அறிமுகம், பொருள், முக்கியத்துவம், பரிமாணங்கள், வகைகள், சிக்கல்கள் - சமத்துவம் | 11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science
சமத்துவம்
அறிமுகம்
சமத்துவத்தினை புரிந்து கொள்ளுதல்
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கருத்து இன்று வரை புரியாத புதிராகவே விளங்குகிறது. சமத்துவத்தை விரும்புகின்ற நாடானது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சட்டங்களை உருவாக்குகிறது. வளர்ந்த நாடனாலும், வளர்ச்சிகுன்றிய நாடானாலும், சமத்துவம் தொடர்பான சட்டம் போதுமானதாக இல்லை. பன்மைத்துவ சமுதாயம் நிலைநாட்டப்பட்டுவிட்டதால் சமத்துவ சட்டம் அதிகமாக எதிர்க்கப்படுகிறது. அரசியல் கோட்பாட்டில் அமைந்துள்ள சுதந்திரம் மற்றும் உரிமைகள் என்ற கொள்கைகள் சமத்துவம் என்ற மூன்றாவது கொள்கை அமைவதற்கு காரணமாக உள்ளன. உரிமைகள் என்பவை குடிமக்களுக்கும், மக்கள் குழுமங்களுக்கும் அரசால் விநியோகம் செய்யப்படுவதை சமத்துவ கொள்கையே நிர்ணயிக்கிறது.
கற்றலின் நோக்கங்கள்
• சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத கற்பனைவாத நம்பிக்கையாகத் தெரிந்தாலும் அதனைப் புறக்கணிக்கும்பட்சத்தில், அமைப்பெதிர்வாதமும், குழப்பமும் ஏற்பட்டு மக்கள் நல அரசு என்பது பொருளற்றதாகிவிடும்.
• மாறுபட்ட பின்னணியிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு சமத்துவம், சமத்துவமின்மை, சமூகம் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
• பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், மாற்று மொழி சார்ந்த குழுமங்கள், போன்றோரின் சமத்துவத்திற்கான போராட்டங்களின் தேவையினை கண்டறிதல்.
• தேசத்தின் குடிமகனாக நீதியை நிலை நாட்டி சமத்துவத்தை உருவாக்க தனிமனிதர்களின் பங்கேற்பினை மேம்படுத்தவும், தேசிய இலக்காக இதை நிர்ணயிப்பது அவசியமாகும்.
சமத்துவம் என்பது "இக்குவாலிஸ்" (aequalis) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இது "நியாயமான" என்று பொருள்படுகிறது. ஒரே மாதிரியான உரிமைகள், சலுகைகள், நிலைகள், வாய்ப்புகள் மற்றும் நடத்தப்படும் முறைகள் போன்றவை, சமூகத்தில் மக்களுக்குச் சமமான உரிமையுடன் கிடைத்தல் ஆகியவை சமத்துவத்தை குறிப்பதாகும். மேலும் சமத்துவம் பங்கீட்டு கொள்கையாக பாவிக்கப்பட்டு உரிமைகள், வாய்ப்புகள், நடத்தும் முறைகள் ஆகியவை பயனாளிகளுக்கு நியாயமான முறையில் வழங்கப்படுதலைக் குறிக்கிறது.
மேலும் பங்கீட்டுக் கொள்கை என்பது, அனைவரையும், அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியாக நடத்துவதல்ல, மாறாக சமமாக இல்லாதவர்களை சமமற்ற வகையில் நடத்துதலும் சமத்துவ கொள்கையில் ஒரு அம்சமாகும். ஆகவே சமத்துவம் என்பது சம நீதியை அடிப்படையாக கொண்டதாகவும் விளங்குகிறது.
2. சமத்துவத்தின் முக்கியத்துவம்
ஏன் சமத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது?
சமத்துவ கொள்கையானது, மனிதர்களை, நிறம், பாலினம், இனம், தேசம் போன்றவைகளின் பாகுபாடு காட்டாமல் சமமான மதிப்புடன் நடத்தும் அரசியல் லட்சியமாக சமத்துவம் விளங்குகிறது. மனிதநேயம் எவ்வாறு பொதுவானதோ, அதே போன்று சகமனிதர்களை மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டியது அவசியம் என சுதந்திரம் வலியுறுத்துகிறது. இம்மனிதநேய நம்பிக்கையே அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக காரணமாக அமைந்தது.
