அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய சில முக்கியமான கலைச்சொற்களின் வரையறைகள்
அணைவு உட்பொருளானது ஒரு அயனி அல்லது நடுநிலைப் பொருளாகும். இது வழக்கமாக ஒரு உலோகத்தினை மைய அணுவாகவும், அதனுடன் இணைக்கப்பட்ட பிற அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகளையும் (ஈனிகள்) உள்ளடக்கியது. வாய்பாட்டில், குறிப்பிடப்படும் போது அணைவு உட்பொருளானது ஒரு சதுர அடைப்பிற்குள் குறிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, பொட்டாசியம் பெர்ரோ சயனைடு, K4[Fe(CN)6] ல் , அணைவு உட்பொருளானது [Fe(CN)6]4- ஆகும். நிக்கல் டெட்ரா கார்பனைலில், அணைவு உட்பொருள் [Ni(CO)4) ஆகும்.
அணைவு உட்பொருளின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் அணு அல்லது அயனியானது மைய அணு/அயனி எனப்படும். மேலும் இதனுடன் அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகள் (ஈனிகள்) ஈதல் சகப்பிணைப்பு மூலம் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, K4[Fe(CN)6] -ல் மைய உலோக அயனி Fe2+ ஆகும். அணைவு உட்பொருள் [Fe(CN)6]4- -ல் Fe2+ ஆனது ஒவ்வொரு CN அயனியிடமிருந்தும் ஓர் இணை எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொண்டு அவைகளுடன் ஆறு ஈதல் சகப்பிணைப்புகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறாக மைய உலோக அயனியானது எலக்ட்ரான் இரட்டைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பினைப் பெற்றிருப்பதால் அது லூயி அமிலம் எனவும் அழைக்கப்படுகிறது.
மைய உலோக அணு/அயனியுடன் பிணைந்திருக்கும் அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகள் ஈனிகள் எனப்படுகின்றன. மைய உலோக அணுவுடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள ஈனியின் அணுவானது, வழங்கி அணு(donar atom) எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, K4[Fe(CN)6] ல் ஈனி CN ஆனால் வழங்கி அணு கார்பன் [Co(NH3)6]C13 ல் ஈனி NH3 மேலும் வழங்கி அணு நைட்ரஜன் (N) ஆகும்.
அணைவுக் கோளம்
ஒரு அணைவுச் சேர்மத்தின், அணைவு அயனியில் உள்ள மைய உலோக அணு/அயனி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் ஆகியனவற்றை ஒருங்கிணைத்து அணைவுக் கோளம் என அழைக்கின்றோம். மேலும் இவை வழக்கமாக சதுர அடைப்பிற்குள் அணைவின் நிகர மின்சுமையோடு சேர்த்து குறிப்பிடப்படும். அயனியுறும் தன்மையுடைய பிற அயனிகள் சதுர அடைப்பிற்கு வெளியே குறிப்பிடப்படுகின்றன. இவைகள் எதிர் மாறு அயனிகள் (Counter ions) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, K4[Fe(CN)6] ஆனது, [Fe(CN)6]4- அணைவு அயனியைக் கொண்டுள்ளது. இது அணைவுக் கோளம் எனப்படுகின்றது. இதனோடு தொடர்புடைய K+ அயனியானது எதிர்மாறு அயனி (Counter ion) என அழைக்கப்படுகிறது.
அணைவுப் பன்முகி
மைய உலோக அயனியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் முப்பரிமாண வெளியில் குறித்த திசைகளில் அமைவதால் ஏற்படுவது அணைவுப் பன்முகி (Coordination polyhedran) எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, K4[Fe(CN)6] ல் அணைவுப் பன்முகியானது ஒரு எண்முகி ஆகும். [Ni(CO)4] ன் அணைவுப் பன்முகி ஒரு நான்முகி ஆகும்.
அணைவு எண்
ஒரு அணைவில், மைய உலோக அணு/ அயனியுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகளுடைய வழங்கி அணுக்களின் எண்ணிக்கை அந்த உலோக அணுவின் அணைவு எண் எனப்படும். இதனை, மைய உலோக அணு மற்றும் ஈனிகளுக்கு இடையே காணப்படும் - பிணைப்புகளின் எண்ணிக்கை என்றும் கூறலாம்.
எடுத்துக்காட்டு
(i) K4[Fe(CN)6] Fe2+ ன் அணைவு எண் 6.
