சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் - பூர்வக்குடி மக்களும் அவர்களின் உரிமைகளும் | 12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation
பூர்வக்குடி மக்களும் அவர்களின் உரிமைகளும்
வரையறை
ஒரு பரந்த தளத்தில் பண்பாட்டு பன்மைத்துவம் கொண்ட சமூகப் பிரிவுகளே பூர்வக்குடி மக்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு, சுமார் 5000 பண்பாட்டு குழுக்களை சேர்ந்த 35 கோடி பூர்வக்குடி மக்கள் 20 விழுக்காடு நிலப்பரப்பில் வாழ்கின்றார்கள். பூர்வக்குடி மக்கள் எதிர்க்கொள்ளும் சவால்களிலேயே முதன்மையான சவால் என்பது பூர்வக்குடி மக்களுக்கான வரையறைகளை உருவாக்குவதில் ஒருமித்த கருத்து உருவாகாதது ஆகும். பூர்வக்குடிகள் என்ற சொல்லாக்கத்தைப் புரிந்து கொள்வதிலிருந்து அடிப்படை வேறுபாடுகள் தோன்றுகின்றன. பூர்வக்குடி மக்கள் உரிமைகளுக்காக பணியாற்றும் ஐ.நா பணிக்குழுக்களால் கூட பூர்வக்குடிகளின் உண்மை அடையாளங்களை வரையறை செய்வதில் ஒருமித்த கருத்து எட்ட முடியவில்லை . ஒரு குழுவின் பூர்வக்குடித்தன்மை இவை என்பதை வரையறுப்பதற்கான முழுமையான அளவீடுகளை உருவாக்குவதில் எழும் கருத்து வேறுபாடுகளே முதன்மைக் காரணியாக விளங்குகிறது.
தன் - அடையாளமாக்கல்
பூர்வக்குடி மக்களை வரையறை செய்யும் பன்னாட்டு உடன்படிக்கை எதுவும் இதுவரை எட்டப்படவில்லை . பூர்வக்குடி சமுதாயங்களே தங்கள் பூர்வக்குடித் தன்மையை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதுவே தன் அடையாளமாக்கல் எனப்படும்.
குறைந்த மக்கள் தொகையை பூர்வக்குடிகளுக்கான ஒரு வரையறையாகக் கருத முடியுமா? அல்லது அவர்களது சொந்த வாழ் இடத்திற்கும் அவர்களுக்குமான தொடர்பு அவர்கள், எவ்வளவு காலம் வாழ்கிறார்கள், தொழில் மயமாக்கவாழ்முறை அல்லாத பாரம்பரிய வாழ்க்கை முறை, இவற்றை பூர்வக்குடிகளுக்கான ஒரு வரையறையாக கருத முடியுமா? இதில் வட அமெரிக்க சமுதாயங்கள் மத்தியில் வட அமெரிக்க பூர்வக்குடிகள் / முதல் தேசம், அமேசான் காடுகளில் வாழும் குடிமக்கள், தூர வடக்கு இனியுட் பூர்வக்குடிகள், பப்புவா நியூகினியா பூர்வக்குடிகள் போன்ற சில குழுக்களை வரையறை செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. பூர்வக்குடித்தன்மையை வரையறை செய்வதில் ஒரு உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐக்கிய நாடுகள் அவை உயர் அதிகாரி ஜீலியன் பெர்கர் முன்மொழிந்த வரையறை குறிப்பிடத்தக்கதாகும். அவரின் கூற்றுப்படி, "ஒரு தனித்த பண்பாடு பல்வேறுபட்ட கூறுகளை மொழி, மதம், சமூகம், அரசியல் அமைப்புகள், ஒழுக்க நெறிகள், அறிவியல் மற்றும் தத்துவ அறிவு, நம்பிக்கைகள், வீர கதைகள், சட்டங்கள், பொருளாதார அமைப்புகள், தொழில்நுட்பம், கலை, உடை, இசை, நடனம், கட்டடக்கலை போன்ற எண்ணற்ற வேறுபாடுகள் இருந்தாலும் பூர்வக்குடி மக்களே தமது பூர்வக்குடித் தன்மையை வரையறுக்க இயலும். பூர்வக்குடி மக்கள் வரையறைகளாக அவர்கள் மேலும் கூறுவதாவது:
1. பூர்வக்குடி மக்கள் தங்கள் பூர்வ நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.
