Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | உரைநடை: தமிழ்ச்சொல் வளம்

தேவநேயப் பாவாணர் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழ்ச்சொல் வளம் | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

   Posted On :  21.07.2022 02:41 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

உரைநடை: தமிழ்ச்சொல் வளம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : உரைநடை: தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழி

உரைநடை உலகம்

தமிழ்ச்சொல் வளம்

- தேவநேயப் பாவாணர்


 

நுழையும்முன்

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.


சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும்.

"தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).

தமிழ்ச் சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறும்.

 

அடி வகை

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.

தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி

கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி


தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி : கரும்பின் அடி

கழை : மூங்கிலின் அடி

அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.

 

கிளைப்பிரிவுகள்

தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள்.

கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை; கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு; கிளை: கொம்பின் பிரிவு; சினை: கிளையின் பிரிவு; போத்து: சினையின் பிரிவு; குச்சு: போத்தின் பிரிவு; இணுக்கு: குச்சியின் பிரிவு.

 

காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல்

காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்.

சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி); விறகு: காய்ந்த சிறுகிளை; வெங்கழி: காய்ந்த கழி; கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

 

இலை வகை

தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள்.

இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை; தாள்: நெல்,புல் முதலியவற்றின் இலை; தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை; ஓலை: தென்னை, பனை முதலியவற்றின் இலை; சண்டு: காய்ந்த தாளும் தோகையும்; சருகு: காய்ந்த இலை.

 

கொழுந்து வகை.

தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்.

துளிர் அல்லது தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து; முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து; குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து; கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.

 

பூவின் நிலைகள்

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்.

அரும்பு: பூவின் தோற்றநிலை; போது: பூ விரியத் தொடங்கும் நிலை; மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை; வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை; செம்மல்: பூ வாடின நிலை.

 

யார் இவர்?

தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்; பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்; தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்.

விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர்.

பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துக்கள். அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.

 

பிஞ்சு வகை

தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள்.

பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு; பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு: பலாப்பிஞ்சு; கவ்வை: எள்பிஞ்சு; குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு; முட்டுக் குரும்பை: சிறு குரும்பை; இளநீர்: முற்றாத தேங்காய்; நுழாய்: இளம்பாக்கு; கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு.

 

குலை வகை

தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான (காய்களையோ கனிகளையோ) சொற்கள் :

கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை; குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை; தாறு: வாழைக் குலை; கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி.

 

கெட்டுப்போன காய்கனி வகை

கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்:

சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்; சிவியல்: சுருங்கிய பழம்; சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி; வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு; அளியல்: குளுகுளுத்த பழம்; அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்; சொண்டு: பதராய்ப் போன மிளகாய்.

கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்; தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்; அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்.

 

பழத்தோல் வகை

பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள்:

தொலி: மிக மெல்லியது; தோல்: திண்ணமானது; தோடு: வன்மையானது; ஓடு: மிக வன்மையானது; குடுக்கை: சுரையின் ஓடு; மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.

 

மணிவகை

தானியங்களுக்கு வழங்கும் சொற்கள் :

கூலம்: நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள்; பயறு: அவரை, உளுந்து முதலியவை; கடலை: வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை; விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து; முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து; கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து; தேங்காய்: தென்னையின் வித்து; முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.

 

இளம் பயிர் வகை

தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள் :

நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை; கன்று: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை; குருத்து: வாழையின் இளநிலை; பிள்ளை: தென்னையின் இளநிலை;


குட்டி: விளாவின் இளநிலை; மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை; பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.

இதுகாறுங் கூறியவற்றால் தமிழ், சொல் வளமுடையதென்றும் தமிழ்நாடு பொருள் வளமுடையதென்றும் தெள்ளிதின் விளங்கும்.

ஒரு மொழி, பொதுமக்களாலும் அதன் இலக்கியம், புல மக்களாலும் அமையப்பெறும். தமிழ்ப் பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவுடையர். எத்துணையோ ஆராய்ச்சி நடந்துவரும் இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்று கடன்கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும் இலையைக் குறிக்க Leaf என ஒரேசொல் உள்ளது. ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மைபற்றித் தாள், இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்தாரில்லை. இத்தகைய பாகுபாடு ஏனைய உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது முன்னர்க் காட்டப்பெற்றது.

தமிழ் நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில்வகைப்பட்டனவாகவுமிருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா,மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை. தமிழ்நாட்டுள்ளும் தென்னாட்டிலேயே அவை விளைகின்றன. பழங்காலத்தில் விளைந்த அளவு பொன்னும் மணியும் முத்தும் பவளமும் இன்று விளையாவிடினும் அருமையான கூலங்களும் சிறு கூலங்களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருவது கண்கூடு.

தெரியுமா?

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே.

பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்

ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.

நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர் என அறிக.

திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும்.

பாவாணர், தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரிதாள் வகை, காய்ந்த இலைவகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ்வகை, காய்வகை, கனி வகை, உள்ளீட்டு வகை, தாவரக் கழிவு வகை, விதைத்தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை, வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செறிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றின் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார்.

 

நூல் வெளி


மொழி ஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

 

அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின், தமிழின் புகழ்மணப் பதிவுகளை நுகர்வோமா!...

எத்திசையும் புகழ் மணக்க...

கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்

போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.

செய்தி - ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

 

கற்பவை கற்றபின்...

1. பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.

தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.

2. ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக.

எ.கா. சொல்லுதல் - பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல் ......

 

Tags : by Devaneyap pavanar | Chapter 1 | 10th Tamil தேவநேயப் பாவாணர் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 1 : Amudha oottru : Prose: Tamil sol valam by Devaneyap pavanar | Chapter 1 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : உரைநடை: தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று