சமூக அமைப்புகளையும், அரசுகளையும் எதிர்த்துப் போராட சமத்துவ முழக்கம் மிகவும் உதவிகரமாய் இருந்தது. ஏனெனில் நவீனயுகத்தில் பணி, செல்வவளம், நிலை மற்றும் சலுகை அடிப்படையில் தற்பொழுதும் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது.
18-ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும், முடியாட்சியையும் எதிர்த்து, "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற முழக்கத்தை பிரெஞ்சு புரட்சியாளர்கள் ஓங்கி முழங்கினர். 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில், சமத்துவக் கொள்கையை நிலைநாட்டக் காலனியாதிக்கத்திற்கு எதிராக புரட்சி நிகழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேற்கூறிய சமுதாயங்களில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும், பெண்களும் தங்களின் சமத்துவத்திற்காக புரட்சியை மேற்கொண்டனர்.
சமத்துவம் என்பது தற்பொழுது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாபெரும் லட்சியவாதமாக உலக அளவில் சட்டங்களிலும், அரசமைப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான புரட்சிகளும், எழுச்சிகளும் ஆங்காங்கே எழுந்தபோதிலும் சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்பொழுதும் உள்ளது என்பதே வெளிப்படையான உண்மை ஆகும். அனைத்து நாடுகளிலும் வீடு மற்றும் வசதிமிக்க வாழ்க்கைக்கு நடுவே சரிவர பாரமரிக்கப்படாத கழிவறைகளும், குடிநீரற்ற நிலையும் கொண்ட பள்ளிகள் உள்ளன. உணவை வீணடிக்கும் சிலரும், பசிக்கொடுமையால் வாடும் சிலரும் இருக்கின்ற நிலை பலவித சங்கடங்களை அளிக்கிறது. சட்டப்படியான உத்திரவாதங்களுக்கும், நடைமுறையில் நாம் பார்ப்பவற்றிற்கும் இடையே நிறைய வேறுபாடுகளைக் காணலாம்.
இந்தியா, தன் அரசமைப்பின் மூலமாக பணக்காரவர்க்கத்திற்கும், ஏழை வர்க்கத்திற்கும் இடையேயான இடைவெளியினை குறைப்பதற்கு இயன்ற வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சமத்துவம் என்றால் என்ன?
மனித வாழ்க்கையானது பல்வேறு வேற்றுமைகளுக்கிடையில் அமைந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நிறம், இனம் போன்ற வேற்றுமைகள் இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனசாட்சியின் அடிப்படையில் தவறானது என தெரிந்தபோதிலும், சக மனிதர்களிடையே மரியாதையும், அங்கீகாரமும் மறுக்கப்படுவது வேதனைக்குரிய நிகழ்வு ஆகும். எந்த ஒரு சமுதாயமும் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்துவது இல்லை. மனிதர்களுக்கிடையேயான தேவைகள், திறமைகள் மாறுபடுகின்ற பொழுது அனைத்து மக்களையும் சரிசமமாக பார்ப்பதும், பாவிப்பதும் இயலாததாகக் கருதப்படுகிறது. சமமாக உள்ளவர்கள் சமமில்லாமல் நடத்தப்படுவதும், சமமில்லாதவர்களை சமமாக நடத்துவதும், அநீதிக்கு வழி வகுக்கின்றன. இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வவளம், அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை காணப்படுகிறது.
