பின்வரும் கேலிச்சித்திரத்தை உற்றுநோக்கி அதில் காணப்படும் சமத்துவமின்மையின் வகைகளை விவரி.
அ) சமூக சமத்துவம்
சமூக சமத்துவம் என்பது பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் சமூக நிலை அடிப்படையாக கொண்டு உரிமைகள், சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதல், பாகுபாடில்லாத சமூக அமைப்பு போன்றவை ஆகும். ஒவ்வொருவருக்கும், தங்கள் ஆளுமைகளை மேம்படுத்துவதற்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் என்பது சில முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவை, சமூக நிலையை அடிப்படையாக கொண்ட பாகுபாட்டினை நீக்குதல், சிலருக்கு மட்டுமே உரித்தான சிறப்புச் சலுகைகளை நீக்குதல் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது ஆகியவை ஆகும்.
பிரான்சு நாட்டின் "மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனம்" குறிப்பிடுகையில், "மனிதர்கள் சுதந்திரமாக பிறந்த உடன் எப்பொழுதும் சுதந்திரமான மற்றும் சமமான உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்" என்று கூறுகிறது. 1948, டிசம்பர் 10-ஆம் நாளன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அச்சபையின் மனித உரிமைகள் பிரகடனம் உலகமக்களின் சமூக சமத்துவத்தை உறுதி செய்துள்ளது.
அகிம்சை அடிப்படையிலான அமெரிக்க குடிமை உரிமைகள் இயக்கத்தின் ஈடுஇணையற்ற தலைவராக மார்ட்டின் லூதர்கிங் ஜுனியர் கருதப்படுகிறார். 1950 மற்றும் 1960-களில் சமூக நீதிக்காக கறுப்பினத்தவர்கள், அமெரிக்காவில் ஏற்படுத்திய சம உரிமைகளைப் பெறுவதற்கான புரட்சியே குடிமை உரிமைகள் இயக்கமாகும். இந்தியாவில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் துவங்கிய கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான இயக்கமானது வரலாற்று சிறப்புமிக்கதாக இந்தியாவில் கருதப்படுகிறது. மேலும் இவ்வியக்கம் சமூக சமத்துவத்திற்கான விதையாகும்.
ஆ) குடிமை சமத்துவம்
சிவில் என்கின்ற வார்த்தை சிவில்ஸ் (Civils) அல்லது சிவிஸ் (Civis) என்ற லத்தீன் மொழிச்சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டு ஆங்கிலத்தில் "குடிமக்கள்" எனப்பெயர் பெறுகிறது. குடிமை சமத்துவம் எனப்படுவது சமமான குடிமையுரிமைகளும், பிற சுதந்திரங்களும் ஒரு குடிமகனுக்குத் தரப்படுவதாகும். குடிமை சமத்துவம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான குடிமை சுதந்திரங்கள் மற்றும் குடிமை உரிமைகளை உள்ளடக்கியதாகும் சமுதாயத்தில் உயர்த்தோர், தாழ்த்தோர், ஏழை ,பணக்காரர், ஜாதி, இன, மத அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் கூடாது என்பதாகும்..
விவாதம்
'சட்டத்தின் ஆட்சி எவ்வாறு குடிமை சமத்துவத்துடன் தொடர்புடையது?
இ) அரசியல் சமத்துவம்
அரசின் நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் அரசியல் சமத்துவம் எனப்படுகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் மூலம் இந்த அரசியல் உரிமை உறுதி செய்யப்படுகிறது.
குடிமக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் பிற காரணிகள்
❖ வாக்குரிமை
❖ தேர்தலில் போட்டியிடும் உரிமை
❖ அரசாங்கப்பதவிகளை வகிப்பதற்கான உரிமை.
❖அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனு செய்தல் மற்றும் பொது கொள்கைகள் மீதான விமர்சனம் செய்யும் உரிமைகள்.
அரசியல் சமத்துவம் என்பது உண்மையில் மக்களாட்சி பரிசோதனைகளுக்கான தேர்வாகும். அரசியல் அதிகாரத்தை மக்களிடையே பரவ செய்வதற்கு அரசியல் சமத்துவம் மட்டுமே போதாது.மேலும் சமூக, பொருளாதார சமத்துவம் என்பது அரசியல் சமத்துவத்தை அடைய அவசியமாகிறது.
