சமத்துவத்தின் பரிமாணங்கள்
சமத்துவம் என்றால் என்ன?
மனித வாழ்க்கையானது பல்வேறு வேற்றுமைகளுக்கிடையில் அமைந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நிறம், இனம் போன்ற வேற்றுமைகள் இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனசாட்சியின் அடிப்படையில் தவறானது என தெரிந்தபோதிலும், சக மனிதர்களிடையே மரியாதையும், அங்கீகாரமும் மறுக்கப்படுவது வேதனைக்குரிய நிகழ்வு ஆகும். எந்த ஒரு சமுதாயமும் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்துவது இல்லை. மனிதர்களுக்கிடையேயான தேவைகள், திறமைகள் மாறுபடுகின்ற பொழுது அனைத்து மக்களையும் சரிசமமாக பார்ப்பதும், பாவிப்பதும் இயலாததாகக் கருதப்படுகிறது. சமமாக உள்ளவர்கள் சமமில்லாமல் நடத்தப்படுவதும், சமமில்லாதவர்களை சமமாக நடத்துவதும், அநீதிக்கு வழி வகுக்கின்றன. இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வவளம், அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை காணப்படுகிறது.
எவ்வித வரலாற்றின் இயக்கமும், சமத்துவத்தை நோக்கி செல்வது இல்லை. ஏனெனில் ஓர் ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்கின்றபோது மற்றொரு ஏற்றத்தாழ்வு நிலை உருவாகுகிற சூழ்நிலை நிலவுகிறது. இதன் விளைவாக அறியப்படுவது என்னவென்றால், அழிக்கப்படுகின்ற ஏற்றத்தாழ்வுநிலை நியாயமற்றதாகவும், புதியதாக உருவாக்கப்படுகின்ற நிலை நியாயமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் அரசியல், சமூக மற்றும் கல்வி சமத்துவத்தை வலுப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும், புதிய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது. சுதந்திரத்தை போன்று, சமத்துவ கொள்கையும் நேர்மறை மற்றும் எதிர்மறை கோணங்களையும் பெற்று விளங்குகிறது. எதிர்மறை சமத்துவம் என்பது யாருக்கும் எந்தவித சலுகைகளும் காட்டாத சமூக நிலையையும், நேர்மறை சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள சமூக நிலையையும் பற்றியதாகும்.
லாஸ்கியின் (Laski) கூற்றுப்படி சமத்துவத்தின் விளக்கம்
• இது சலுகைகள் இல்லாத நிலையாகும். இது சமுதாயத்தில் வாழும் ஒருவருடைய விருப்பமானது வேறொருவருடைய விருப்பத்திற்கு சமமாக கருதப்படுகின்ற சூழ்நிலை ஆகும். சமுதாயத்தில் வாழும் அனைவருக்கும் உரிமைகள் சமமானதாக வழங்கப்படும். இதுவே சமத்துவ உரிமை ஆகும்.
• போதுமான வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுதல். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆளுமைத்தன்மையை உணருவதற்கு வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கித்தருதல்.
• சமூகத்தின் பலன்கள் அனைவருக்கும் சமமான அளவில் கிடைக்கும்படியாகவும், எந்தவொரு அடிப்படையிலும் யாரையும் இதனை அடையவிடாமல் தடுக்கக்கூடாது. ஒரு மனிதனின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத்தாழ்வுகள், ஆகியவை பாரம்பரியம் மற்றும் மரபுவழி காரணங்களின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமற்றவையாகும்.
• பொருளாதார மற்றும் சமூக சுரண்டல் இல்லாத சமுதாயமாக விளங்குதல்.
பெருமளவில் இருக்கக்கூடிய ஏழை வர்க்கமும், சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில்,அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும்.
- ஹெரால்ட் லாஸ்கி (Herold Laski)
பார்க்கரின் கூற்றுப்படி சமத்துவம்:
• அனைவருக்கும் அடிப்படை சமத்துவம்
• சமமான வாய்ப்புகள்
• வாழ்வுக்கான சமதளத்தை உருவாக்கும் சமத்துவ நிலைகள்
• விளைவுகளின் அடிப்படையில் சமத்துவத்தினை ஏற்படுத்துதல்
வாய்ப்புகளில் சமத்துவம்
சமத்துவம் என்பது அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் அளித்து அவர்களின் இலக்குகள் மற்றும் இலட்சியங்களை அடைவதற்குண்டான திறமைகளையும், திறன்களையும் வளர்ப்பது ஆகும்.
இயற்கை சமத்துவமின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை
இயற்கை சமத்துவமின்மை என்பது மக்களுக்கு இடையேயான திறன் மற்றும் திறமைகளுக்கு இடையேயான வேறுபாட்டினால் உருவாகிறது. இது போன்ற சமூக சமத்துவமின்மையானது, மக்களுக்கு வழங்கப்படும் சமமில்லாத வாய்ப்புகள் மற்றும் சில சமுதாயக் குழுக்களினுடைய சுரண்டலின் மூலமாக உண்டாக்கப்படுகிறது. இயற்கை சமத்துவமின்மை என்பது பிறப்பிலிருந்து உருவாகின்ற பல இயல்புகள் மற்றும் திறமைகளின் வெளிப்பாடாகும்.
ஆனால் சமூக சமத்துவமின்மை என்பது சமுதாயத்தினால் சமமற்ற முறையில் நடத்தப்படுவதால் உண்டாக்கப்படுகின்ற நிலையைக் குறிக்கின்றது. மேலும் இவ்வகை சமத்துவமின்மை என்பது இனம், ஜாதி, மதம், பாலினம், நிறம் போன்றவற்றின் அடிப்படையில் சமுதாயத்தில் மக்களை வேற்றுமைப்படுத்தி நடத்துவதால் உருவாகிறது.பலநூற்றாண்டுகளாக பெண்களுக்கான சம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதேபோல, அடிமைத்தனம் பற்றிய எதிர்க்கேள்வி கேட்கப்படும்வரை, கறுப்பின மக்கள், அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். மேலும் பிறப்பிலேயே உடல் ஊனமுற்றோராக பிறந்த சிலர் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவி கொண்டு இயல்பான மக்களுக்கு சமமாக சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பினைச் செய்கின்றனர். சமீபத்தில் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் இயற்பியல் கல்விக்கான பங்களிப்பு, அவருடைய உடல் ஊனத்தையும் தாண்டிய குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். அரசியல் தத்துவஞானிகள் பலர் தங்களின் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் சித்தாந்தங்கள் மூலமாக சமமான மற்றும் நியாயமான சமூகத்தினை உருவாக்கும் வழிமுறைகள் பற்றி எழுதியுள்ளனர்.