அலகு 3
அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி - I
கற்றலின் நோக்கங்கள்
❖ இறையாண்மை என்பதன் பொருள் மற்றும் பண்புகள்
❖ இறையாண்மையின் வகைகள் மற்றும் அம்சங்கள்
❖ பன்மைவாதத்தின் பொருள், மற்றும் தோற்றம்
இறையாண்மை
அறிமுகம்
1. இறையாண்மையை பற்றி நாம் விவாதிப்போம்
ஒரு நாடு தன்னிச்சையாக, தன் மக்களைக் கட்டுப்படுத்திப் பாதுகாக்கும்போது இறையாண்மையைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு செயல்படும்போது, அந்நாட்டினை அதிகாரம் வாய்ந்ததாகவும், சுயசார்புள்ளதாகவும் ஏனைய நாடுகள் அங்கீகரிக்கின்றன. இறையாண்மை என்பது "சூப்பரானஸ்"(superanus) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியதாகும். இது ஆங்கிலத்தில் 'மிக உயர்ந்த' அல்லது 'மேலான' என்றும் பொருள்படுகிறது.
ரோமானிய நீதிபதிகளும், மக்களும் இடைக்காலத்தில் இறையாண்மையை "சம்மா பொடெஸ்டாஸ்"(Summa Potestas): என்றும் "ப்ளெனிடீயூட்பொடெஸ்டாஸ்" (Plenitude Potestas) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அரசின் மேலான தன்மையை பெயரிட்டு அழைத்தனர். அரசியல் அறிவியலில் "இறையாண்மை" என்ற சொல் போடின் என்ற அறிஞர் எழுதி 1576-ல் வெளியான குடியரசு என்ற நூலில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் உறுதித்தன்மை , அந்நாட்டின் இறையாண்மையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
அரசமைப்பு என்பது அரசு தொடர்பான சட்டங்களையும், விதிகளையும் எடுத்துரைக்கிறது. மேலும் அரசமைப்பு என்பது அரசின் இறையாண்மையை ப்பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இந்திய அரசமைப்பின் முகவுரையில் கூறப்பட்டதுபோல, இறையாண்மை என்றால், அரசு எந்த துறை சார்ந்த சட்டத்தினை உருவாக்கினாலும் அது அரசமைப்பின் வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
இறையாண்மை என்றால் என்ன?
"இறையாண்மை என்பது ஒட்டுமொத்த, மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதீத கட்டளைத்தன்மை உடையதாகவும் காணப்படுகிறது".- ஜீன் போடின் (Jean Bodin)
(அ) நிரந்தரமானது (Permanence)
இறையாண்மையின் முக்கிய பண்பாக அதன் நிரந்தரத்தன்மை திகழ்கிறது. அரசு இயங்கும் வரை இறையாண்மை நீடிக்கிறது. மன்னர் இறப்பதாலும், அரசாங்கம் செயல் இழந்து போவதாலும் இறையாண்மை பாதிக்கப்படுவதில்லை . இதன் எதிரொலியாகவே, "மன்னர் இறந்துவிட்டார், ஆனாலும் அரசபீடம் நீண்டு வாழ்க" என்று இங்கிலாந்து குடிமக்கள் கூறுகின்றார்கள்.
(ஆ) பிரத்தியோகமானது (Exclusiveness)
ஒர் சுதந்திர அரசில், இரண்டு இறையாண்மைகள் இயங்காது, அப்படி இருக்குமேயானால் அரசின் ஒற்றுமையானது சீர்குலைந்துவிடும்.
(இ) அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியது (All comprehensiveness)
ஒவ்வொரு தனிமனிதனும் மற்றும் தனிமனிதர்கள் அங்கம் வகிக்கக்கூடிய குழுமமும் அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும். குழுமங்கள் அல்லது சங்கங்கள் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், பணம் படைத்ததாக இயங்கினாலும் இறையாண்மையின் அதிகாரத்தைத் தடுக்கவோ அல்லது அதற்குக் கீழ்படியாமலோ இருக்க முடியாது.
(ஈ) மாற்றித்தர இயலாதது (Inalienability)
இறையாண்மை என்பது அரசின் உயிர் மற்றும் ஆன்மாவாக விளங்குகிறது. இது அரசை அழிக்காமல் இறையாண்மையை மாற்றித்தர முடியாததாக விளங்குகிறது.
