 

1. ஆயுதங்கள், வெடிமருந்துகள், ராணுவத் தளவாடங்கள், ராணுவ விமானத் தளவாடங்கள், போர்க்கப்பல்கள்

2. அணு ஆற்றல்

3. ரயில் போக்குவரத்து


அ) மதிப்பிழப்பு (டிவேல்யுவேசன்): 18 – 19 என்ற அளவில் முக்கிய அன்னிய செலவாணிகளுக்கு எதிராக தேசிய செலவாணியின் மதிப்பு குறைக்கப்பட்டது உலகமயமாக்கலை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை ஆகும். வரவு செலவு சமநிலை நெருக்கடியைத் தீர்க்க இது உதவுகிறது. 

ஆ) முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் (டி இன்வெஸ்ட்மெண்ட்): தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு தனியாருக்கு விற்கத் தொடங்கியது. 

இ) உரிமக் கட்டுப்பாடுகள் (லைசன்ஸ் ராஜ்) அகற்றம்: தாராளச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில் தொழில்கள் தொடங்க விதிக்கப்பட்டிருந்த ஏராளமான உரிம முறைகள் அகற்றப்பட்டன. இதனால் ஏராளமான தொழில்கள் அரசின் உரிமக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டன.

ஈ) அன்னிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ): அன்னிய நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் நேரடியாக முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அன்னிய முதலீடுகள் தாராளமாகத் திறந்து விடப்பட்டன. 2018இல் ஒற்றை வணிக முத்திரை சில்லறை வணிகம், கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களில் 100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உ) ஏகபோக வர்த்தகத் தடைச் சட்டம் (எம்.ஆர்.டி.பி) நீக்கம்: இந்தியாவில் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுக்கவும் தொழில்களில் ஏகபோக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஏகபோக வர்த்த கத் தடைச் சட்டம், 1969 (எம். ஆர். டி.பி) கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் தாராளமயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசால் நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, அதாவது ஏகபோகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பதிலாக போட்டியை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள் சட்டம், 2002இல் கொண்டுவரப்பட்டது.


உரிமம் பெறுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள தொழில்கள் பின்வருமாறு 

  மது பானங்கள் வடிப்பு ஆலை 

புகையிலைப் பொருள்கள் மற்றும் அதன் துணை பொருள்கள் உற்பத்தி 

மின்னணு விண்வெளி மற்றும் ராணுவ தளவாடங்கள் : அனைத்து வகைகளும் 

வெடி பொருள்கள், பாதுகாப்பு பியூஸ்கள், துப்பாக்கி பவுடர், நைட்ரோ செல்லுலோஸ், தீப்பெட்டிகள் 

அபாய வேதிப்பொருள்கள் 

மருந்துகள், மருந்து பொருள்கள்


செயல்பாடு

1. உலகமயமாக்கலின் தற்போதைய நிலை, உலகின் கவலைகள், இந்திய பொறுத்தப்பாட்டில் உலகமயமாக்கல் ஆகிய தலைப்புகளில் விவாதிக்குமாறு மாணாக்கரைக் கேட்டுக்கொள்ளலாம்.

2. உலகமயமாக்கலுக்கு உலக வர்த்தக அமைப்பின் முக்கியத்துவம் குறித்த புரிதலை பகிரச்செய்யலாம்.

3. உலக வர்த்தகப் போர் நடைபெறும் இச்சூழலில் உலக வர்த்தகக் காட்சிகள் குறித்து விவாதிக்கலாம்.



12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation : India and Globalisation in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் : இந்தியாவும் உலகமயமாக்கலும் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்