(ii) [Ni(en)3]C12 ல் Ni2+ ன் அணைவு எண்ணும் 6. இங்கு ஈனி 'en' என்பது ஈத்தேன் -1,2 டை அமீனைக் குறிப்பிடுகின்றது (NH2-CH2-CH2-NH2) மேலும் இது இரண்டு வழங்கி அணுக்களைக் (நைட்ரஜன்) கொண்டுள்ளதால் ஒவ்வொரு ஈனியும் மைய உலோக அயனியாக நிக்கலுடன் இரண்டு ஈதல் சகப்பிணைப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவேmஅவைகளுக்கிடையே மொத்தமாக ஆறு ஈதல் சகப்பிணைப்புகள் காணப்படுகின்றன.
ஆக்சிஜனேற்ற நிலை(எண்)
ஓர் அணைவு உட்பொருளின் உள்ள மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் என்பது, அந்த உலோக அயனியுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகளை அவைகளால் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இரட்டைகளுடன் நீக்கிய பிறகு அம்மைய உலோக அணுவின் மீது எஞ்சியிருப்பதாகக் கருதப்படும் மின்சுமை அதன் ஆக்சிஜனேற்ற எண் எனப்படும்.
அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடும் போது ஆக்சிஜனேற்ற எண் ரோம எண்ணுருவால் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, [Fe(CN)6]4- என்ற அணைவு உட்பொருளில், இரும்பின் ஆக்சிஜனேற்ற எண் (II) என குறிப்பிடப்படுகிறது. அணைவு அயனியின் மீதுள்ள மின்சுமை என்பது மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஈனிகளின் மின்சுமை ஆகியனவற்றின் கூடுதலாகும். இத்தொடர்பினைப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்ற எண்ணை பின்வருமாறு கண்டறியலாம்.
நிகர மின்சுமை = (மைய உலோகத்தின் ஆக்சிஜனேற்ற எண் +[ (ஈனிகளின் எண்ணிக்கை X ஈனியின் மீதான மின்சுமை)]
எடுத்துக்காட்டு 1
[Fe(CN)6]4- ல் இரும்பின் ஆக்சிஜனேற்ற எண்ணை X' என்க
நிகர மின்சுமை, -4 = x + 6 (-1) => x = +2
எடுத்துக்காட்டு 2
[Co(NH3)5Cl]2+ ல் கோபால்டின் ஆக்சிஜனேற்ற எண் X என்க.
நிகர மின்சுமை +2 = x + 5 (0) + 1 (-1) => x = +3
தன்மதிப்பீடு 2
2. [Pt(NO2)(H2O)(NH3)2]Br என்ற அணைவில் பின்வருவனவற்றைக் கண்டறிக.
i. மைய உலோக அணு/அயனி
ii. ஈனிகள் மற்றும் அவற்றின் வகைகள்
iii. அணைவு உட்பொருள்
iv. மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண்
V. அணைவு எண்
அணைவுச் சேர்மங்களை பின்வருமாறு கீழ்க்கண்டுள்ளனவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். (i) அணைவின் மீதுள்ள மின்சுமை. (ii) அணைவு உட்பொருளில் காணப்படும் ஈனிகளின் வகைகள்
அணைவின் மீதான நிகர மின்சுமையின் அடிப்படையிலான வகைப்பாடு: ஒரு அணைவுச் சேர்மத்தில் உள்ள அணைவு அயனியானது,
i. நிகர நேர்மின்சுமையினைப் பெற்றிருந்தால், அந்த அணைவுச் சேர்மம் நேரயனி அணைவு என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுகள் (Ag(NH3)2]+, [Co(NH3)6]3+, [Fe(H2O)6]2+ etc
ii. நிகர எதிர்மின்சுமையினைப் பெற்றிருந்தால், எதிரயனி அணைவு எனப்படும்.
எடுத்துக்காட்டுகள் (Ag(CN)2]- , [Co(CN)6]3- , [Fe(CN)6]4- , etc
iii. எவ்வித நிகர மின்சுமையினையும் பெற்றிருக்க வில்லையெனில், நடுநிலை அணைவு எனப்படும்.
எடுத்துக்காட்டுகள் (Ni(CO)4], [Fe(CO)5] , [Co(NH3)3 (C1)3]
ஒரு அணைவுச் சேர்மத்தில் உள்ள,
i. மைய உலோக அணு/அயனியோடு ஒரே ஒரு வகை ஈனிகள் மட்டுமே ஈதல் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருந்தால் அச்சேர்மமானது ஓரின ஈனி அணைவு (Homoleptic) என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகள் [Co(NH3)6]3+ , [Fe(H2O)6]2+
ii. மைய உலோக அணு/அயனியோடு ஒன்றிற்கும் மேற்பட்ட வகை ஈனிகள் பிணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்மம் பல் இன ஈனி அணைவு (heteroleptic) என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகள் [Co(NH3)5C1]2+ [Pt(NH3)2C12)