இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: எழுத்து, சொல் | 10th Tamil : Chapter 1 : Amudha oottru
மொழி
கற்கண்டு
எழுத்து, சொல்
மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின்
சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்.
எழுத்து
சார்பெழுத்து
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும்
சார்பெழுத்துகள் ஆகும். அவற்றுள் உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகிய
இரண்டு அளபெடைகள் குறித்து இங்குக் காண்போம்.
அளபெடுத்தல்
- நீண்டு ஒலித்தல்.
பேச்சு
வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும்
இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.
எ.கா. அம்மாஅ, தம்பீஇ
1. உயிரளபெடை
செய்யுளில்
ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள்
ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான
குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.
உயிரளபெடை
மூன்று வகைப்படும்.
அ) செய்யுளிசை அளபெடை
செய்யுளில்
ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள்
அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை
அளபெடை என்றும் கூறுவர்.
ஓஒதல்
வேண்டும் - மொழி முதல்
உறாஅர்க்கு
உறுநோய் - மொழியிடை
நல்ல
படாஅ பறை
- மொழியிறுதி
ஆ) இன்னிசை அளபெடை
செய்யுளில்
ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இ) சொல்லிசை அளபெடை
செய்யுளில்
ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை
அளபெடை ஆகும்.
உரனசைஇ உள்ளம்
துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும்
உளேன்.
நசை
- விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என
அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.
2. ஒற்றளபெடை
செய்யுளில்
ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல்,ள் ஆகிய பத்தும்,
ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை
ஆகும்.
எங்ங்கிறைவன்
எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்
சொல்
'பூ மலர்ந்தது.'
'மாடு புல் தின்றது.'
ஓர் எழுத்து தனித்தோ, பல
எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது,
அ)
இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.
ஆ)
மூவகை இடங்களிலும் வரும்.
இ)
உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
ஈ)
வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.
மூவகை மொழி
தனி
மொழி,
தொடர்மொழி, பொதுமொழி என மொழி மூன்று வகையாக
அமையும்.
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.
(நன்னூல் - 260)
தனிமொழி
ஒரு
சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
எ.கா. கண், படி - பகாப்பதம்
கண்ணன், படித்தான் - பகுபதம்
தொடர்மொழி
இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
எ.கா. கண்ணன் வந்தான்.
மலர்
வீட்டுக்குச் சென்றாள்.
பொதுமொழி
ஒரு
சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும்
தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி
எனப்படும்.
எ. கா.
எட்டு
- எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.
வேங்கை
- வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.
இவையே
எள் + து எனவும் வேம் + கை எனவும் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனவும் பொருள் தரும். இவை இருபொருள்களுக்கும் பொது வாய்
அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.
தொழிற்பெயர்
ஒரு
வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ
உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா. ஈதல், நடத்தல்
விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்
வினையடியுடன்
விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.
எ.கா. நட என்பது வினையடி
நடை, நடத்தை
எதிர்மறைத் தொழிற்பெயர்
எதிர்மறைப்
பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர்
ஆகும்.
எ.கா. நடவாமை, கொல்லாமை
முதனிலைத் தொழிற்பெயர்
விகுதி
பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.
எ.கா. தட்டு, உரை, அடி
இச்சொற்கள்
முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல்
என்று பொருள் படும் போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
விகுதி
பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
எ.கா. பேறு
வினையாலணையும் பெயர்
ஒரு
வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்
கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று
காலங்களிலும் வரும்.
எ.கா. வந்தவர் அவர்தான்.
பொறுத்தார்
பூமியாள்வார்.
தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும்
உள்ள வேறுபாடு
கற்பவை
கற்றபின்....
1.
தேன், நூல், பை, மலர், வா - இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத்
தொடர்மொழிகளாக்குக.
2.
வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு
எ.கா. காட்சி, காணுதல், காணல், காணாமை
3.
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு
உரையாடலைத் தொடர்க.
அண்ணன்
: எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)
தம்பி : ---------------
(தனிமொழி)
அண்ணன் : ---------------
வாங்குகிறாய்?
(தொடர்மொழி)
தம்பி : ---------------
(தொடர்மொழி)
அண்ணன் : ---------------
(தனிமொழி)
தம்பி : ---------------
(தொடர்மொழி)
அண்ணன் :
தம்பி
:
4.
மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது
ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்;
மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும்
பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.'
இத்தொடர்களில்
உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.
5.
கட்டு, சொட்டு, வழிபாடு,
கேடு, கோறல் - இத்தொழிற்பெயர்களை
வகைப்படுத்துக.