அரசியல் அறிவியல் - பன்னோக்கு சுற்றுச்சூழல் மாநாடுகள் | 12th Political Science : Chapter 12 : Environmental Concerns and Globalisation
பன்னோக்கு சுற்றுச்சூழல் மாநாடுகள்
சுற்றுச்சூழல் செயல் தந்திரம் என்ற அம்சம் 1970-களிலிருந்து பன்னாட்டு வாதத்தின் முக்கிய துணை அங்கமாக மாறி வருகிறது. உலக நாடுகள் இடையிலான மட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எண்ணற்ற முயற்சிகள் முறைசார்ந்தும், முறைசாராமலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்திசை வழியில் சுற்றுச்சூழல் அக்கறைகளை முன்னெடுத்துச் சென்று ஒருங்கிணைக்கும் முக்கிய கருவியாக ஐக்கிய நாடுகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியான மாநாடுகள் அவை :
ராம்சர் சிறப்பு மாநாடு என்பது சதுப்பு நிலங்களுக்கான மாநாடு ஆகும். "உள்ளுர் மற்றும் தேசிய செயல்கள் மூலம் அனைத்து சதுப்பு நிலங்களையும் சமயோசிதமாக அறிவுபூர்வமாக பயன்படுத்துதல், மற்றும் பாதுகாத்தல், உலகம் முழுவதும் வளம் குன்றா வளர்ச்சியை எட்டுவதற்காக நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகிய நோக்கங்களை எட்டுவதற்கான ஒரு பன்னாட்டு உடன்படிக்கை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது". 1971ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவு 1975ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சிறப்பு மாநாட்டிற்கான நிதியை யுனஸ்கோ வழங்கியது. சுவிட்சார்லாந்தில் உள்ள கிலாண்ட் நகரில் இயற்கை பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றிய தலைமையக வளாகத்திற்குள் ராம்சர் சிறப்பு மாநாட்டு செயல் அலுவலகம் இயங்குகிறது.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாளன்று நடைபெற்ற ராம்சர் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ராம்சர் செயல் திட்டத்தின் நான்கு அம்சங்களை 20162024 காலகட்டத்திற்குள் செயல்படுத்த ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் நாளன்று உலக சதுப்பு நிலநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மான்டிராக்ஸ் (Montreux) ஆவணம் என்பது "பன்னாட்டு முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள், மாசுபடுதல், இதர மனித தலையீடுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பதிவு செய்யப்படும் பட்டியலின் பதிவேடு ஆகும்". இது ராம்சர் உடன்படிக்கையின் ஒரு அங்கமாகப் பராமரிக்கப்படுகிறது. சிறப்பு மாநாட்டின் மூன்று முக்கிய அம்சங்களின் கீழ் எதிர்நிலை தரப்புகள் கீழ்கண்டவற்றுள் ஒத்துழைப்பு நல்க உறுதி ஏற்றுள்ளன.
1) தமது அனைத்து சதுப்பு நிலங்களையும் அறிவுபூர்வமாக பயன்படுத்துதல்.
2) ராம்சர் பட்டியலின் கீழ் சேர்க்க தகுதி கொண்ட பன்னாட்டு முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பிரகடனப்படுத்தி அவற்றின் திறன் மேலாண்மையை உறுதிப்படுத்துதல்.
3) நாடுகளுக்கு இடையேயான சதுப்பு நிலங்கள், பகிரப்படும் சதுப்பு நில அமைப்புகள் மற்றும் ஜீவராசிகளின் பகிர்தல் ஆகியவற்றில் பன்னாட்டு ஒத்துழைப்பு நல்குதல்.
செயல்பாடு
செயற்கை அறிவுதிறன் பயன்பாடு சுற்றுச்சூழல் பராமரிப்பில் எவ்வாறு உதவி செய்கிறது என்பதை ஆய்வு செய்க.
