அறிமுகம் | வேதியியல் - அணைவு வேதியியல் | 12th Chemistry : UNIT 5 : Coordination Chemistry
அலகு 5
அணைவு வேதியியல்
ஆல்ஃப்ரெட் வெர்னர் (1866 -1919)
ஆல்ஃப்ரெட் வெர்னர் சுவீடன் நாட்டைச் சார்ந்த வேதியியல் அறிஞர் ஆவார். அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வேதிப்பிணைப்புகளை விளக்க 1893-ல் அணைவுச் சேர்மங்களுக்கான தனது கொள்கையினை முன்மொழிந்தார். 1896-ல் J.J.தாம்சனால் எலக்ட்ரான்கள் கண்டறியப்படும் முன்னரே இவரது கருத்தியல் கொள்கை முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணைவுச் சேர்மங்களின் வடிவங்கள், பிணைப்புகள் ஆகியன எளிதில் அறிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்த அக்காலத்தில், நவீன உபகரணங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் ஏதுமின்றி எளிமையான வேதி வினைகளின் அடிப்படையில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். 1913 ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் கனிம வேதியியல் அறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கற்றலின் நோக்கங்கள்
இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர்,
* அணைவுச் சேர்ம வேதியியலில் இடம் பெறும் முக்கியமான கலைச் சொற்களை வரையறுத்தல்.
* IUPAC வழிமுறைகளைப் பின்பற்றி அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்.
* அணைவுச் சேர்மங்களில் காணப்படும் பல்வேறு மாற்றியங்களை விவரித்தல்.
* அணைவுச் சேர்மங்கள் பற்றிய வெர்னரின் கொள்கையினை விவாதித்தல்.
* இணைதிற பிணைப்புக் கொள்கையைப் பயன்படுத்தி அணைவுச் சேர்மங்களின் வடிவங்களைத் தீர்மானித்தல்.
* படிகப்புலக் கொள்கையினைப் பயன்படுத்தி, அணைவுச் சேர்மங்களின் நிறம் மற்றும் காந்தப் பண்புகளை விளக்குதல்.
* உயர் சுழற்சி அணைவுகள் மற்றும் தாழ்சுழற்சி அணைவுகளை வேறுபடுத்தி அறிதல்.
* நிலைப்பு மாறிலியின் அடிப்படையில் அணைவுச் சேர்மங்களின் நிலைப்புத் தன்மையினை விளக்குதல்.
* அன்றாட நடைமுறை வாழ்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்பாடுகளை விளக்குதல். ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற இயலும்.
அறிமுகம்
இடைநிலை உலோகங்கள் அணைவுச் சேர்மங்களை (Co-ordination compounds) உருவாக்கும் தன்மையினைப் பெற்றுள்ளன என நாம் முந்தையப் பாடப்பகுதியில் ஏற்கனவே கற்றறிந்தோம். இலத்தீன் மொழியில் Complexus' மற்றும் Co-ordinate' ஆகிய வார்த்தைகளிலிருந்து இப்பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கான பொருள் முறையே 'hold' மற்றும் 'to arrange' என்பனவாகும். இடைநிலை உலோகங்கள் உருவாக்கும் அணைவுச் சேர்மங்களானவை, எளிய அயனி மற்றும் சகப்பிணைப்புச் சேர்மங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, குரோமியம் (III) குளோரைடு ஹெக்ஸா ஹைட்ரேட், CrC13 .6H2O ஆனது இளஞ்சிவப்பு, வெளிரிய பச்சை மற்றும் ஆழ்ந்த பச்சை நிறங்களை பெற்றுள்ள வெவ்வேறு சேர்மங்களாகக் காணப்படுகின்றது. உலோகங்களைத் தவிர, சில அலோகங்களும் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன. ஆனால் d-தொகுதித் தனிமங்களோடு ஒப்பிடும் போது அவைகளின் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் இயல்பு குறைவானதாகும். உயிரியல் செயல்முறைகளிலும் அணைவுச் சேர்மங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் பல்வேறு தொழிற்முக்கியத்துவம் வாய்ந்த வினைகளில் வினைவேக மாற்றிகளாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மனிதர்களில் ஆக்சிஜன் பரிமாற்றத்திற்கு காரணமான ஹீமோகுளோபின் ஒரு இரும்பு அணைவுச் சேர்மமாகும். உயிர்ச் செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வைட்டமினான கோபாலமீன் ஆனது கோபால்டின் ஒரு அணைவுச் சேர்மமாகும்.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில், ஒளித்தன்மைப்படுத்தும் பொருளாக செயல்படும் நிறமியான குளோரோபிலும் ஒரு அணைவுச் சேர்மமாகும். வில்கின்சன் வினைவேகமாற்றி, சீக்லர்-நட்டா வினைவேகமாற்றி போன்ற பல்வேறு அணைவுச் சேர்மங்கள் தொழிற்செயல்முறைகளால் முக்கியமான வினைவேக மாற்றிகளாகச் செயல்படுகின்றன. எனவே அணைவுச் சேர்மங்களின் வேதியியலைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இப்பாடப்பகுதியில் அணைவுச் சேர்மங்களின் தன்மை, பிணைப்பு, பெயரிடுதல், மாற்றியம் மற்றும் அவைகளின் பயன்களை நாம் கற்றறிவோம்.