(உ) ஒற்றுமை மற்றும் எக்காலத்திலும் நீடித்திருக்கும் தன்மை (Unity and Everlasting)
இறையாண்மையின் தனித்தன்மை அதன் ஒற்றுமையில் உள்ளது. இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படுவதில்லை . மாறாக அது அரசு இயங்கும் வரை நீடித்திருக்கும் அழியாததன்மை கொண்டதாகும்.
(ஊ) பிரிக்கமுடியாதது (Indivisibility)
இறையாண்மை என்பது பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டதாகும். இத்தன்மையே இறையாண்மையின் உயிரோட்டமாக விளங்குகிறது.
(எ) முழுமைத்தன்மை (Absoluteness)
இறையாண்மை என்பது நிபந்தனையற்றதாகவும், அளவிட முடியாததுமாக விளங்குகிறது. மேலும் இது கீழ்பணிதலுக்கு அப்பாற்பட்டது. தான் விரும்பிய எதையும் சாதிக்கக் கூடியதாக விளங்குகிறது.
(ஏ) சுயமானத்தன்மை (Originality)
இறையாண்மை தனது அதிகாரத்தினை சுய உரிமையினை மையமாகக் கொண்டு பெற்றிருக்கிறதே தவிர, யாருடைய தயவிலும் அல்ல.
உங்களுக்குத் தெரியுமா
ஓர் மரமானது தான் முளை விடுவதை மாற்றித்தர முடியாததைப் போன்று இறையாண்மையையும் மாற்றித்தர இயலாது. இது ஓர் மனிதன் தன்னை அழித்துக் கொள்ளாமல் தனது உயிர் அல்லது ஆளுமையை மாற்றித் தர இயலாததைப் போன்றதாகும். - லைபர்
(அ) உட்புற இறையாண்மை (Internal Sovereignty)
இவ்வகையான இறையாண்மை, ஓர் அரசுக்கு உட்பட்டு வாழும் அனைத்து தனிமனிதர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்துவதற்குரிய முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளது.
(ஆ) வெளிப்புற இறையாண்மை (External Sovereignty)
எளிமையாகக் கூறவேண்டுமெனில் வெளிப்புற இறையாண்மை என்பது தேசிய விடுதலையாகும். அனைத்து நாடுகளும் தங்கள் வெளியுறவு கொள்கையை நிர்ணயிப்பதற்கும், அதிகாரம் படைத்த கூட்டணியோடு இணைவதற்கும் முழு அதிகாரம் பெற்று செயல்படுகின்றன. ஒவ்வொரு அரசும் ஏனைய அரசுகளை சாராமல் சுதந்திரமாக இயங்குவது வெளிப்புற இறையாண்மை எனப்படும்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
மக்கள் இறையாண்மை எனப்படுவது பெரும்பான்மை வாக்காளர்களின் அதிகாரமாகும். மேலும் இவ்வகை அதிகாரமானது,வாக்குரிமை செயல்படக்கூடிய நாட்டில் வாக்காளர்கள் பல்வேறு வழிமுறைகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விருப்பமாகும்.- கார்னர் (Dr. Garner)
நடைமுறை இறையாண்மை (De-facto sovereignty)
இவ்வகை இறையாண்மை சட்ட பூர்வமாக இல்லாது, உண்மையான அதிகாரத்தைப் பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மையாகும்.
சட்டப்படியான இறையாண்மை (De-jure sovereignty)
இவ்வகை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது, சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்.
இங்கே ஒரு சுவாரசியமான தகவல்!
இயக்குனரகமுறை ஆட்சியமைப்பினை தூக்கி எறிந்த பின்னர், நெப்போலியன் உண்மையான நடைமுறை இறையாண்மையை (De-facto) பெற்று விளங்கினார். ஸ்பெயினில், சட்ட இறையாண்மையை வேரோடு கலைத்து, ப்ராங்கோ நடைமுறை இறையாண்மையை (De-facto) கையகப்படுத்தினார். அப்டோபர் 28,1922-இல் நடந்த கறுப்புச்சட்டை புரட்சிக்கு பின்னர், முசோலினி சட்டப்பூர்வமான பிரதம அமைச்சராக அதிகாரம் பெற்றார். இவர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி அதன் மூலம் இத்தாலியை ஆட்சி செய்தார். நாடாளுமன்றம் சட்ட இறையாண்மையையும், முசோலினி நடைமுறை இறையாண்மையையும் (De-facto) பெற்று ஆட்சி அரங்கேறியது. மேலும் ஹிட்லரும், ஜெர்மனியில் இச்செயல்பாட்டையே பின்பற்றினார். இவர் சட்ட இறையாண்மையை கையகப்படுத்தியதுடன் மட்டுமல்லாது, நடைமுறை இறையாண்மையைப் (De-facto) பெற்று ஆட்சி செய்தார்.