உலக தொன்மைச் சின்னங்கள் (வேர்ல்டு ஹெரிடேஜ்) சிறப்பு மாநாடு-1972
உலகின் இயற்கையாக அமைந்த தொன்மைச் சின்னங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் நோக்கில் உலக தொன்மைச் சின்னங்கள் மாநாடு 1972இல் நடைபெற்றது. இயற்கை மற்றும் பண்பாட்டுத் தொன்மைச் சின்னங்களை அடையாளம் கண்டு யுனஸ்கோ தொன்மைச் சின்னங்களின் பட்டியலில் இணைப்பதற்கான வரம்புகள் மற்றும் செயல்முறை வழிகாட்டுதல் வரையறைகளை இச்சிறப்பு மாநாடு வரையறுத்தது. உலகத் தொன்மைச் சின்னங்கள் நிதியின் கீழ் பன்னாட்டு உதவி பெறுவதற்கான தொன்மைச் சின்னங்களை வரையறை செய்தல். அழிந்து வரும் தொன்மைச் சின்னங்களின் பட்டியல் தயாரித்தல். தொல்லியல் இடங்களுக்கான பாதுகாப்பு மற்றும் புதிய கல்வெட்டுகளை பராமரித்தல் ஆகிய வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது. யுனஸ்கோ தொன்மைச் சின்ன மையத்தின் ஆதரவின் கீழ் உலக தொன்மைச் சின்னங்கள்
இக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான செயல் அலுவலகம் பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ளது. இக்குழுவிற்கு உதவிட மூன்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்கள் - ஐ.யு.சி.என் (IUCN), ஐ.சி.ஒ.எம்.ஓ. எஸ் (ICOMOS) மற்றும் ஐ.சி.சி. ஆர்.ஒ.எம் (ICCROM) அமைக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு
'நீல பொருளாதாரக் கோட்பாடு' மற்றும் அதன் பொருத்தப்பாடு விவரி.
மானுட சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு
ஸ்டாக்ஹோல்ம் மாநாடு என்று அழைக்கப்படும் மானுட சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக நடைபெற்ற முதல் முக்கிய பல்நோக்கு மாநாடு ஆகும். 1972ஆம் ஆண்டு ஜுன் 5 முதல் 16 வரை ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் நகரில் நடைபெற்றது. 114 அரசுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலக நாடுகளின் ஒத்துழைப்புகளின் அடிப்படையில் ஒரு உலகளாவிய சுற்றுச்சூழல் ஆளுகை மண்டலம் அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கான உரையாடல் இதில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் அரசியலுக்கான ஒரு புதிய தொடக்கம் உருவானது. இவ்வாறாக, இம்மாநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் (UNUP) என்ற செயல்திட்ட முன் முயற்சியும் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கை பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN) 1973 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தின் விளைவாக அழிந்துவரும் அரிய உயிரினங்களான வனங்கள், நீர்வாழ் மற்றும் நில உயிரினங்கள், பன்னாட்டு வர்த்தகம் குறித்த சிறப்பு மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் அழிந்து வரும் அரிய உயிரினங்கள் மற்றும் அவற்றில் இருந்து எடுக்கப்படும் தயாரிப்புகள் ஆகியவற்றின் மீதான பன்னாட்டு வர்த்தகத்தை தடுக்குமாறும் மற்றும் கட்டுபடுத்துமாறும் உலக நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டன. இது அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நேரடியான நடவடிக்கை இல்லை எனினும் வணிக நலன்களுக்கான அழிந்து வரும் அரிய உயிரினங்கள் வேட்டையாடப்படுவது மற்றும் அவைகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுவது ஆகியவனவற்றைக் குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது. பயனர்கள் தேவையைக் குறைப்பதன் மூலம் சட்ட விரோத சந்தைகளை அகற்றும்படி இம்மாநாடு வேண்டுகோள் விடுத்தது. வாஷிங்டன் சிறப்பு மாநாட்டு தீர்மானம் 1975இல் நடைமுறைக்கு வந்தது.
வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு-1979
வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு அல்லது பான் சிறப்பு மாநாடு என்று அழைக்கப்படும் வலசை செல்லும் வனவிலங்குகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு (1979) நிறைவேற்றிய தீர்மானம் 1983 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இடம் விட்டு இடம் செல்லும் நில, நீர், ஆகாய உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தும் இம்மாநாடு வலசை செல்லும் உயிரினங்களை பாதுகாக்க கடுமையான நிபந்தனைகளை முன்மொழிந்தது. வலசை செல்லும் உயிரினங்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டு ஆராய்ச்சிகளுடன் கூடிய பன்நோக்கு உடன்படிக்கைகள் இதன் ஒருங்கிணைந்த சட்டபூர்வ அம்சமாகும். இந்த தீர்மானத்தின் இணைப்பு பட்டியல் 1இல் வலசை செல்லும் பறவைகளில் உடனடியான பன்னாட்டு ஒத்துழைப்பு தேவைப்படும் அழிந்துவரும் அரிய உயிரினங்கள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. இணைப்பு பட்டியல் 2இல் சிறப்பு அக்கறை கோரும் உயிரினங்களின் பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஓசோன் படலம் பாதுகாப்பு வியன்னா சிறப்பு மாநாடு-1985
ஓசோன் படலம் பாதுகாப்பிற்கான வியன்னா சிறப்பு மாநாடு என்பது ஒரு பன்நோக்கு சுற்றுச்சுழல் உடன்படிக்கையாகும். புவியின் ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்த உலகளாவிய ஒத்துழைப்பை இம்மாநாடு தொடங்கி வைத்தது. இத்தீர்மானம் 1985 மார்ச் 22ஆம் நாளன்று ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓசோன் படலத்தை அரிக்கும் பொருட்கள் குறித்த மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987 செப்டம்பர் 16ஆம் நாளன்று நிறைவேற்றப்பட்டு 1989இல் அமுலுக்கு வந்தது. இந்த பன்னாட்டு ஒப்பந்தம் ஓசோன் படலத்தை அரிக்கும் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. கென்யாவில் உள்ள நைரோபியில் அமைந்துள்ள இதன் தலைமைச்செயலகம் வியன்னா சிறப்பு மாநாடு மற்றும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் இவ்விரண்டுக்குமான செயலகமாக இயங்குகிறது.
சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையம்-1987
சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையத்தின் முதல் தலைவராக பணியாற்றிய குரே ஹார்லெம் புருண்டிட் லேண்ட். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளம் குன்றா வளர்ச்சி ஆகியவனவற்றிக்கான செயல் திட்டங்களை வகுத்து தந்தமையால் புருண்டிட் லேண்ட் ஆணையம் என்று அழைக்கப்படுகிறது. "நமது பொதுவான எதிர்காலம்" என்னும் தலைப்பிலான அதன் இறுதி அறிக்கை 1987இல் பதிப்பிக்கப்பட்டது. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற இதர அம்சங்களோடும் பிணைக்கப்பட்டுள்ளதை அழுத்திக் கூறியது. இதன் மூலம் இந்த ஆவணமே பன்னாட்டுச் சுற்றுச்சூழல் சட்டமாக இன்று வரை பின்பற்றப்படுகிறது. இந்த முன்னெடுப்பின் மூலமாகவே வளம் குன்றா வளர்ச்சி எனும் கருத்தியல் முதல் முறையாக அலுவல் பூர்வமாக வரையறை செய்யப்பட்டது.
கேடு விளைவிக்கும் கழிவுகளின் எல்லை கடந்த நடமாட்டம் குறித்த பாஸெல் சிறப்பு மாநாடு-1989
1992இல் அமுலுக்கு வந்த பாஸெல் சிறப்பு மாநாட்டுத் தீர்மானம் வளர்ந்த நாடுகள் கடைபிடித்த எனது கொல்லைபுறத்தில் இல்லை (Not in my backyard - NIMBY) அறிகுறிக்கான எதிர்வினையாகும். 1980-களில் உற்பத்தி பெருக்கத்தின் காரணமாக ஆபத்து விளைவிக்கும் ரசாயனக் கழிவுகளைத் தமது நாடுகளில் சேமிப்பதை கைவிட்டு அதை ஒரு சந்தையாக்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறைந்த ஏழை நாடுகளில் (LDC) கொட்டும் போக்கு அதிகரித்தது. இதனை எதிர்க்கும் மக்களின் போராட்டம் அதிகரித்ததின் காரணமாக இப்பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட்டது. குறிப்பாக இது ஒரு லாபம் தரும் தொழிலாக மாறியதால் வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் கேடு விளைவிக்கும் கழிவுப்பொருட்களைக் கொள்முதல் செய்வதில் ஏழை நாடுகளிடையே போட்டி ஏற்பட்டது. இதனால் வளர்ந்த நாடுகளில் இதற்கான செலவுகள் குறைந்தன. இதுவே 'எனது கொல்லைபுறத்தில் இல்லை' அறிகுறியாகும். இத்தகைய கழிவுகள் உருவாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ந்த நாடுகளில் இருந்து ஏழை நாடுகளுக்கு இத்தகைய கழிவுகளைக் கொண்டு செல்வதைச் சட்ட பூர்வமாகத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளை பாஸெல் சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு-1992