எவ்வித வரலாற்றின் இயக்கமும், சமத்துவத்தை நோக்கி செல்வது இல்லை. ஏனெனில் ஓர் ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்கின்றபோது மற்றொரு ஏற்றத்தாழ்வு நிலை உருவாகுகிற சூழ்நிலை நிலவுகிறது. இதன் விளைவாக அறியப்படுவது என்னவென்றால், அழிக்கப்படுகின்ற ஏற்றத்தாழ்வுநிலை நியாயமற்றதாகவும், புதியதாக உருவாக்கப்படுகின்ற நிலை நியாயமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் அரசியல், சமூக மற்றும் கல்வி சமத்துவத்தை வலுப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும், புதிய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது. சுதந்திரத்தை போன்று, சமத்துவ கொள்கையும் நேர்மறை மற்றும் எதிர்மறை கோணங்களையும் பெற்று விளங்குகிறது. எதிர்மறை சமத்துவம் என்பது யாருக்கும் எந்தவித சலுகைகளும் காட்டாத சமூக நிலையையும், நேர்மறை சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள சமூக நிலையையும் பற்றியதாகும்.
லாஸ்கியின் (Laski) கூற்றுப்படி சமத்துவத்தின் விளக்கம்
• இது சலுகைகள் இல்லாத நிலையாகும். இது சமுதாயத்தில் வாழும் ஒருவருடைய விருப்பமானது வேறொருவருடைய விருப்பத்திற்கு சமமாக கருதப்படுகின்ற சூழ்நிலை ஆகும். சமுதாயத்தில் வாழும் அனைவருக்கும் உரிமைகள் சமமானதாக வழங்கப்படும். இதுவே சமத்துவ உரிமை ஆகும்.
• போதுமான வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுதல். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆளுமைத்தன்மையை உணருவதற்கு வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கித்தருதல்.
• சமூகத்தின் பலன்கள் அனைவருக்கும் சமமான அளவில் கிடைக்கும்படியாகவும், எந்தவொரு அடிப்படையிலும் யாரையும் இதனை அடையவிடாமல் தடுக்கக்கூடாது. ஒரு மனிதனின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத்தாழ்வுகள், ஆகியவை பாரம்பரியம் மற்றும் மரபுவழி காரணங்களின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமற்றவையாகும்.
• பொருளாதார மற்றும் சமூக சுரண்டல் இல்லாத சமுதாயமாக விளங்குதல்.
பெருமளவில் இருக்கக்கூடிய ஏழை வர்க்கமும், சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில்,அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும்.
- ஹெரால்ட் லாஸ்கி (Herold Laski)
பார்க்கரின் கூற்றுப்படி சமத்துவம்:
• அனைவருக்கும் அடிப்படை சமத்துவம்
• சமமான வாய்ப்புகள்
• வாழ்வுக்கான சமதளத்தை உருவாக்கும் சமத்துவ நிலைகள்
• விளைவுகளின் அடிப்படையில் சமத்துவத்தினை ஏற்படுத்துதல்
வாய்ப்புகளில் சமத்துவம்
சமத்துவம் என்பது அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் அளித்து அவர்களின் இலக்குகள் மற்றும் இலட்சியங்களை அடைவதற்குண்டான திறமைகளையும், திறன்களையும் வளர்ப்பது ஆகும்.
இயற்கை சமத்துவமின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை
இயற்கை சமத்துவமின்மை என்பது மக்களுக்கு இடையேயான திறன் மற்றும் திறமைகளுக்கு இடையேயான வேறுபாட்டினால் உருவாகிறது. இது போன்ற சமூக சமத்துவமின்மையானது, மக்களுக்கு வழங்கப்படும் சமமில்லாத வாய்ப்புகள் மற்றும் சில சமுதாயக் குழுக்களினுடைய சுரண்டலின் மூலமாக உண்டாக்கப்படுகிறது. இயற்கை சமத்துவமின்மை என்பது பிறப்பிலிருந்து உருவாகின்ற பல இயல்புகள் மற்றும் திறமைகளின் வெளிப்பாடாகும்.