2. நாடோடி மற்றும் அரைக்குறை நாடோடி மக்களாக இருக்கலாம். இடம் விட்டு இடம் பெயர்ந்து பயிரிடுபவர்கள், மேய்ச்சல் குடிகள், வேட்டையாடி உணவு சேமிப்பவர்கள் அல்லது உபரி அதிகமில்லாத உடல் உழைப்பு கோரும் வேளாண் குடிகளாக இருக்கலாம்.
3. மையப்படுத்தப்பட்ட அரசியல் நிறுவனங்களாக அல்லாத, சமுதாயமாக அணி திரட்டப்படாதவர்களாக, ஒருமித்த கருத்து அடிப்படையில் இயங்காத குழுக்களாக இருக்கலாம்.
4. தேசிய சிறுபான்மை இனத்திற்குரிய அனைத்து குணங்களையும் உடையவர்களாக இருக்கலாம். பொதுவான மொழி, மதம், பண்பாடு மற்றும் இதர அடையாளங்களைப் பகிர்ந்துக்கொண்ட போதிலும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு ஆதிக்க சமூகம் மற்றும் பண்பாட்டினால் அடக்கி ஆளப்படுகிறது.
ஒரு சமரசம் செய்து கொள்ளலாமா? நிலம், கனிம வள உரிமைகள் இயற்கை மூல வளங்கள் மீன் வளம், மரக்காடுகள், இவற்றை நாங்கள் வைத்துக்கொண்டு உங்களை அவற்றின் பாராம்பரிய உரிமையாளர்கள் என்று அங்கீகாரம் வழங்குவோம்.
5. ஒரு மாறுப்பட்ட உலக கண்ணோட்டம் கொண்டவர்களும் பூர்வக்குடி மக்களாக வரையறுக்கப்படலாம். இவர்கள் நிலம் மற்றும் இயற்கை மூல வளங்கள் மீது பொருளியல் அடிப்படை அல்லாத ஒரு பாரம்பரிய அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். ஆதிக்க சமுதாயத்தின் ஆதாயத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.
6. சில தனிநபர்கள் அகவயக் காரணங்களுக்காக தங்களைத்தாமே பூர்வக்குடி மக்களாக அடையாளம் கண்டுகொண்டு பூர்வக்குடிகளாக அறிவித்துக் கொண்டிருக்கலாம்.
பொதுவாக தற்கால புரிதலில் பூர்வக்குடி மக்கள் என்போர் மிக குறைந்த ஆதிக்க உணர்வு, அரசியல் அதிகாரமின்மை , சமுதாயத்தில் உள்ளிணைக்கப்படாத தன்மை ஆகிய பண்புகளால் வரையறுக்கப்படுகின்றனர். வெளி சமுதாயத்தினரின் ஆதிக்கம் அல்லது இனரீதியான ஆதிக்கத்தின் கீழ் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்வோரும் பூர்வக்குடிகளாக வரையறுக்கப்படலாம். இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் அதிகாரமின்மையால் மட்டும் பூர்வக்குடி மக்கள் அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக, தங்களது பூர்வக்குடித் தன்மையின் காரணமாக அதிகாரம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும். இனக்குழு மதிப்பீடுகள், மரபுகள் காரணமாகத் தமது பாரம்பரிய வாழ்க்கை முறையை விட்டு விலகாமல் வாழும் இத்தகைய குழுக்கள் சமூகம், அரசியல், பொருளாதார நிறுவனங்கள் உதவியால் முன்னேற்றம் அடைந்துள்ள சமுதாயங்களிடமிருந்து விலகி வாழ்கிறார்கள். இந்த "முன்னேற்றத்தினை தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் தமது வாழ்வு முறையை மாற்றிவிடக் கூடியதாகவும் காண்கிறார்கள்". பூர்வக்குடி மக்கள் என்போர் "சமுதாய ரீதியாக நிலைத்த" அல்லது மாறாநிலை கொண்ட குழுக்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை . ஆதிக்க - சமூக அமைப்புகள் அடைந்து வரும் முன்னேற்றத்தை ஏற்பதிலும் தகவமைத்துக் கொள்வதிலும் மிகவும் பின் தங்கியிருப்பதன் காரணமாகவே பூர்வக்குடி மக்களை பழமைவாதிகள் என்று குற்றம் சாட்டுவது உலக வழக்கமாக உள்ளது.
பூர்வக்குடி மக்கள் நாள்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் நாளன்று உலக பூர்வக்குடி மக்கள் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் பூர்விகக் குடித்தன்மையை வரையறைப்படுத்துவதில் கோட்பாடு அடிப்படையிலும் நேரடி அனுபவங்களிலும் பின்னடைவே நிலவுகிறது. இந்தியாவில் இதுவரை எந்த ஒரு பூர்வக்குடி மக்களும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வில்லை . இருந்தபோதும், இந்திய பூர்வக்குடிகள் அடையாளச் சிக்கல்களுக்கு விடைகாண வல்லுநர்கள் மூன்று கணிப்புகளை வகுத்தளித்துள்ளனர்.