புவி உச்சி மாநாடு என்று சிறப்பாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு ரியோ-டி-ஜெனிரோ நகரில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 3 முதல் 14 வரை நடைபெற்றது. பன்னாட்டு மாநாடுகள் வராலற்றில் இந்த உச்சிமாநாடுதான் மிகப்பெரிய பன்னாட்டு மாநாடு என்று புகழப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்தலுக்கான தேவை, மாற்று ஆற்றல் வளங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் முதல் உற்பத்தி வரையறைகள் வரையிலான பல முக்கிய பிரச்சனைகளில் இம்மாநாடு கவனம் செலுத்தியது. இந்த இரு வார உச்சி மாநாட்டின் விளைவுகளாக நிரல் 21, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ரியோ பிரகடனம், வனக்கொள்கை வழிகாட்டு ஆவணம், காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா வரையறை அமைப்பு சிறப்பு மாநாடு, உயிரியல் பன்மைத்துவத்திற்கான ஐ.நா சிறப்பு மாநாடு ஆகிய முக்கிய மாநாடுகளும் ஆவணங்களும் உருவாக்கப்பட்டன. ரியோ உச்சி மாநாட்டின் விளைவாக வளம் குன்றா வளர்ச்சி ஆணையம், வளம் குன்றா வளர்ச்சிக்கான ஊடாட்ட - முகமை குழு, வளம் குன்றா வளர்ச்சிக்கான உயர்நிலை ஆலோசனை வாரியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மாநாடு 'உலகின் நாடாளுமன்றம்' என்று சிறப்பிக்கப்படுகின்றது.
செயல்பாடு
அவசியம் காண வேண்டிய ஆவணப் படம்
புவி வெப்பமாதல் குறித்து An inconvenient truth என்ற விரிவான ஆவணப் படத்தை இயக்குநர் டேவிஸ் கன்னிங்கம் இயக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் துணை குடியரசுத்தலைவர் அல்கோர் அவர்கள் புவி வெப்பமாதல் தாக்கத்திலிருந்து மீள் உருவாக்கம் செய்வதாற்காக மேற்கொண்ட வாழ்நாள் பணிகளின் வரலாறே இந்த ஆவணப் படம். இந்த ஆவணப்படம் வெளிவந்த ஆண்டே சிறந்த படமாக பாராட்டப்பட்டது. பார்வையாளரும், விமர்சகருமான ஒருவர் கீழ் கண்டவாறு கூறுகிறார்.
'புவி வெப்பமாதல் குறித்த அனைத்து தகவல்களையும் இப்படம் தொகுத்துக் கூறுகிறது. உண்மையில் மனித செயல்பாடுகளால் விளையும் புவி வெப்பமயமாதலால் உருவாக உள்ள விளைவுகளை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது எனும் நெருடலான உண்மையை இப்படம் கூறுகிறது.'.
நகைச்சுவை உணர்வு, உணர்ச்சிப் பெருக்கு கொண்ட குரலில் தனது அனுபவங்களை புவி வெப்பமாதல் குறித்த எண்ணற்ற தகவல்களை தொகுத்து வழங்குவதுடன் அவற்றைதடுப்பதற்கான எண்ணற்ற எண்ணச் சிதறல்களை வெளிப்படுத்துகிறார். அனைத்து சிறந்த படங்களை போன்றே பார்வையார்களை அசைக்கிறது, செல்வாக்கு செலுத்துகிறது, ஈடுபடுத்துகிறது.
பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐ.நா சிறப்பு மாநாடு-1994
நீடித்த நிலவள மேலாண்மையை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வளர்ச்சி ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையிலான ஒரே சட்டப்பூர்வ பன்னாட்டு நடவடிக்கையாக பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா சிறப்பு மாநாடு 1994இல் நடைபெற்றது. இது வறண்ட நிலங்கள் என்று அறியப்படும் நீர் பிடிப்பற்ற உலர் நிலங்கள், சேற்று நிலங்கள், அரைகுறை சேற்று நிலங்கள் போன்ற எளிதில் பாதிப்புக்குள்ளாகும் உயிர் மண்டலங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி இந்த மாநாடு கவனம் செலுத்தியது. இதற்காக 2018-2030 செயல் திட்ட சட்டகம் உருவாக்கப்பட்டு இம்மாநாட்டில் ஏற்கப்பட்டது. இதில் 'நிலம் மாசுபடுதல் சமநிலை' பற்றிய (LDN) வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. மண் வளத்தை மீட்டுருவாக்கம் செய்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளாக இந்த வழிகாட்டுதல்கள் அமைந்துள்ளன. ஜெர்மனி பான் நகரில் 1999இல் இதன் செயலகம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 2001முதல் இந்த அமைப்பின் உச்ச கொள்கை முடிவு எடுப்பாளர்களான தரப்புகளின் மாநாடு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறுகிறது, இதுவரை 13 மாநாடுகள் நடைபெற்றுள்ளது. அங்காரா மற்றும் சாங்வாங் முன்னெடுப்புகள் அண்மைகால நடவடிக்கைகளாகும்.