ஆனால் சமூக சமத்துவமின்மை என்பது சமுதாயத்தினால் சமமற்ற முறையில் நடத்தப்படுவதால் உண்டாக்கப்படுகின்ற நிலையைக் குறிக்கின்றது. மேலும் இவ்வகை சமத்துவமின்மை என்பது இனம், ஜாதி, மதம், பாலினம், நிறம் போன்றவற்றின் அடிப்படையில் சமுதாயத்தில் மக்களை வேற்றுமைப்படுத்தி நடத்துவதால் உருவாகிறது.பலநூற்றாண்டுகளாக பெண்களுக்கான சம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதேபோல, அடிமைத்தனம் பற்றிய எதிர்க்கேள்வி கேட்கப்படும்வரை, கறுப்பின மக்கள், அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். மேலும் பிறப்பிலேயே உடல் ஊனமுற்றோராக பிறந்த சிலர் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவி கொண்டு இயல்பான மக்களுக்கு சமமாக சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பினைச் செய்கின்றனர். சமீபத்தில் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் இயற்பியல் கல்விக்கான பங்களிப்பு, அவருடைய உடல் ஊனத்தையும் தாண்டிய குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். அரசியல் தத்துவஞானிகள் பலர் தங்களின் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் சித்தாந்தங்கள் மூலமாக சமமான மற்றும் நியாயமான சமூகத்தினை உருவாக்கும் வழிமுறைகள் பற்றி எழுதியுள்ளனர்.
பின்வரும் கேலிச்சித்திரத்தை உற்றுநோக்கி அதில் காணப்படும் சமத்துவமின்மையின் வகைகளை விவரி.
அ) சமூக சமத்துவம்
சமூக சமத்துவம் என்பது பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் சமூக நிலை அடிப்படையாக கொண்டு உரிமைகள், சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதல், பாகுபாடில்லாத சமூக அமைப்பு போன்றவை ஆகும். ஒவ்வொருவருக்கும், தங்கள் ஆளுமைகளை மேம்படுத்துவதற்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் என்பது சில முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவை, சமூக நிலையை அடிப்படையாக கொண்ட பாகுபாட்டினை நீக்குதல், சிலருக்கு மட்டுமே உரித்தான சிறப்புச் சலுகைகளை நீக்குதல் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது ஆகியவை ஆகும்.
பிரான்சு நாட்டின் "மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனம்" குறிப்பிடுகையில், "மனிதர்கள் சுதந்திரமாக பிறந்த உடன் எப்பொழுதும் சுதந்திரமான மற்றும் சமமான உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்" என்று கூறுகிறது. 1948, டிசம்பர் 10-ஆம் நாளன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அச்சபையின் மனித உரிமைகள் பிரகடனம் உலகமக்களின் சமூக சமத்துவத்தை உறுதி செய்துள்ளது.
அகிம்சை அடிப்படையிலான அமெரிக்க குடிமை உரிமைகள் இயக்கத்தின் ஈடுஇணையற்ற தலைவராக மார்ட்டின் லூதர்கிங் ஜுனியர் கருதப்படுகிறார். 1950 மற்றும் 1960-களில் சமூக நீதிக்காக கறுப்பினத்தவர்கள், அமெரிக்காவில் ஏற்படுத்திய சம உரிமைகளைப் பெறுவதற்கான புரட்சியே குடிமை உரிமைகள் இயக்கமாகும். இந்தியாவில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் துவங்கிய கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான இயக்கமானது வரலாற்று சிறப்புமிக்கதாக இந்தியாவில் கருதப்படுகிறது. மேலும் இவ்வியக்கம் சமூக சமத்துவத்திற்கான விதையாகும்.
ஆ) குடிமை சமத்துவம்
சிவில் என்கின்ற வார்த்தை சிவில்ஸ் (Civils) அல்லது சிவிஸ் (Civis) என்ற லத்தீன் மொழிச்சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டு ஆங்கிலத்தில் "குடிமக்கள்" எனப்பெயர் பெறுகிறது. குடிமை சமத்துவம் எனப்படுவது சமமான குடிமையுரிமைகளும், பிற சுதந்திரங்களும் ஒரு குடிமகனுக்குத் தரப்படுவதாகும். குடிமை சமத்துவம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான குடிமை சுதந்திரங்கள் மற்றும் குடிமை உரிமைகளை உள்ளடக்கியதாகும் சமுதாயத்தில் உயர்த்தோர், தாழ்த்தோர், ஏழை ,பணக்காரர், ஜாதி, இன, மத அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் கூடாது என்பதாகும்..