அ) ஒரு பகுதி அல்லது நாட்டில் காலனியாக்கம் அல்லது அக்கிரமிப்பு நடைபெறும் முன்பே அங்கு வாழும் மக்கள் குழுக்கள்
ஆ) ஒரு நாடு அல்லது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அல்லது காலனியாக்கம் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள மக்கள் குழுக்கள்.
இ) ஒட்டுமொத்த சமூகம் வகுத்தளித்துள்ள பொது சட்டங்களைப் பின்பற்றாமல் தமக்கான சொந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு நிறுவனங்களைக் கொண்டு அவற்றின்படி வாழும் குழுக்கள் ஆகியோரை பூர்வக்குடிகள் என வரையறுக்கலாம்.
இந்தியாவில் வாழும் பூர்வக்குடி சமுதாயங்கள் எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். ஆதிவாசிகள், அபாரிஜின்கள், ஆதிம் சாதி (பண்டைய தொல்குடிகள்) அல்லது வனவாசி (வனவாசிகள்). அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழிடங்கள் பட்டியலிடப்பட்ட பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு முறையான வரையறை செய்யாவிட்டாலும், புராதன குடிகள், தனித்த பண்பாடு, நிலவியல் தனிமைப்படுத்தல், பெரும் சமுதாயங்களுடன் பழகுவதில் கூச்சம், பின்தங்கிய நிலை' போன்ற கூறுகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் பழங்குடித்தன்மையை ஓரளவுக்குத் தளர்வாக வரையறுப்பதில் சட்டப்பூர்வ ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கோண்டா போன்ற லட்சக்கணக்கில் வாழும் நிலவியல் குழுக்கள் முதல் அந்தமான் தீவில்
வாழும் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் வாழும் பீல் பழங்குடி மக்கள் வரை இந்த வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் "இந்தியா" துணைக்கண்டத்தில் பூர்வக்குடி சமுதாயங்கள்' (1988) எனும் பத்தகத்தில் சரத் குல்கர்னி இவ்வாறு கூறுகிறார்:
"இந்தியாவில் வாழும் பூர்வக்குடி மக்கள் பெரும்பாலும் தமது அமைதித்தன்மையை இழந்துவிட்டனர். அவர்கள் தமது தன்னம்பிக்கை மற்றும் அடையாளங்களிலும் சிறிது இழந்துவிட்டனர். அடக்குமுறைச் சக்திகள் மற்றும் சுரண்டல்காரர்களால், தொல்குடி வாழ்க்கை பெரும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி பூர்வக்குடி மக்களில் பலர் கீழான வாழ்க்கைநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். பூர்வக்குடி மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் செயலற்ற நிலையிலேயே இருக்கின்றன. இருந்தபோதும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் சிறிது பயனளித்துள்ளன. தமது உரிமைகளுக்காகப் போராட அவர்களை அணி திரட்டுவதில் சில செயல்பாட்டாளர்கள் வெற்றிகண்டுள்ளனர். இதன் சித்திரம் தெளிவாக இல்லாவிட்டாலும் நம்பிக்கைக் கீற்றுகள் தென்படத் தொடங்கியுள்ளன."
செயல்பாடு
தமிழ்நாட்டில் வாழும் பூர்வக்குடி மக்களை அடையாளம் காண்க.
பூர்வக்குடித்தன்மை வரையறை குறித்த இந்திய நிலைபாடு பெரும்பாலும் உலக வரையறையை ஒட்டியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்-காலனியாக்கக் கோட்பாடுகளின் அடிப்படையில் உலக விளிம்புநிலை மக்கள் வரையறை செய்யப்படுகிறார்கள். மேலும், இந்தியாவின் பூர்வக்குடி கருத்தாக்கம் 'தொல்குடித் தன்மை' என அழைக்கத்தக்கதையே பெரும்பாலும் ஒத்துள்ளது. உலக அளவில், பூர்வக்குடி குழுக்கள் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகி வருகின்றன. அவர்கள் பூர்வக்குடி மக்களின் 'நீரூற்று' என்று அழைக்கப் படுகிறார்கள். பூர்வக்குடி மக்கள் சந்தித்து வரும் பெரும் சவால்கள் பின்வருமாறு:
பூர்வக்குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சவால்களும்
❖ பாகுபாடாக நடத்தப்படுதல் மற்றும் அமைப்புரீதியான வன்முறை.