செயல்பாடு
தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கிய சுற்றுச்சூழல் இயக்கங்கள் குறித்து வாசித்து அறிந்து கொள்ளவும்.
சுற்றுச்சூழலுக்கான ஐ.நா பொது அவை சிறப்பு அமர்வு-1997
புவி உச்ச மாநாடு பிரகடனம் நிரல் 21 செயல் திட்டம் எவ்வாறு அமலாக்கப்படுகிறது என்பதையும் அதன் முன்னேற்றத்தையும் சீராய்வு செய்தவற்கான சிறப்பு அமர்வு ஒன்றினை 1997 ஜூன் 23 - 27 ஆகிய தேதிகளில் ஐ.நா பொது அவை ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பு அமர்வில் நிரல் 21 செயல் திட்டத்ததை உலக நாடுகள் எவ்வாறு பின்பற்றி வந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்ததுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேலும் தீவிரப்படுத்துவற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்துகிறது. இந்த சிறப்பு அமர்வு புவி உச்சி மாநாடு + 5' என்று அழைக்கப்படுகிறது. "நிரல் 21 அமலாக்க முன்னெடுப்புகளுக்கான உறுதிமொழியுடன் கூடிய செயல் திட்டம்" ஒன்றினை இந்த உச்சி மாநாடு நிறைவேற்றியது.
செயல்பாடு
பசுமைக் குடில் வாயுகளை குறைப்பதற்கு பன்னாட்டு உடன்படிக்கைகள் ஏன் தேவை என்று விவாதியுங்கள்.
கியோட்டோ பரஸ்பர ஒப்பந்தம் 1997 டிசம்பர் 11அன்று ஏற்கப்பட்டது இது UNFCCC (1992) வரம்புகளை விரிவுபடுத்தும் பன்னாட்டு சுற்றுச்சூழல் உடன்படிக்கையாகும். இதன் மூலம் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகள் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவிற்கு குறைப்பதாக சட்டப்பூர்வ கடமைப்பாட்டினை உறுப்பு நாடுகள் ஏற்கச் செய்யப்பட்டது. இது 2005 பிப்ரவரி 16 முதல் அமலாக்கப்பட்டது. பசுமைக்குடில் வாயுக்கள் கட்டுப்படுத்துதல் குறித்த வளர்ந்த நாடுகள் பொறுப்புணர்வு குறித்து இந்த உடன்படிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்திக் கூறப்பட்டது. அதிக பசுமைக்குடில் வாயுக்கள் வளர்ந்த நாடுகளே வெளியிடுகின்றன என்ற அடிப்படையில் "பொதுவான ஆனால் வேறுபாட்டுடன் பொறுப்புணர்வுகள்" என்ற கொள்கையின் கீழ் வளர்ந்த நாடுகள் பொறுப்பாளிகளாக்கப்பட்டன. இது முதல் உறுதிமொழி எனப்படுகிறது. 2007இல் மெராக்கோ, மர்ரகேஷ் எனும் நகரில் நடைபெற்ற COP 7 ஒரு விரிவான செயல் திட்டத்தினை உருவாக்கியது. இது மர்ரகேஷ் ஆவணங்கள் என்று அழைக்கப்படுகிறது. 2012இல் கத்தார் தலைநகர் தோகாவில் டிசம்பர் 8இல் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டது.
