Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இந்திய நிலைபாடு
   Posted On :  04.04.2022 04:43 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்

சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இந்திய நிலைபாடு

உலகளாவிய சுற்றுச்சூழல் ஆளுகையில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இந்திய நிலைபாடு

உலகளாவிய சுற்றுச்சூழல் ஆளுகையில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். 1972 ஸ்டாக்ஹோல்ம் மாநாடு முதல் 2015 தில்லி COP 21 வரை இந்தியா ராஜதந்திர அளவிலும் நிர்வாக மூலதன முதலீடு அளவிலும் கவரத்தக்க அளவிலான பங்களிப்பினை வழங்கியுள்ளது. ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நிகழ்த்திய உரை இப்பிரச்சனையில் புதிய அரசியல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கியது. அதாவது, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அம்சங்களைக் கட்டுப்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இருக்கும் பொறுப்பினை இந்தியா திட்டவட்டமாகக் சுட்டிகாட்டியது. குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் கொள்கைகளின் அடிநாத கோட்பாடுகளை 1992 ரியோ உச்சிமாநாடு நடைபெற்ற காலத்திலிருந்தே காண முடியும். அந்த மாநாட்டின் பிரகடனமாக "சமத்துவமற்ற ஓர் உலகில் புவி வெப்பமாதல்" என்ற அம்மாநாட்டு பிரகடனத்தில் புவி வெப்பமாவதில் முக்கிய காரணியான கார்பன் வெளியேற்றத்தில் பெரும் பங்கு மேற்கத்திய நாடுகளுக்கே உள்ளது என்றும், இதனை "கார்பன் காலனியாக்கம்" என்றும் மேற்கத்திய நாடுகள் மீது நேரிடியாகக் குற்றம் சுமத்தியது. இதற்கு இந்திய கொள்கைகளின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணமாகும். பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் சுமை வளரும் நாடுகள் மீது சுமத்தப்படுவதை இந்தியாதிட்டவட்டமாக எதிர்த்து வந்துள்ளது. ஏனெனில், கார்பன் வாயு வெளியேற்றத்தில் தெற்கு நாடுகளில் பங்களிப்பு மிக மிகக் குறைவாகும். புவி வெப்பமாதல் உச்ச நிலை அடைவதில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பே அதிகம்.


அதே நேரத்தில் உள்நாட்டு மட்டத்திலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அரசமைப்புச் சட்டம் அளவிலும், சட்டப்பொறுப்புகள் அளவிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவில் அமலாக்கப்படும் முக்கிய சட்ட ஆவணங்கள் பின்வருமாறு :

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (1986), வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (1972), காற்று மாசு கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டம் (1981), நீர் மாசுபடுதல், கட்டுப்படுத்துதல் சட்டம் (1974), இந்திய வனச் சட்டம் (1927). நாட்டில் சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் முதன்மை அமைப்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் செயல்படுகிறது. நீதித்துறை செயல்பாட்டுவாதம் அடிப்படையில் அவ்வபொழுது சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் தலையிடுவதன் மூலம் இந்திய நீதித்துறையும் ஈடு இணையற்ற பங்களிப்பினை ஆற்றி வருகிறது.

தேசியப் பசுமை தீர்ப்பாயம்

தேசியப் பசுமை தீர்ப்பாயம் 2010-ல் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அதீத மாசு வெளியேற்ற வழக்குகளை விசாரித்து வருகிறது.


சுற்றுச்சூழல் பிரச்சனையில் இந்தியா - உலகநாடுகள் ஒத்துழைப்பு

சுற்றுச்சூழல் குறித்த பல்நோக்கு சிறப்புப் பேரவைகள், உடன்படிக்கைகள், நிறுவனங்கள் ஆகியனவற்றில் இந்தியா உறுப்பினராக உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேட்டில் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கும் வரலாற்றுப்பூர்வ பொறுப்பினை இந்திய அரசு தொடர்ந்து சுட்டிகாட்டி வருவதுடன் தனிநபர் மாசு வெளியேற்றத்தை பொறுத்தவரை இந்தியா மிகக் குறைந்த அளவே வெளியேற்றுவதையும் முன்னிலைப்படுத்தத் தயங்குவதில்லை . தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளவாறு காலநிலை மாற்றம் என்பது ஒரு மேம்பாட்டிற்கான நிலைப்பாடு என்ற நிலையை வகிக்கிறது. "தலைமுறைகளுக்கிடையில் சமத்துவம்" (சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இது முக்கிய நிலைபாடாகும்) எனும் அடிப்படையில் தற்போதைய வாழும் தலைமுறையானது வளர்ச்சி என்பதை உடனடித் தேவைக்கு மட்டும் என பயன்படுத்தி எதிர்வரும் தலைமுறைகளுக்கு இந்த பூமியை காலநிலை மாற்றப் பாதிப்பு ஏதுமற்ற நிலையில் அளிப்பதாகும். 

பாரிஸ் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நாடு எனும் அடிப்படையில் உடன்படிக்கையின் சாராம்சத்தை அங்கரிக்கிறது மேலும் "சமத்துவம்" மற்றும் பொது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதுடன் பொறுப்புணர்வுகள் மற்றும் தகுதிநிலை சார்புகள் இடையே வேறுபாடுகள் காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் (CBDR-RC) வலியுறுத்துகிறது. கார்பன் மயமாக்கல் குறித்து இந்தியா மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டின் காரணமாக, மின் உற்பத்தியில் தனது நிலக்கரி சார்பினைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும் செயல்திட்டத்தைத் தழுவியுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்திய அரசால் முன்மொழியப்பட்ட கருத்துருவான உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி ஏற்கப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழல் செயல்நிரலில் இந்தியாவின் பங்களிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி

உலகளாவிய சூரிய ஒளிகூட்டணி(ISN) என்பது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட கூட்டணியாகும். இதில் 122 நாடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சூரிய ஒளி வெப்ப நாடுகளாகும். இவை அனைத்தும் கடக, அட்ச ரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ள நாடுகளாகும். தற்போது ஐ.நா உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. 