❖ தங்கள் பூர்விக நிலப்பகுதியில் இருந்து விரட்டப்படுவதால் நில உரிமை பறிக்கப்படுதல்.
❖ தொழில்நுட்ப அறிவுப் பின்னடைவு காரணமாக மறு குடியமர்த்தப்படுதல்.
❖ பாரம்பரிய கலைகள் மற்றும் புனைவுகள் போன்ற அறிவுச்செல்வங்கள் சுரண்டப்படுதல்.
❖ பூர்விக நிலப்பகுதிகளில் இருந்து பலவந்தமாக அகற்றப்படுதல்.
❖ பாரம்பரிய மூலவளங்களை அணுகும் உரிமை மறுப்பு.
❖ அழிவை நோக்கிய வளர்ச்சியும் கட்டாய இட மாற்றமும்.
❖ சுயாட்சி மற்றும் சுய நிர்ணயம் கேள்விக்குறியாக உள்ளது.
❖ குடிமைச் சமுதாய மக்களின் நிராகரிப்பு
❖ ஒரு சில நாடுகள் மட்டுமே பூர்வ குடிகளைச் சட்டப்பூர்வக் குழுக்களாக அங்கீகரித்துள்ளமை
❖ குறைவான அரசியல் பங்கெடுப்பு
❖ வறுமை * சுகாதாரப் பிரச்சனைகள்
❖ வேலையின்மை
ஐக்கிய நாடுகள் பூர்வக்குடி உரிமைகள் பிரகடனம் (UNDRIP) 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பூர்வக்குடி மக்கள் உரிமைகளுக்கான ஒருங்கிணைந்த பன்னாட்டு அமைப்பு ஆகும். அந்தவகையில் உலகில் வாழும் பழங்குடி சமுதாயங்களின் நல்வாழ்க்கை, சுயமரியாதை, குறைந்தபட்ச வாழ்வாதாரங்களை இப்பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. பூர்வக்குடி மக்களுக்கான பணிக்குழு 1985 முதல் முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றப்பட்ட இப்பிரகடனத்தில் 46 பிரிவுகள் உள்ளன. பழங்குடி சமுதாயங்கள் உரிமைகள் தொடர்பாக உலக நாடுகள் பின்பற்றுவதற்கான வழிகாட்டு ஆவணமாகவும் இது திகழ்கிறது. சிறார் உரிமைகள் பிரகடனம், ஐ.எல்.ஓ சாசனம், பெண்களுக்கு எதிரான அனைத்து இழிவுகளை அகற்றக்கோரும் பிரகடனம் ஆகியனவற்றையும் இது உள்ளடக்கியதாகும்.
மனித உரிமைகள், சுய- நிர்ணயம், தேசிய இனம்
உறுப்புகள் 1-6
• அனைத்து மனித உரிமைகளுக்கான உரிமைகள்
• சுதந்தரம், சமத்துவம் உரிமைகள் மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமைகள்
• சுய - நிர்ணய உரிமைகள்
• சுயாட்சிக்கான உரிமைகள்
• தமக்கேயான தனித்த அரசியல், சட்ட, சமூக, பண்பாட்டு அடையாளங்களைப் பராமரிக்கும் உரிமைகள்
• தேசிய இன உரிமைகள்
வாழ்க்கை , விடுதலை, பண்பாடு, பாதுகாப்பு
உறுப்புகள் 7-10
• வாழ்க்கை , விடுதலை, பண்பாடு, பாதுகாப்பு
• வாழ்வதற்கும் விடுதலைக்கும் பாதுகாப்புக்குமான உரிமைகள்
• கட்டாய அடையாள நீக்கத்துக்கு எதிரான உரிமைகள்
• பூர்வக்குடி சமுதாயம் அல்லது நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதற்கான உரிமைகள்
• விரட்டப்படுவது மற்றும் மறுகுடியேற்றத்துக்கு எதிரான உரிமைகள்
பண்பாடு, மதம், மொழி
உறுப்புகள் 11-13
• பண்பாட்டுக்கான உரிமைகள்
• ஆன்மிக, மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கான உரிமைகள்
• மொழி, வரலாறுகள், வாய்மொழி மரபுகளைப் பயன்படுத்தும் உரிமைகள்
கல்வி, ஊடகம், வேலைவாய்ப்பு
உறுப்புகள் 14-17
கல்வி அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பண்பாட்டு நுண்ணுணர்வுக் கல்வியை அணுகும் உரிமைகள்
• கல்வியில் பூர்வக்குடிப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் உரிமைகள்
• தமது சொந்த மொழியில் ஊடகங்களை உருவாக்கி பூர்வக்குடி மக்கள் அல்லாத மக்களுக்கு பரப்பும் உரிமை