தோகா திருத்தம் 2ஆம் உறுதிமொழி எனப்படுகிறது. இதன்படி இணைப்பட்டியல் 1இல் இடம்பெற்ற நாடுகள் 2013 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 வரை 2-வது உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் ஒப்பந்தத்தின் பல்வேறு விதிகளிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி, பட்டியல் இடப்பட்ட நாடுகள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் கட்டுபடுத்துதல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். முதல் உறுதிமொழியின்படி பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றம் 1990-களில் இருந்த அளவை விட ஐந்து விழுக்காடு குறைக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டாம் உறுதிமொழி படி குறைக்கப்பட்ட அளவை விட மேலும் எட்டு விழுக்காடு குறைக்கப்பட வேண்டும். இதையெட்டி இந்த இலக்குகளை எட்டும் வகையில் மூன்று சந்தை அடிப்படையிலான செயல் அமைப்புகள் அடையாளம் காணப்பட்டன. அவை பன்னாட்டு மாசு வெளியேறுதல் வணிகம், தூய வளர்ச்சி செயல் அமைப்பு, கூட்டு அமலாக்கம் ஆகிய இம்மூன்று அமைப்புகளும் பசுமை மூதலீட்டிற்கு ஆதரவு வழங்கி மாசு வெளியேறுதல் இலக்குகளை அடைவதற்கான சிக்கனமான வழிவகைகளை வழங்குகின்றன.
வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு-2002
ஐ.நா ஆதரவுடன் நடைபெற்ற வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பெர்க் நகரில் 2002 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற்றது. சுற்றுச்சூழல் மண்டலத்தைப் பாதிக்கும் புதிய சவால்கள் மற்றும் அக்கறைகளை பட்டியலிடுவதில் இம்மாநாடு தொடர் கவனம் செலுத்தியதால் இம்மாநாடு புவி உச்சிமாநாடு என்றழைக்கப்படுகிறது. புதிய வடிவத்தில் புதுபிக்கப்பட்டுள்ள இந்த சுற்றுச்சூழியல் வாரம் புத்தாயிரம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான நீடித்த வளர்ச்சியுடன் கூடிய ஒரு வழித் திட்டத்தை வழங்கியது. இந்த உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஆவணமான வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஜோகன்னஸ்பெர்க் பிரகடனம் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட பன்னோக்கு முன் முயற்சிகளின் அடிப்படைகளுக்கு மறு அழுத்தம் வழங்கியது. நிரல் 21 உள்ளிட்ட ஏராளமான உடன்படிக்கைகளின் மீது உறுப்பு நாடுகள் கால வரையறைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இப்பிரகடனம் சுட்டிக்காட்டியது. இருப்பினும், ஒரு புதிய தன்-ஏற்பாட்டினை உருவாக்குவதில் பல தரப்புகளிலிருந்து எழுந்த கடுமையான கருத்து முரண்பாடுகளின் விளைவாக இம்மாநாடு ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை .
வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாடு2012
ரியோ+20 என்று அழைக்கப்படும் வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாடு பிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரில் 2012 ஜீன் 20-22 தேதிகளில் நடைப்பெற்றது. ஒரு தன்னோக்கம் கொண்ட வளம் குன்றா வளர்ச்சித் திட்டத்தினை உருவாக்குவதில் சமரசமற்ற உறுதியுடன் நின்றதால் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை (SDG) புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகளுடன் (MDG) இணைப்பதற்கான ஒரு செயல்முறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. மேலும் பசுமைப் பொருளாதார கொள்கைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஏற்கப்பட்டது ரியோ+20 மாநாட்டின் திருப்புமுனையாகும். மேலும் ஐ.நா பொது அவையின் கீழ் அரசுகளுக்கிடையேயான செயல்முறை குழு ஒன்றினை உருவாக்கியது இம்மாநாட்டின் வெற்றியாகும். இக்குழு நிதி, வளம் குன்றா வளர்ச்சி ஆகியன குறித்த ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது. வளம் குன்றா வளர்ச்சிக்கான ஒரு உயர்மட்ட அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான உடன்படிக்கையை எட்டியது ஒரு சாதனையாகும். "எதிர்காலம் நம் விருப்பம்" எனும் கருப்பொருளில் மாநாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
ஐ.நா வளம் குன்றா வளர்ச்சி உச்சி மாநாடு 2015
ஐ.நா பொது அவையில் உயர்மட்ட பிளீனக் கூட்டமாக கூட்டப்பட்ட ஐ.நா வளம் குன்றா வளர்ச்சி மாநாடு 2015, செப்டம்பர் 25 - 27 தேதிகளில் ஐ.நா நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலமையகத்தில் நடைப்பெற்றது. இம்மாநாட்டில் 2015-க்கு பிறகான செயல்நிரல் ஏற்கப்பட்டு மாறும் நம் உலகம்: வளம் குன்றா வளர்ச்சிக்கான செயல்நிரல் 2030" எனும் தலைப்பில் பிரகடனமாக வெளியிடப்பட்டது. 17 வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள் (SDG) மற்றும் 169 துணை இலக்குகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக இப்பிரகடனம் அமைந்தது. இந்த இலக்குகள் 2016இல் அமலுக்கு வந்தது. 2030 வரை வளம் குன்றா வளர்ச்சி செயல்பாடுகளை இந்த இலக்குகள் வழி நடத்தும்.
வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள்
இலக்கு 01: அனைத்து இடங்களிலும், அனைத்து வடிவங்களிலும் வறுமையை ஒழிப்பது.
இலக்கு 02:பசிக்கு முடிவு கட்டுதல், உணவு பாதுகாப்பு எட்டுதல், நுண்ணூட்டச்சத்து மற்றும் வளம் குன்றா வேளாண்மையை ஊக்கப்படுத்துதல்.
இலக்கு 03: சுகாதார வாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து வயதைச் சேர்ந்த அனைவருக்கும் நல்வாழ்வை ஊக்கப்படுத்துதல்.
இலக்கு 04: அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான தரமான கல்வியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைவரும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்பினை ஊக்கப்படுத்துதல்.
இலக்கு 05: பாலின சமத்துவத்தை எட்டுதல் மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளை அதிகாரப்படுத்துதல்.
இலக்கு 06: அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை கிடைக்கச் செய்தல்; அனைவருக்குமான வளம் குன்றா நீர் மேலாண்மையை உறுதிப்படுத்துதல்.
இலக்கு 07: எளிதில் பெறதக்க, நம்பகமான, வளம் குன்றா, நவீன ஆற்றல்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
இலக்கு 08: நீடித்த, உள்ளடக்கிய, வளம் குன்றா பொருளாதார வளர்ச்சி, முழுமையான மற்றும் உற்பத்திசார்ந்த வேலைவாய்ப்பு, அனைவருக்குமான நாகரிகமான வேலை ஆகியவனவற்றை முன்நிலைப்படுத்துதல்.
இலக்கு 09: பொருத்தமான உள்கட்டமைப்பை உருவாக்குதல், உள்ளிணைக்கப்பட்ட வளம் குன்றா தொழில் மயமாக்குதலை முன்நிலைப்படுத்துதல், படைப்பூக்கத்தை ஆதரித்தல்.
இலக்கு 10: நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
இலக்கு 11: உள்ளிணைக்கப்பட்ட பாதுகாப்பான உறுதிமிக்க வளம் குன்றா முறையில் நகரங்களையும், மக்கள் குடியிருப்புகளையும் அமைத்தல்.
இலக்கு 12: வளம் குன்றா நுகர்வு முறையையும், உற்பத்தி முறைகளையும் உறுதிப்படுத்துதல்.
இலக்கு 13: காலநிலை மாற்றம் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
இலக்கு 14: வளம் குன்றா வளர்ச்சி உறுதிபடுத்தும் வண்ணம் பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல் நீர் மூலவளங்கள் ஆகியவனவற்றை நீடித்த அளவில் பயன்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
இலக்கு 15: நிலப்பரப்பு சார்ந்த உயிர்மண்டலங்களை பாதுகாத்தல், புத்தாக்கம் செய்தல் மற்றும் நீடித்த பயன்பட்டினை முன்னிலைப்படுத்துதல், வனங்களில் வளம் குன்றா அளவில் பராமரித்தல், வன அழிப்பை தடுத்தல், நில மாசினை தடுத்தல், புத்தாக்கம் செய்தல், பல்லுயிர் பெருக்க இழப்புகளை தடுத்தல்.
இலக்கு 16: வளம் குன்றா வளர்ச்சியினை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைதியான உள்ளிணைக்கப்பட்ட சமுதாயங்களை ஊக்கப்படுத்துதல், அனைவருக்குமான நீதி பரிபாலனம் வழங்குதல், அனைத்து மட்டங்களிலும் பொறுப்புமிக்க உள்ளிணைக்கப்பட்ட நிறுவனங்களை உருவாக்குதல்.
இலக்கு 17: வளம் குன்றா வளர்ச்சி அமலாக்க உறுப்புகளை வலுப்படுத்துதல், வளம் குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய பங்குதாரர் முறையை புத்தாக்கம் செய்தல்.