விவாதம்
'சட்டத்தின் ஆட்சி எவ்வாறு குடிமை சமத்துவத்துடன் தொடர்புடையது?
இ) அரசியல் சமத்துவம்
அரசின் நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் அரசியல் சமத்துவம் எனப்படுகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் மூலம் இந்த அரசியல் உரிமை உறுதி செய்யப்படுகிறது.
குடிமக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் பிற காரணிகள்
❖ வாக்குரிமை
❖ தேர்தலில் போட்டியிடும் உரிமை
❖ அரசாங்கப்பதவிகளை வகிப்பதற்கான உரிமை.
❖ அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனு செய்தல் மற்றும் பொது கொள்கைகள் மீதான விமர்சனம் செய்யும் உரிமைகள்.
அரசியல் சமத்துவம் என்பது உண்மையில் மக்களாட்சி பரிசோதனைகளுக்கான தேர்வாகும். அரசியல் அதிகாரத்தை மக்களிடையே பரவ செய்வதற்கு அரசியல் சமத்துவம் மட்டுமே போதாது.மேலும் சமூக, பொருளாதார சமத்துவம் என்பது அரசியல் சமத்துவத்தை அடைய அவசியமாகிறது.
ஈ) இயற்கைச் சமத்துவம்
மனிதன் பிறக்கும்போதே ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பால், பிறப்பிடம், மற்றும் இருப்பிடம் போன்ற ஏற்றத்தாழ்வு இன்றி இருக்கும் நிலையே இயற்கை உரிமை என்கிறோம்
உ) பொருளாதார சமத்துவம்
பொருளாதார சமத்துவம் என்பதை அனைத்து மக்களும் தங்களை முழுமையாக மேம்படுத்திக் கொள்வதற்கு நியாயமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே நியாயப்படுத்த இயலும். தகுந்த வேலைவாய்ப்பு, உரிய கூலி, போதுமான ஓய்வு, மற்றும் பொருளியல் மேலாண்மையில் சமபங்கு ஆகிய இவையனைத்தும் பொருளாதார சமத்துவத்தினை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
பேராசிரியர் லாஸ்கி பொருளாதார சமத்துவத்தை பற்றி கூறும் பொழுது "அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரமின்றி, மெய்மையாவதில்லை என்றும் அப்படியில்லாத நிலையில் வழங்கப்படும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார அதிகாரத்தின் கைப்பாவையாகும்" என்று கூறுகிறார்.
இங்கு பொருளாதார சமத்துவம் என்பது சமமான வாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் அளிக்கும் போது பொருளாதாரம் மேம்பாடு அடையும் எனப் பொருள்படுகிறது. மேற்கூறிய முறையானது சமதர்மத்தில்சாத்தியமாகுமேயன்றி லட்சியவாதத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தில் நடக்காது எனலாம்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், நாட்டின் வளமைகளில் சமமான பங்கை அளிப்பது பொருளாதார சமத்துவமாகும்".- ப்ரைஸ் பிரபு
நிகழ் ஆய்வு
.ஒரு நாட்டின் நிலைத்தன்மைக்கு வறுமை என்னும் பிரச்சனை அச்சுறுத்தலாக இருக்கிறது. உதாரணத்திற்கு துனீஷியாவில் நடைபெற்ற 'மல்லிகைப்' புரட்சியில் ஆச்சரியப்படும் விதமாக, அந்நாட்டு மக்கள் ஏதேசசதிகார ஆட்சியை எதிர்த்தது அரபு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 29 நாட்கள் நடந்த புரட்சியில், அந்நாட்டில் 23 வருடங்கள் ஆட்சி செய்த 'பென் அலி' என்பவரின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முஹமத் புவாஸ்ஸி என்ற வேலைவாய்ப்பு கிடைக்காத மனிதரை காவலர்கள் துன்புறுத்தியதால் அவர் டிசம்பர் 17, 2010-ஆம் நாள், சிடி புஸித் என்ற துனீஷிய நகரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த புரட்சிக்கு வித்திட்டது. மக்கள் இதன் விளைவாக "மல்லிகைப் புரட்சியை" தொடங்கினார்கள். (மல்லிகை, துனிஷியாவின் தேசிய மலராகும்). பொருளாதார வாய்ப்பில்லாமை, மற்றும் தொடர்ச்சியான காவலர் துன்புறுத்தலிலும் சிக்கித் தவித்த, அந்நகரத்து மக்கள், "ஒரு கையில் அலைபேசியையும், மற்றொன்றில் பாறையையும்" கொண்டு புரட்சியை மேற்கொண்டனர்.