• வேலைவாய்ப்பு உரிமை
உறுப்புகள் 18-24
பங்கேற்பு மற்றும் வளர்ச்சி
• கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கும் உரிமை
• சட்டங்கள் கொள்கைகள் உருவாக்கத்தில் சுதந்திரமான கருத்து அளித்து முன் ஒப்புதல் அளிக்கும் உரிமை
• தமது சொந்த அரசியல், பொருளாதாரம் சமூக அமைப்புகளை அமைத்துக்கொள்ளும் உரிமைகளும் மேம்பாட்டு உரிமைகளும்
• பொருளாதார, சமூக நல் வாழ்வுக்கான உரிமை
• பூர்வக்குடி மூத்தோர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மற்றுத்திறனாளிகள் புறக்கணித்தல் மற்றும் வன்முறைக்கு எதிரான உரிமைகள்
• மேம்பாட்டுக்கான முன் தகுதி மற்றும் செயல்திட்ட ஒதுக்கல் உரிமை
• சுகாதாரத்துக்கான உரிமை
நிலம் மற்றும் மூல வளங்கள்
உறுப்புகள் 25-32
• நிலம் மற்றும் தொன்மையான வளங்கள் மீது ஆன்மீக தொடர்புகொள்ளும் உரிமை
• பாரம்பரிய நிலம் மற்றும் மூல வளங்களை உடமையாக்குதல், பயன்படுத்துதல், மேம்படுத்துதல் உரிமைகள்
• நிலம் மற்றும் மூல வளங்கள் மீது பாரம்பரிய சட்டங்கள் கொண்டிருக்கும் உரிமை
• முன் ஒப்புதல் இல்லாமல் நிலம் அபகரிக்கப்படுவதற்கு எதிரான உரிமை மற்றும் இழப்பீடு அல்லது திரும்பப் பெறும் உரிமை
• முன் அனுமதி இல்லாமல் பாரம்பரிய நிலம் ராணுவமயமாக்கலுக்கு எதிரான உரிமை
• பண்பாட்டு அறிவுசார் சொத்துரிமை உரிமைகள்
• நிலம் மற்றும் மூல வளங்களின் மேம்பாட்டினை முடிவு செய்யும் உரிமை
தன் ஆட்சிமற்றும் பூர்வக்குடி சட்டங்கள்
உறுப்புகள் 33-37
• அடையாளப்படுத்துதல், உறுப்பினராகுதல் மற்றும் குடிமகனாகும் உரிமை
• தனி நிறுவனப்படுத்துதல், பழக்க வழக்கங்கள் உரிமை
• தனிநபர் பொறுப்பளிப்பு உரிமை
• தொடர்புகள், உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு உரிமை
• உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களை அங்கீரித்தல், கண்காணித்தல், அமலாக்கம் செய்தல் உரிமை
அமலாக்கம்
உறுப்புகள் 38-42
• பிரகடனங்களின் இலக்குகளை எட்டுவதற்காக அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முன் கலந்தாலோசிக்கும் உரிமை • பிரகடனங்களில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்க அரசுகளால் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கும் உரிமை
• அரசு மற்றும் இதர தரப்புகளுடன் பிரச்சனைகள் மற்றும் தகராறுகள் ஏற்படும் போது நியாயமான நேர்மையான விசாரணை பெறும் உரிமை
• பிரகடனங்களை செயலாக்க அளிக்க வேண்டிய பங்களிப்புகளுக்கு ஐ.நா அமைப்பு மற்றும் அரசுகளுக்கு இடையிலான அமைப்புகள் பொறுப்பேற்றல்
• பிரகடன விதிகள் அனைத்தையும் செயலாக்கம் செய்ய ஐ.நா மற்றும் பூர்வக்குடி பிரச்சனைகளுக்கான நிரந்தர அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்றல்
உறுதிமொழியின் இயல்பு
உறுப்புகள் 43-44
• உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பூர்வக்குடி மக்கள் சுய மரியாதையுடனும் நலத்துடனும் சக வாழ்வு வாழ்வதற்கான குறைந்தபட்ச தேவைகளாக கருதப்படுகின்றன
• பூர்வக்குடிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலர்களுக்கும் அனைத்து உரிமைகளும் சமமாக உறுதியளிக்கப்படுகின்றன.