செயல்பாடு
பாரிஸ் உடன்படிக்கை (பிரென்சு மொழியில் LACCARD) என்பது காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா வடிவமைப்பு (UNFCC) வரம்பிற்குள் உருவாக்கப்பட்ட பன்னோக்கு உடன்படிக்கையாகும். பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்கான விரிவான செயல் திட்டத்தினை அது வழங்குகிறது. 2016, ஏப்ரல் 22ஆம் நாளன்று கையெழுத்தாகி 2016, நவம்பர் 4ஆம் நாளன்று அமலுக்கு வந்தது. இதன்படி, நிதிநல்கை 2020ஆம் ஆண்டு தொடங்குகிறது. தொழில் மயமாதலுக்கு முந்தைய காலகட்டம் உலகளாவிய வெப்பநிலையிலிருந்து 2டிகிரி செல்சியஸ் (3.6 ஃபாரன்ஹீட்) அதிகம் என்ற அளவிற்குள் 2050ஆம் ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டிற்குள் கட்டுப்படுத்த புவி வெப்பத்தை பராமரிப்பதையும் முடிந்தால் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்துவதையும் பாரிஸ் உடன்படிக்கை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் பசுமைக் குடில் வாயுக்கள் அளவை மரங்களும், மண்ணும், கடல்களும் இயற்கையாகத் திரையிட்டுக் கொள்ளும் அளவுக்கு கட்டுப்படுத்துவதிலும் இம்மாநாடு ஒருமித்த கருத்தை எட்டியது. இதனை உறுப்பு நாடுகள் செயல்படுத்துவதின் மீதான சட்டப்பூர்வ சீராய்வுகளுடன் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்வது என்று இந்த மாநாடு உறுதி செய்தது. அத்துடன் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தம்மைத் தகவமைத்து கொள்ளும் வகையில் வளர்ச்சி குறைந்த நாடுகள் புதுபிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு காலம் முழுவதும் வளர்ச்சி அடைந்த நாடுகள் "காலநிலை நிதி" உதவிகளை தொடர்ந்து வழங்குவதையும் இம்மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. 197 உறுப்பு நாடுகளில் இதுவரை 184 உறுப்பு நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
செயல்பாடு
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகிகொள்வதாக அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இக்கூற்றை கருத்தில் கொண்டு புவி வெப்பமாதலைத் தடுப்பது குறித்த கியோட்டோ உடன்படிக்கைக்கு பிந்தைய நிலைமையில் உலகின் பொறுப்புணர்வு குறித்து விவாதிக்கவும்.
• இந்த புதிய உலகளாவிய உடன்படிக்கையை செயல்படுத்தும் வண்ணம் 2020ஆம் ஆண்டிற்கு பின்னர் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள செயல்பாடுகளை ஒவ்வொரு நாடும் தாமாக முன்வந்து உறுதிமொழியாக வழங்கியுள்ளன. இது தேசிய அளவில் வரையறுக்கப்பட்டுள்ள பங்களிப்புகள் திட்டமிடல் (INDC) என்று அறியப்படுகிறது.
• இதன் அடிப்படையில் இந்தியா தாம் மேற்கொள்ளவுள்ள பங்களிப்புகளை உறுதிமொழியாக வழங்கியுள்ளது. அதன்படி, 2030ஆம் ஆண்டிற்குள் ஜி.டி.பி.யில் மாசு அடர்த்தி அளவு 33-35 விழுக்காடுக்குள் அதாவது 2005 அளவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. அதேபோல புதைப்படிவம் சாராத மின் உற்பத்தி அளவு 2030ஆம் ஆண்டிற்குள் 40 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. தனது வனப்பகுதிகளின் அளவு 2.5 முதல் 3.0 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கிரகிக்கும் அளவுக்கு விரிவுப்படுத்தப்படும் (புவி வெப்பமாவதற்கு முக்கிய காரணி கார்பன்டை-ஆக்சைடு ஆகும்).
• அதே நேரத்தில், காலநிலை இலக்குகளை எட்டுவதற்கு பன்னாட்டு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் தேவை என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த வகையில், இப்பொழுதிலிருந்து 2030ஆம் ஆண்டு வரை காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள குறைந்தபட்சம் 2.5 ட்ரில்லியன் டாலர் (2014-15 ஜுலை நிலவரப்படி) நிதி உதவி தேவைப்படுவதாகவும் இந்தியா கூறியுள்ளது.