கோபம், விரக்தி, இணக்கமற்ற சூழ்நிலை மற்றும் மக்களாட்சி கோரிக்கைக்கான ஒன்றிணைந்த இந்த அலையானது அரபு நாடுகள் அத்தனையையுமே உலுக்கியது. அரபு உலகத்தில் எழுந்த இந்த கிளர்ச்சிப் போராட்டம் மக்களாட்சிக்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடந்த போராட்டம் மட்டுமல்ல. மாறாக இப்புரட்சியானது நியாயமற்ற பொருளாதார முறைமையை எதிர்த்து உண்டான மாபெரும் எதிர்ப்புப் புரட்சியாக அமைந்தது.
நன்றி - ப்ரெண்ட்லைன், பிப்ரவரி 26, 2011.
ஊ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் :
வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் என்பதன் பொருள் அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதாகும். அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களது ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அரசினால் அளிக்கப்படவேண்டும். சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரர், பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் நீக்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்பு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கல்வியை அளிக்கிறது.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
"பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு! சுதந்திரம் என்ன நன்மையை அளிக்கமுடியும்? அவனால் அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது. - தாமஸ் ஹாப்ஸ்
சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்தவொரு விழுமியமும் கிடையாது. இவற்றை பல்வேறு பார்வைகளில் புரிந்து கொண்டு அரசியல் சிந்தனையாளர்களான ஆக்டன் பிரபு, டி டாக்வில், ஹெரால்டு லாஸ்கி (Lord Acton, De Tocqueville and Harold J.Laski) போன்றோர் அறிவார்ந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.
வேறுபடுத்தி நடத்துதல் மூலம் எவ்வாறு சமத்துவம் அடையப்படுகிறது?
ஆக்டன் பிரபு, டி டாக்வில் (Lord Acton, De Tocqueville) போன்ற அறிஞர்கள் சுதந்திர கொள்கையின் ஆதரவாளர்கள் ஆவர். ‘சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவம் இருக்காது எனவும் அதே போல சமத்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் இருக்காது என்பது மேற்கூறிய சிந்தனையாளர்களின் கருத்து ஆகும். ஹெரால்ட் லாஸ்கி சுதந்திரத்தை பற்றி கூறும்பொழுது,“சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு” என கூறுகிறார். மேலும் அவர் கூறும் பொழுது தடையற்ற சுதந்திரம் அளிக்கப்படும்போது, தனிமனிதர்கள் சக மனிதர்களுக்கு தீங்கு இழைக்கிறார்கள். இவ்வகை சுதந்திரம் சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது என்கிறார். 19-ஆம் நூற்றாண்டில், தனிமனிதத்துவவாதிகள் “சுதந்திரத்திற்கு” தவறான வரையறையை அளித்துவிட்டார்கள். அவர்கள் பொருளாதார சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசாங்கத்தின் தாராளமயக் கொள்கைக்கு மட்டுமே அழுத்தம் அளித்தார்கள் என்று ஹெரால்ட் லாஸ்கி கூறுகிறார்.
மேலும் ஹெரால்ட் லாஸ்கி, கூறுகையில் “எங்கு பணக்கார வர்க்கம் – ஏழை வர்க்கம், படித்தவர்கள் – படிக்காதவர்கள் என்ற பிரிவினை இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக முதலாளி, பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
"தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்கள் அரசாங்க தலையீடுகளான கட்டுப்பாடு, சலுகைகள், வரி, மானியம் போன்றவை இல்லாமல் சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார முறைமையே தாராளமயக் கொள்கை (Laisszr Faire) எனப்படும்."