ஜான்ஆஸ்டின் (1780-1859) இங்கிலாந்து நாட்டை சார்ந்த சட்ட வல்லுனரான இவர் சட்ட இறைமைக்கு தன்னுடைய நீதிபரிபாலனமும் விரிவுரைகள் (1832) என்ற நூலில் விளக்கம் அளித்துள்ளார் இவர் ஒருமைவாத இறையாண்மை கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
பன்மைவாதம் என்பது ஒருமைவாத இறையாண்மைக் கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கமாகும். இவ்வகை இறையாண்மை அரசினுடைய மேலான மற்றும் அளவில்லாத அதிகாரத்திற்கு வகை செய்கின்றது.
அரசிற்கு முன்னரே, பல சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள், சமுதாயத்தில் அங்கம் வகித்து இருக்கின்றன. உதாரணத்திற்கு குடும்பம் மற்றும் தேவாலயங்கள் அரசு தோன்றுவதற்கு முன்பே செயல்பட்டு வந்தன.
பன்மைவாதக் கோட்பாட்டின் சிந்தனையாளர்கள்
• ஹெரால்ட் ஜெ. லாஸ்கி (Herold J. Laski)
• ஜெ.என்.பிக்கீஸ் (J.N. Figgis)
• எர்னஸ்ட் பார்க்கர் (Ernest Barker)
• ஜி.டி.ஹெச்.கோல் (G.D.H.Cole)
• மேக் ஐவர் (Mac Iver)
பன்மைவாதக் கோட்பாட்டின் தோற்றம்
மக்கள் நல அரசானது, மக்களின் தேவைகளை நிறைவேற்றாத போது, புரட்சிகளையும், எதிர்நடவடிக்கைகளையும் சந்தித்து இருக்கிறது. இப்படிப்பட்ட எதிர்வினை என்பது மேலான மற்றும் இறையாண்மை மிக்க அரசுக்கு எதிராகத் தோன்றியதால் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பன்மைவாதம் மலர்ந்தது.
பன்மைவாதம் முக்கியமானதா?
• பன்மைவாதம் என்பது, கூட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அதன் சுயாட்சி கோரிக்கையையும் தாங்கி நிற்கிறது.
• மக்களாட்சி மலர வேண்டுமெனில், இறையாண்மை மிக்க அரசானது சட்ட அதிகாரத்துவத்திற்கு கட்டுப்படாததாக இருத்தல் அவசியமாகும்.
• இறையாண்மையில் ஏற்படும் பிரிவினைகள் என்பது அதன் அழிவுக்கு வழிவகுப்பது உறுதியாகிறது. இறையாண்மை இல்லாத தருணத்தில் சமுதாயத்தில் அமைப்பெதிர்வாத சூழலே இருக்கும்.
பன்மைவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகள் யாவை?
• இறையாண்மை மிக்க அரசு ஒற்றுமையை ஏற்படுத்தி, சமுதாயத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்துக் கூட்டமைப்புகளையும் ஒன்றுபடுத்தி ஒழுங்குமுறைப்படுத்துகிறது.
• பன்மைவாத நம்பிக்கைக்கு ஒவ்வாததாக அரசே சட்டங்களை இயற்றுகிறது.
• கூட்டமைப்புகளின் எண்ணிக்கை மிகுதியாக அதிகரிக்கும் பட்சத்தில், மக்களை பாதுகாப்பதற்கு அரசின் தேவை இன்றியமையாததாகிறது.
இந்திய அரசமைப்பு மற்றும் இறையாண்மை
இந்திராகாந்தி Vs ராஜ்நாராயணன்(1975) வழக்கில், "இந்தியா என்பது, இறையாண்மை பொருந்திய, மக்களாட்சிக் குடியரசு என்றும், இதுவே அடிப்படைப் கூறாக அரசமைப்பின்படி காணப்படுகிறது" என்றும் கூறியுள்ளது. மேற்கூறியவற்றின் மூலம், இந்திய அரசமைப்பின்படி இறையாண்மை என்பது அரசமைப்பின் முக்கிய அம்சமாக விளங்குவதுடன் முகப்புரையின் மூலமாக மக்களே இறையாண்மை மிக்கவர்கள் என்பது தெரியவருகிறது. சுருங்கக்கூறின், இறையாண்மை என்பது அரசமைப்பைச் சார்ந்துள்ளது. மக்களே அத்தகைய அரசமைப்பின் இறுதி ஆதாரமாக விளங்குகின்றனர்.