கூட்டணி நாடுகள் சூரிய வெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதை பாரிஸ் பிரகடனம் ஊக்கப்படுத்துகிறது. 

சூரிய ஆற்றல் மூலம் ஆயிரம் GIV மின்சக்தி உற்பத்தி செய்வது உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) அமைப்பின் முக்கிய இலக்குகளின் ஒன்றாகும். 2030ஆம் ஆண்டிற்குள் இதற்கான மூலதனமாக 1000 மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டுவதும் இதன் நோக்கமாகும். 

இதனைச் செயல்படுத்துவதற்காக, சூரிய ஆற்றல் அபரிமிதமான உள்ள நாடுகளை ஒருங்கிணைத்து உலகின் மின்தேவையை நிறைவு செய்யவும் இதன் மூலம் மின்சார விலையைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, பயன்பாட்டில் இருக்கும் சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது கூட்டு சூரிய மின் உற்பத்தி ஆய்வுத் திட்டங்கள் மற்றும் தகுதிப்படுத்துதல் திட்டங்களையும் ஊக்குவிக்கிறது. 

உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) வரையறை உடன்படிக்கை 2017 டிசம்பர் 6 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் சட்டபூர்வ தலைமையகம் இந்தியாவில் குருகிராம் நகரில் பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக இயங்கி வருகிறது.


கொச்சிபன்னாட்டு விமான நிலையம்

கேரளாவில் அமைந்துள்ள கொச்சி பன்னாட்டு விமான நிலையமே முழுமையாக சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் சூரிய ஒளி மின்சார விமான நிலையமாகும்.

இவ்வாறு சொல் அலங்காரமாக புகழப்படும் போதிலும் இந்தியா உலகின் மோசமான சுற்றுச்சூழல் கொண்ட நாடாகவே இருக்கிறது. உலக நாடுகள் வெளியிடும் சுற்றுச்சூழல் மாசு குறித்த உலக கார்பன் திட்ட அறிக்கை 2018இல் வெளியிடப்பட்டது. இதில் உலகில் அதிக சுற்றுச்சூழல் மாசு வெளியிடும் நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. 2017ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மாசு அளவில் இந்தியாவின் பங்கு 7 சதவீதமாகும். இதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் நாடுகளின் வரிசையில் சுற்றுச்சூழல் செயல்பாட்டு வரிசை அறிக்கை 2018இல் வெளியிடப்பட்டது. 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இவ்வரிசையில் இந்தியா

176-வது இடம் வகிக்கிறது. காற்று மாசுவினால் ஏற்படும் மரணம் அதிகரித்ததாலும் சுற்றுச்சூழல் சுகாதாரக் கொள்கை மோசமாக அமலாக்கப்பட்டதாலும் இந்தியா இந்த கீழ் நிலையை அடைந்துள்ளது.


நகோயா விதிமுறைகள்

இந்தியா கையெழுத்திட்டுள்ள பன்னாட்டு சிறப்பு பேரவைபிரகடனங்கள், உடன்படிக்கைகள் மற்றும் அமைப்புகள் 

அழிந்துவரும் அரிய வனங்கள் வாழ் நீர்மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு 

இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பராமரிப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு 

வலசை செல்லும் வன உயிரினங்கள் பாதுகாப்பு சிறப்புப் பேரவை 

பன்னாட்டு திமிங்கல ஆணையம் 

வனப்படுத்துதலுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு 

பன்னாட்டு வெப்ப மண்டல மரங்கள் அமைப்பு 

ராம்சர் சிறப்பு மாநாடு 

உயிரி பல்லுயிர் பெருக்க சிறப்புப் பேரவை 

மூங்கில் மற்றும் ராத்தல் பன்னாட்டு வலைப்பின்னல் 

ஆசியப்பசிபிக் வனமாக்கல் ஆணையம் 

காடுகள் அழிப்பு தடுப்பு ஐக்கிய நாடுகள் சிறப்புப் பேரவை 

காலநிலை மாற்றம் ஐக்கிய நாடுகள் வரையமைப்பு சிறப்புப் பேரவை

கியோட்டோ ஒப்பந்தம்


நகோயா விதிமுறைகள்

நகோயா விதிமுறைகள் என்பது 1992 உயிரியல் பன்மைய மாநாட்டு முடிவுகளின் கீழ் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதுணைஉடன்படிக்கையாகும். இது உயிரியல் பன்மையத்தை பயன்படுத்துவது குறித்து எழுந்த கேள்விகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையாகும். அதாவது, அணுகுதல் மற்றும் பயனடைதலில் பகிர்தல் (ABS) உடன்படிக்கையான இது நகோயா விதிமுறைகள் என்று அழைக்கப்படுகிறது. மரபியல் மூல வளங்களை நியாயமாகவும், சமமாகவும் அணுகி,பயன்களை நியாயமாகவும், சமமாகவும் பகிர்தல் குறித்த விதிமுறைகளை இது கொண்டுள்ளது.


12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation : India’s Stand on Environmental Issues in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் : சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இந்திய நிலைபாடு - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 12 : சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்