மற்றுமொரு பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித், “முதலாளிகளுக்கும், தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்“ என்ற தனிமனிதத்துவவாதிகளின் கூற்றை ஆதரிக்கிறார். அரசாங்கமானது, பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதை தனிமனிதத்துவவாதிகள் விரும்புவதில்லை. அரசாங்கத்தினால் தேவை-வழங்கல் சூத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் இந்த சூத்திரத்தின் மூலமாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் இதன் மூலம் ஆபத்தான விளைவுப்பயன்களை சந்திக்க நேரிட்டது.
முதலாளிவர்க்கமானது வாய்ப்புகள் அனைத்தையும் அதிகபட்சமான சுரண்டலுக்குப் பயன்படுத்தினால், ஏழை வர்க்கத்திற்கும், பணக்காரவர்க்கத்திற்குமான இடைவெளி பெரிதும் அதிகமாகிறது. இதனால் உழைக்கும் வர்க்கம் அதிகம் பாதிக்கப்படுவதால் உண்டான பின்விளைவு, தனிமனிதத்துவத்தினை எதிர்க்கவும் அதனால் சமதர்மம் உதயமாகவும் காரணமாகிறது. இவ்வாறு எழுச்சிபெற்ற சமதர்மமானது தனிமனிதத்துவவாதத்தின் கொள்கைகளை மறுக்க ஆரம்பித்தது. இந்த மாற்றம் “பொருளாதார சமத்துவமில்லாமல் சுதந்திரம் என்பது பொருளற்றது” என்ற நிலை உருவாக காரணமாக அமைந்தது.
அரசியல் சுதந்திரம் ஏற்படுவதற்கு பொருளாதார சமத்துவம் மிகவும் அத்தியாவசியமாகிறது. இது சாத்தியம் இல்லாதபோது, அரசாங்கமுறையானது முதலாளித்துவ மக்களாட்சியாக மாறி அதன் விளைவாக தொழிலாளர் வர்க்கம் என்பது வாக்குரிமையை மட்டுமே பெற்று, அதன் மூலம் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும். சுதந்திரமும், சமத்துவமும் சமதர்ம மக்களாட்சியில் மட்டுமே ஒன்றோடு ஒன்றாக இணைந்து பயணம் செய்யமுடியும். சுதந்திரத்திற்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அது என்னவெனில் சமத்துவம் மட்டுமே. “இதனால் சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கம் பாராட்டுகின்றன” என்று கூறுகிறார் பொல்லார்டு.
சமத்துவத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
சுதந்திர வாதிகளுக்கும், சமதர்மவாதிகளுக்கும் இடையேயான வேறுபட்டை நாம் உணரும்பட்சத்தில், சமத்துவ இலக்கை அடையும் வழிமுறையும் நமக்கு தெளிவடைகிறது. பின்வரும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளைப் பற்றிய பரந்த விவாதம் நம்மை சில முறைகளுக்கு வழிகாட்டுகிறது. அவற்றினைப் பற்றி தெரிந்து கொள்வோம். அவைகள்,
• முறைசார்ந்த சமத்துவத்தை உருவாக்குதல்
• வேறுபடுத்தி நடத்துதலின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
• உடன்பாடான நடவடிக்கைகள் மூலம் சமத்துவம்
ஆண்ட்ரூ ஹேவுட் (Andrew Heywood) கூறும் பல்வேறுவகை சமத்துவ லட்சியங்களைப் பற்றிய பார்வை: சுதந்திரவாதிகள்
சுதந்திரவாதிகள், நம்புவது என்னவெனில் பிறக்கும்போது அனைத்து மக்களும் சமமாவர். இவர்கள் நீதிநெறி அடிப்படையில் சமமாக கருதப்படுகிறார்கள். இது முறையான சமத்துவத்தை உணர்த்துவதாகவும், குறிப்பாக சட்ட மற்றும் அரசியல் சமவாய்ப்புரிமை என்றாலும், சமூக சமத்துவம் என்பது சுதந்திரத்தை தியாகம் செய்து பெறக்கூடியதாகும்.
