Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையேயான உறவுகள்
   Posted On :  25.09.2023 07:01 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையேயான உறவுகள்

சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்தவொரு விழுமியமும் கிடையாது.

சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையேயான உறவுகள்:

சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்தவொரு விழுமியமும் கிடையாது. இவற்றை பல்வேறு பார்வைகளில் புரிந்து கொண்டு அரசியல் சிந்தனையாளர்களான ஆக்டன் பிரபு, டி டாக்வில், ஹெரால்டு லாஸ்கி (Lord Acton, De Tocqueville and Harold J.Laski) போன்றோர் அறிவார்ந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.

வேறுபடுத்தி நடத்துதல் மூலம் எவ்வாறு சமத்துவம் அடையப்படுகிறது?


ஆக்டன் பிரபு, டி டாக்வில் (Lord Acton, De Tocqueville) போன்ற அறிஞர்கள் சுதந்திர கொள்கையின் ஆதரவாளர்கள் ஆவர். ‘சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவம் இருக்காது எனவும் அதே போல சமத்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் இருக்காது என்பது மேற்கூறிய சிந்தனையாளர்களின் கருத்து ஆகும். ஹெரால்ட் லாஸ்கி சுதந்திரத்தை பற்றி கூறும்பொழுது,“சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு” என கூறுகிறார். மேலும் அவர் கூறும் பொழுது தடையற்ற சுதந்திரம் அளிக்கப்படும்போது, தனிமனிதர்கள் சக மனிதர்களுக்கு தீங்கு இழைக்கிறார்கள். இவ்வகை சுதந்திரம் சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது என்கிறார். 19-ஆம் நூற்றாண்டில், தனிமனிதத்துவவாதிகள் “சுதந்திரத்திற்கு” தவறான வரையறையை அளித்துவிட்டார்கள். அவர்கள் பொருளாதார சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசாங்கத்தின் தாராளமயக் கொள்கைக்கு மட்டுமே அழுத்தம் அளித்தார்கள் என்று ஹெரால்ட் லாஸ்கி கூறுகிறார்.

மேலும் ஹெரால்ட் லாஸ்கி, கூறுகையில் “எங்கு பணக்கார வர்க்கம் – ஏழை வர்க்கம், படித்தவர்கள் – படிக்காதவர்கள் என்ற பிரிவினை இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக முதலாளி, பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

"தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்கள் அரசாங்க தலையீடுகளான கட்டுப்பாடு, சலுகைகள், வரி, மானியம் போன்றவை இல்லாமல் சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார முறைமையே தாராளமயக் கொள்கை (Laisszr Faire) எனப்படும்."

மற்றுமொரு பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித், “முதலாளிகளுக்கும், தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்“ என்ற தனிமனிதத்துவவாதிகளின் கூற்றை ஆதரிக்கிறார். அரசாங்கமானது, பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதை தனிமனிதத்துவவாதிகள் விரும்புவதில்லை. அரசாங்கத்தினால் தேவை-வழங்கல் சூத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் இந்த சூத்திரத்தின் மூலமாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் இதன் மூலம் ஆபத்தான விளைவுப்பயன்களை சந்திக்க நேரிட்டது.

முதலாளிவர்க்கமானது வாய்ப்புகள் அனைத்தையும் அதிகபட்சமான சுரண்டலுக்குப் பயன்படுத்தினால், ஏழை வர்க்கத்திற்கும், பணக்காரவர்க்கத்திற்குமான இடைவெளி பெரிதும் அதிகமாகிறது. இதனால் உழைக்கும் வர்க்கம் அதிகம்  பாதிக்கப்படுவதால் உண்டான பின்விளைவு, தனிமனிதத்துவத்தினை எதிர்க்கவும் அதனால் சமதர்மம் உதயமாகவும் காரணமாகிறது. இவ்வாறு எழுச்சிபெற்ற சமதர்மமானது தனிமனிதத்துவவாதத்தின் கொள்கைகளை மறுக்க ஆரம்பித்தது. இந்த மாற்றம் “பொருளாதார சமத்துவமில்லாமல் சுதந்திரம் என்பது பொருளற்றது” என்ற நிலை உருவாக காரணமாக அமைந்தது.

அரசியல் சுதந்திரம் ஏற்படுவதற்கு பொருளாதார சமத்துவம் மிகவும் அத்தியாவசியமாகிறது. இது சாத்தியம் இல்லாதபோது, அரசாங்கமுறையானது முதலாளித்துவ மக்களாட்சியாக மாறி அதன் விளைவாக தொழிலாளர் வர்க்கம் என்பது வாக்குரிமையை மட்டுமே பெற்று, அதன் மூலம் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும். சுதந்திரமும், சமத்துவமும் சமதர்ம மக்களாட்சியில் மட்டுமே ஒன்றோடு ஒன்றாக இணைந்து பயணம் செய்யமுடியும். சுதந்திரத்திற்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அது என்னவெனில் சமத்துவம் மட்டுமே. “இதனால் சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கம் பாராட்டுகின்றன” என்று கூறுகிறார்  பொல்லார்டு.