ஈ) இயற்கைச் சமத்துவம்
மனிதன் பிறக்கும்போதே ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பால், பிறப்பிடம், மற்றும் இருப்பிடம் போன்ற ஏற்றத்தாழ்வு இன்றி இருக்கும் நிலையே இயற்கை உரிமை என்கிறோம்
உ) பொருளாதார சமத்துவம்
பொருளாதார சமத்துவம் என்பதை அனைத்து மக்களும் தங்களை முழுமையாக மேம்படுத்திக் கொள்வதற்கு நியாயமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே நியாயப்படுத்த இயலும். தகுந்த வேலைவாய்ப்பு, உரிய கூலி, போதுமான ஓய்வு, மற்றும் பொருளியல் மேலாண்மையில் சமபங்கு ஆகிய இவையனைத்தும் பொருளாதார சமத்துவத்தினை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
பேராசிரியர் லாஸ்கி பொருளாதார சமத்துவத்தை பற்றி கூறும் பொழுது "அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரமின்றி, மெய்மையாவதில்லை என்றும் அப்படியில்லாத நிலையில் வழங்கப்படும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார அதிகாரத்தின் கைப்பாவையாகும்" என்று கூறுகிறார்.
இங்கு பொருளாதார சமத்துவம் என்பது சமமான வாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் அளிக்கும் போது பொருளாதாரம் மேம்பாடு அடையும் எனப் பொருள்படுகிறது. மேற்கூறிய முறையானது சமதர்மத்தில்சாத்தியமாகுமேயன்றி லட்சியவாதத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தில் நடக்காது எனலாம்.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், நாட்டின் வளமைகளில் சமமான பங்கை அளிப்பது பொருளாதார சமத்துவமாகும்".- ப்ரைஸ் பிரபு
நிகழ் ஆய்வு
.ஒரு நாட்டின் நிலைத்தன்மைக்கு வறுமை என்னும் பிரச்சனை அச்சுறுத்தலாக இருக்கிறது. உதாரணத்திற்கு துனீஷியாவில் நடைபெற்ற 'மல்லிகைப்' புரட்சியில் ஆச்சரியப்படும் விதமாக, அந்நாட்டு மக்கள் ஏதேசசதிகார ஆட்சியை எதிர்த்தது அரபு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 29 நாட்கள் நடந்த புரட்சியில், அந்நாட்டில் 23 வருடங்கள் ஆட்சி செய்த 'பென் அலி' என்பவரின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முஹமத் புவாஸ்ஸி என்ற வேலைவாய்ப்பு கிடைக்காத மனிதரை காவலர்கள் துன்புறுத்தியதால் அவர் டிசம்பர் 17, 2010-ஆம் நாள், சிடி புஸித் என்ற துனீஷிய நகரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த புரட்சிக்கு வித்திட்டது. மக்கள் இதன் விளைவாக "மல்லிகைப் புரட்சியை" தொடங்கினார்கள். (மல்லிகை, துனிஷியாவின் தேசிய மலராகும்). பொருளாதார வாய்ப்பில்லாமை, மற்றும் தொடர்ச்சியான காவலர் துன்புறுத்தலிலும் சிக்கித் தவித்த, அந்நகரத்து மக்கள், "ஒரு கையில் அலைபேசியையும், மற்றொன்றில் பாறையையும்" கொண்டு புரட்சியை மேற்கொண்டனர்.
கோபம், விரக்தி, இணக்கமற்ற சூழ்நிலை மற்றும் மக்களாட்சி கோரிக்கைக்கான ஒன்றிணைந்த இந்த அலையானது அரபு நாடுகள் அத்தனையையுமே உலுக்கியது. அரபு உலகத்தில் எழுந்த இந்த கிளர்ச்சிப் போராட்டம் மக்களாட்சிக்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடந்த போராட்டம் மட்டுமல்ல. மாறாக இப்புரட்சியானது நியாயமற்ற பொருளாதார முறைமையை எதிர்த்து உண்டான மாபெரும் எதிர்ப்புப் புரட்சியாக அமைந்தது.
நன்றி - ப்ரெண்ட்லைன், பிப்ரவரி 26, 2011.
ஊ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் :
வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் என்பதன் பொருள் அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதாகும். அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களது ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அரசினால் அளிக்கப்படவேண்டும். சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரர், பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் நீக்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்பு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கல்வியை அளிக்கிறது.
குறிப்பிடத்தக்க மேற்கோள்
"பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு! சுதந்திரம் என்ன நன்மையை அளிக்கமுடியும்? அவனால் அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது. - தாமஸ் ஹாப்ஸ்