பழமைவாதிகள்
சமூகம் இயற்கையிலேயே படிநிலை அமைப்புடையது என்றும், சமத்துவம் என்பதை எப்போதுமே அடைய முடியாத ஒரு கற்பனை இலக்காக கருதுகின்றனர்.
சமதர்மவாதிகள்
சமதர்மச் சிந்தனையாளர்கள் சமத்துவத்தை அடிப்படையான விழுமியமாகவும், அதிலும் குறிப்பாக சமூக சமத்துவத்தை முக்கியமாக ஒப்புக் கொள்கிறார்கள். சமூக மக்களாட்சி தொடர்பான கருத்தாக்கத்தில் பல பரிமாணங்கள் இருந்தாலும், இவ்வகையான சமத்துவம் நிச்சயமாக சமூக ஒருங்கிணைப்பிலும், சகோதரத்துவத்திலும் கால்தடம் பதிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அமைப்பெதிர்வாதிகள்
இவ்வகை கொள்கைவாதிகள் அரசியல் சமத்துவத்தை மையப்படுத்தி தங்கள் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியுள்ளார்கள் . அரசியல் சமத்துவம் தனிநபர் சுதந்திரத்தை வழங்கும் என்றும், அனைத்து விதமான அரசியல் சமத்துவமின்மையும் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். பயன்தரக்கூடிய வளங்களை கூட்டு சொத்துடைமை ஆக்குவதன் மூலம் சமூக சமத்துவத்தை அடையலாம் என்பது அமைப் பெதிர்வாத பொதுவுடைமைவாதிகளின் (Anarcho - Communists) நம்பிக்கையாகும்.
பாசிசவாதிகள்
மனித குலமே இன அடிப்படையிலான சமத்துவமின்மையுடன் இருக்கிறது. இவ்வுலகில் இப்பாகுபாடு தலைவர், தொண்டர், நாடுகள் மற்றும் பல இனங்களுக்கு இடையேயும் இவ்வுலகத்தில் காணப்படுகிறது. ஒரு தேசமோ அல்லதுஇனமோ எதுவானாலும், அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் சமமாக பாவிக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரதான அடையாளமே அவர்களை கண்டறிய பயன்படுகிறது.
பெண்ணியவாதிகள்
பாலின சமத்துவமே இக்கொள்கைவாதிகளின் குறிக்கோள் ஆகும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் சம உரிமைகள், சமவாய்ப்புகள் பெறுவதோடு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார நிலைகளிலும் சம அதிகாரம் பெறுவதை இவர்கள் ஆதரிக்கிறார்கள்.
சூழலியல்வாதிகள்
உயிரி மைய சமத்துவமானது, வாழ்வின் அனைத்து வடிவங்களும் வாழவும், மலர்ந்து வளம் பெறவும் சம உரிமை உள்ளது என வலியுறுத்துகிறது.
இந்திய அரசமைப்பின் சமத்துவ கருத்தாக்கம்
இந்திய அரசமைப்பின் உறுப்பு - 14-ன் படி ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் பிறப்பிடம், சாதி, மதம், மொழி, இனம், பாலினம், நிறம் போன்றவை அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் தெரிவிக்கிறது என்றும், இதைப் போல உறுப்பு - 15, உறுப்பு - 14-ஐ உறுதிப்படுத்தும் நோக்குடன் இவ்வகை பாகுபாடுகளை தடை செய்துள்ளது. 'சட்டத்தின் முன் சமம்' மற்றும் 'சமமான சட்டப் பாதுகாப்பு' ஆகியவை இந்திய அரசமைப்பின் உறுப்பு - 21-ன் மூலம் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 'எந்தவொரு தனி நபரும், சட்ட நடை முறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது என்றும் விளக்குகிறது. ஒரு தனிநபரை தண்டிக்க வேண்டும் என்றால்,அதைசட்டத்தின் நடைமுறை மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இது போல ஒருதலைபட்சமாகவோ, பாகுபாடான முறையிலோ அல்லது சமமற்ற முறையில் பல தனிமனிதர்களை நடத்துதலோ தவறு ஆகிறது'.