சமத்துவத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?

சுதந்திர வாதிகளுக்கும், சமதர்மவாதிகளுக்கும் இடையேயான வேறுபட்டை நாம் உணரும்பட்சத்தில், சமத்துவ இலக்கை அடையும் வழிமுறையும் நமக்கு தெளிவடைகிறது. பின்வரும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளைப் பற்றிய பரந்த விவாதம் நம்மை சில முறைகளுக்கு வழிகாட்டுகிறது. அவற்றினைப் பற்றி தெரிந்து கொள்வோம். அவைகள்,

• முறைசார்ந்த சமத்துவத்தை உருவாக்குதல்

• வேறுபடுத்தி நடத்துதலின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்

• உடன்பாடான நடவடிக்கைகள் மூலம் சமத்துவம்

ஆண்ட்ரூ ஹேவுட் (Andrew Heywood) கூறும் பல்வேறுவகை சமத்துவ லட்சியங்களைப் பற்றிய பார்வை: சுதந்திரவாதிகள்

சுதந்திரவாதிகள், நம்புவது என்னவெனில் பிறக்கும்போது அனைத்து மக்களும் சமமாவர். இவர்கள் நீதிநெறி அடிப்படையில் சமமாக கருதப்படுகிறார்கள். இது முறையான சமத்துவத்தை உணர்த்துவதாகவும், குறிப்பாக சட்ட மற்றும் அரசியல் சமவாய்ப்புரிமை என்றாலும், சமூக சமத்துவம் என்பது சுதந்திரத்தை தியாகம் செய்து பெறக்கூடியதாகும்.

பழமைவாதிகள்

சமூகம் இயற்கையிலேயே படிநிலை அமைப்புடையது என்றும், சமத்துவம் என்பதை எப்போதுமே அடைய முடியாத ஒரு கற்பனை இலக்காக கருதுகின்றனர்.

சமதர்மவாதிகள்

சமதர்மச் சிந்தனையாளர்கள் சமத்துவத்தை அடிப்படையான விழுமியமாகவும், அதிலும் குறிப்பாக சமூக சமத்துவத்தை முக்கியமாக ஒப்புக் கொள்கிறார்கள். சமூக மக்களாட்சி தொடர்பான கருத்தாக்கத்தில் பல பரிமாணங்கள் இருந்தாலும், இவ்வகையான சமத்துவம் நிச்சயமாக சமூக ஒருங்கிணைப்பிலும், சகோதரத்துவத்திலும் கால்தடம் பதிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அமைப்பெதிர்வாதிகள்

இவ்வகை கொள்கைவாதிகள் அரசியல் சமத்துவத்தை மையப்படுத்தி தங்கள் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியுள்ளார்கள் . அரசியல் சமத்துவம் தனிநபர் சுதந்திரத்தை வழங்கும் என்றும், அனைத்து விதமான அரசியல் சமத்துவமின்மையும் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். பயன்தரக்கூடிய வளங்களை கூட்டு சொத்துடைமை ஆக்குவதன் மூலம் சமூக சமத்துவத்தை அடையலாம் என்பது அமைப் பெதிர்வாத பொதுவுடைமைவாதிகளின் (Anarcho - Communists) நம்பிக்கையாகும்.

பாசிசவாதிகள்

மனித குலமே இன அடிப்படையிலான சமத்துவமின்மையுடன் இருக்கிறது. இவ்வுலகில் இப்பாகுபாடு தலைவர், தொண்டர், நாடுகள் மற்றும் பல இனங்களுக்கு இடையேயும் இவ்வுலகத்தில் காணப்படுகிறது. ஒரு தேசமோ அல்லதுஇனமோ எதுவானாலும், அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் சமமாக பாவிக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரதான அடையாளமே அவர்களை கண்டறிய பயன்படுகிறது.

பெண்ணியவாதிகள்

பாலின சமத்துவமே இக்கொள்கைவாதிகளின் குறிக்கோள் ஆகும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் சம உரிமைகள், சமவாய்ப்புகள் பெறுவதோடு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார நிலைகளிலும் சம அதிகாரம் பெறுவதை இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

சூழலியல்வாதிகள்

உயிரி மைய சமத்துவமானது, வாழ்வின் அனைத்து வடிவங்களும் வாழவும், மலர்ந்து வளம் பெறவும் சம உரிமை உள்ளது என வலியுறுத்துகிறது.


11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : Relation between Liberty and Equality in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையேயான உறவுகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்